37) தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் பிரதேசங்கள்




தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன்

போர்த்துகீசிய ஆதிக்கத்தில் இருந்த டையூ மற்றும் டாமன் இந்திய சுதந்திரத்திற்கு பின்பும் கி.பி.1961 வரை போர்ச்சுகல் பொறுப்பில் இருந்தது. பின்னர் இந்திய அரசு இராணுவ நடவடிக்கையின் மூலம் கோவா, டையூ, டாமன், தாத்ரா மற்றும் நகர் ஹவேலியை இந்தியாவுடன் இணைத்தது. பின்னர் டையூ மற்றும் டாமன் கோவாவுடன் இணைந்து யூனியன் பிரதேசமாக இருந்தது. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தனி யூனியன் பிரதேசமாக இருந்தது. கோவா தனி மாநிலமாக ஆன பின்னர் டையூ மற்றும் டாமன் தனி யூனியன் பிரதேசமாகவும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தனி யூனியன் பிரதேசமாகவும் இருந்தது. பின்னர் கி.பி.2020 ஜனவரி 26 அன்று தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பகுதிகளும் இணைந்து ஒரே யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது.

டையூ 21 கி.மீ நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது. தனி கடற்படை தளமும் துறைமுகத்தையும் கொண்டுள்ளது. டையூ என்பது சமஸ்கிருத வார்த்தையான "த்வீப்" என்பதிலிருந்து வந்தது. அதற்கு தீவு என்று பொருள். பகவான் கிருஷ்ணரால் கொல்லப்பட்ட அசுர வம்சத்து அரசன் ஜலந்தரன் ஆண்ட இடம் என்று கூறுகின்றனர். 

டாமனில் கப்பல்கட்டும் தளங்களும் மற்றும் கப்பல் துறைமுகங்களும் உள்ளன. கி.பி.1961 முதல் கி.பி.1987 வரை கோவாவுடன் டையூ மற்றும் டாமன் இணைந்து இருந்தது. கி.பி. 1987ல் கோவா தனி மாநிலமாக ஆனது. அப்போது டையூ மற்றும் டாமன் தனி யூனியன் பிரதேசமாக இருந்தது. டாமன் என்ற வார்த்தையான தமன் கங்கா என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கி.பி.1772ல் மராட்டிய கடற்படையால் போர்த்துகீசிய கப்பலான "சந்தனா" சேதப்படுத்தப்பட்டது. அதற்கு இழப்பீடாக மராட்டியர்கள் போர்த்துகீசியரிடம் கி.பி.1783ல் நாகர் ஹலேலியை ஒப்படைத்தனர். இரண்டு ஆண்டுகள் கழித்து கி.பி.1785ல் தாத்ராவை வாங்கி ஒரு போர்த்துகீசிய மாநிலமாக தாத்ரா & நாகர் ஹலேலியை கொண்டு வந்தனர். இந்த இரண்டும் முன்பு கோலி தலைவர்களால் ஆளப்பட்டு வந்தது. அவர்களை ஜவ்ஹர் மற்றும் ராம்கர் மன்னர்கள் தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றியிருந்தனர். அவர்களை தோற்கடித்து மராட்டியர்கள் அதை கைப்பற்றி வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து ஒன்று ஒப்பந்தத்தின் மூலமாகவும் இன்னொன்று விலைக்கும் வாங்கி தங்கள் மாநிலத்தை உருவாக்கினர். மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த யூனியன் பிரதேசம் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான 72 கிராமங்களை உள்ளடக்கி 491 சதுர கீ.மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவில் 53% காடுகளின் கீழ் உள்ளது. பறவைகள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாகவும் சுற்றுசூழலுக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. இதன் தலைநகராக சில்வாசா இருந்தது. உண்மையில் சில்வாசா ஒரு மறைக்கப்பட்ட சொர்க்கமாக உள்ளது. கி.பி.1885ல் போர்த்துகீசிய அரசு தலைநகரை சில்வாசாவுக்கு மாற்றியது. இது "பாசோ டி ஆர்கோஸ்" என்று திட்டமிட்டு நகராக உருவாக்கப்பட்டதாகும் சில்வாசா என்ற பெயரிலையே அழைக்கப்பட்டது. சில்வாசா என்ற பெயர் போர்த்துகீசிய வார்த்தையான சில்வா என்பதிலிருந்து வந்தது. அதற்கு மரம் என்று பொருள். மர சொர்க்கமாக இயற்கை அழகு நிறைந்த பகுதியாக இன்று ஸ்மார்ட் சிட்டியாக பரிணமித்தாலும் அதன் இயல்பை இழக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த யூனியன் பிரதேசமானது தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி என்ற இரு நகரங்களிலிருந்து பெயர் வந்தது.

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து