36) கோவா
கோவா (Goa) :
பழைய இந்து புராணங்களின் படி இந்த பகுதி கோவே, கோவாபுரி மற்றும் கோமண்ட் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. அரேபிய பூகோள ஆய்வாளர்கள் இந்த நகரை சிந்தாபூர் அல்லது சண்டாபூர் என்று அழைத்தனர். 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதை கைப்பற்றிய போர்த்துகீசியர்கள் இதை வெல்கா கோவா என்று அழைத்தனர். போர்த்துகீசிய காலனி ஆதிக்கத்தில் இருந்தது இந்திய சுதந்திரம் பெற்றும் இந்தியாவுடன் இணைக்க போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் மறுத்தனர். பல போராட்டங்கள் இராணுவ நடவடிக்கையின் மூலம் இந்த பகுதி கி.பி.1961ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஆனாலும் போர்த்துகல் சர்வதேச நீதிமன்றத்தை நாடியும் இந்தியாவிற்கு சாதகமாகவே நீதி கிடைத்தது.
பனாஜி (Panaji) : பனாஜி என்ற வார்த்தை பஞ்சனி மற்றும் காளி என்ற வார்த்தைகளில் இருந்து வந்தது. கி.பி.11ம் நூற்றாண்டில் கடம்ப வம்சத்து மன்னனான முதலாம் ஜெயகேசியின் கல்வெட்டில் பஞ்சனகனி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கன்னடத்தில் மேற்கு கடலின் அதிபதி என்று பொருள். இந்த பெயர் மருவி போர்த்துகீசியர்கள் காலத்தில் பஞ்சிம் என்று அழைக்கப்பட்டது தற்போது பனாஜி என்று அழைக்கப்படுகிறது என்று கூறுவர்.
கடற்கரையோர மலை உச்சிகளில் ஒன்றான "பஞ்சா" என்றழைக்கப்படும் ஷியா முஸ்லீம் ஆலயத்தின் பெயரால் வந்தது என்றும் கூறுவர்.
கோல்வா (Colva) : Colva என்பது Col + Vhal என்பதிலிருந்து வந்தது. ஆற்றங்கரையில் வசித்த கோல் இன் மக்களிடம் இருந்து இந்த பெயர் வந்தது.
பேட்டல்பட்டீம் (Betalbatim) : பேட்டல் என்ற அரக்க கடவுளின் இடம் என்ற பொருளில் இதற்கு இந்த பெயர் வந்தது. இந்த கிராமத்தில் கி.பி.12ம் நூற்றாண்டை சேர்ந்த தலை துண்டாகி காணப்பட்ட பேட்டல் கடவுளின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
அசாகோ (Assagao) : முன்பு அசா ரே கன்வ் என்று அழைக்கப்பட்டது. ஒருமுறை இளவரசர் ஒருவர் இந்த மலையின் சுற்றியிருந்த பகுதிகளில் இருண்ட இரவுகளில் வழி தெரியாமல் தொலைந்து போனார். சேவலின் காலை கூவல் கேட்டதும் விடிந்து விட்டது இனி வழி கிடைத்துவிடும் என்ற நிம்மதியில் அசா ரீ கன்வ் என்று கூற அதுவே மருவி அசாகோ என்றானது.
சால்ஷெட் (Salcete) : பரசுராம புராணத்தின்படி பரசுராமர் அம்பு எய்து கடலிருந்து நிலத்தை மீட்டெடுத்தார். அதில் 96 கவுட் சரஸ்வத் பிராமண குடும்பங்களை தேர்ந்தெடுத்தார். 66 குடும்பங்களை சால்ஷெட்டிலும் (சமஸ்கிருதத்தில் சஷாஸ்டி என்றால் 66பேர் என்று அர்த்தம்) மீதி 30 குடும்பங்களை திஸ்வாடியிலும் (சமஸ்கிருதத்தில் டீஸ் என்றால் 30 பேர் என்று அர்த்தம்) குடியமர்த்தினார்.
சந்தோர் (Chandor) : இந்த பெயர் சந்திரேஷ்வரிலிருந்து வந்தது. அதாவது சந்திரனின் இறைவன் என்பதாகும். சிவனின் தலையில் பிறை இருப்பதால் சந்திரேஷ்வர் என்று கோயிலுக்கு பெயர் வந்தது. அதன் மருவிய வடிவம் தான் சந்தோர் என்பதாகும்
பேடூல் (Betul) : இதன் பழைய பெயர் பட்னூர் என்பதாகும். இந்த ஊருக்கு அருகில் இருந்த படூல் பஜார் என்ற சிறிய கிராமத்தின் பெயரிலிருந்து பேடூல் என்ற பெயர் வந்தது
மபூசா (Mapusa) : கொங்கனி மொழியில் மாபு என்பதற்கு அளவை என்றும் சா என்பதற்கு நிரப்பு என்றும் பொருளில் தற்போது வரை விவசாய பொருட்களின் சந்தையாக இருப்பதன் காரணமாக மாபுசா என்ற பெயர் வந்தாக கூறுவர்
ரிவோனா (Rivona) : ரிவோனாவின் பழைய பெயர் ரிஷிவன் என்பதாகும். இதற்கு துறவி மற்றும் காடு என்று பொருள்.
லூடோலிம் (Loutolim) : இந்த பெயர் லோவோடோல்லெம் என்பதிலிருந்து வந்தது. லோவோ என்பது ஒரு வகை புல் என்றும் டோலெம் என்பது குளம் என்பதிலிருந்து பெயர் வந்தது. குளக்கரையை சுற்றி ஏராளமான புற்கள் வளர்ந்ததால் இந்த கிராமம் லொட்லி என்று உள்ளூர் மொழியில் குறிப்பிடப்படுகிறது.
சியோலிம் (Siolim) : சியோலிம் என்பது இரு வார்த்தையில் இருந்து வந்தது. Xinv என்றால் சிங்கம் என்றும் Halli ஹல்லி என்றால் கிராமம் என்பதிலிருந்து வந்தது. சின்வ் என்பது ஷியோ என்று உச்சரிக்கப்படுகிறது. முன்பு இங்கு ஏராளமான சிங்கங்கள் இருந்தாதல் இந்த பெயர் வந்ததாக கூறுவர்.
ஆக்சல் (Oxel) : ஆக்சல் என்பதற்கு "சித்திரமான கிராமம்" என்று பொருள்.
வாகலி (Vagali) : வாக் என்றால் புலி என்றும் ஹல்லி என்பதற்கு கிராமம் என்ற பொருளில் இருந்து இங்கு முன்பு புலிகள் நடமாட்டம் இருந்த காரணத்தால் புலிகிராமம் என்ற பொருளில் வாகலி என்ற பெயர் வந்தது
போரிம் (Borim) : போரிம் என்ற சொல் போரா என்பதிலிருந்து வந்தது. ஒரு காலத்தில் இந்திய பெர்ரி (போர்) மரங்கள் நிறைந்து காணப்பட்ட காரணத்தால் இந்த பெயர் வந்தது. சமஸ்கிருதத்தில் பத்ரி என்பது போர் மரங்களை குறிக்கும் என்பதாவ் பத்ரிகிராம் என்றும் கூறுவர்.
போய்க்வினிம் (Poinguinim) : கிராமத்தின் பெயர் போய் என்பதாகும். ஒரு நதிஅல்லதுகடலின் தாழ்வான பகுதியில் இருந்து குறுகிய நுழைவாயிலில் இருந்து நீர் வெளிவரும். அதற்கு குயிம் அல்லது க்யின் என்று பெயர். அதற்கு தாழ்வான பகுதி என்று பொருள்.
சங்கும் (Sanguem) : மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள சந்திரேஸ்வர் கோயிலுக்கு சங்கேமேஸ்வர் என்று பெயர். அதிலிருந்து இந்த கிராமத்திற்கு பெயர் வந்தது
அல்டோனா (Aldona) : இந்த கிராமத்தில் பயிரிடப்பட்ட மஞ்சள் (ஹால்டி) என்பதிலிருந்து ஹல்டோனா என்ற பெயர் வந்தது மருவி அல்டோனா என்று கூறுவர். சிலர் கலப்பை என்பதற்கு ஹால் என்று பொருள் என்றும் முன்பு விவசாய கிராமமாக இருந்தாதல் ஹல்டோனா என்ற பெயர் மருவி அல்டோனா என்றானது என்றும் கூறுகின்றனர்
கமுர்லிம் (camurlim) : ஒருகாலத்தில் இந்த கிராமம் பொற்கொல்லர்களால் நிறைந்திருந்த காரணத்தால் கமராஹல்லி என்று அழைக்கப்பட்டது. தற்போது அப்படி யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கமராஹல்லி மருவி கமுர்லிம் என்றானது. இது அம்போரா என்றும் அழைக்கப்படும்
சாலிகாவ் (Saligao) : சாலி என்பதற்கு மரக்காடுகள் என்றும் காவ் என்பதற்கு கிராமம் என்றும் பொருள். அதன்படி மரக்காடுகள் நிறைந்த கிராமம் என்று பொருள்
கேவலோசிம் (Cavelossim) : இந்த கிராமத்தில் பெரும்பான்மையாக பர்கர்கள் இனத்தவர்கள் இருந்தால் சுதர்பட் (சூத்திரர்களின் கிராமம் " என்று அழைக்கப்பட்டது
அசோல்னா (Assolna) : நாட்டுபுற கதைகள் அசோல்னாவின் பெயரை "ஓஸ்லெம் -நா" என்று கூறுகின்றன. அதற்கு முக்கியமான எதுவும் இல்லை என்று அர்த்தம்.
ஷிரோடா (Shiroda) : ஷிரோடா என்ற பெயர் ஷிவ்நாத் என்பதிலிருந்து வந்தது. இதற்கு கடவுளிடமிருந்து வரையப்பட்டது என்று பொருள்
ரச்சோல் (Rachol) : கொங்கனியில் இது ரைட்டூர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு தலைநகரம் அல்லது துறைமுகம் என்று பொருள்
அகோடா (Agonda) : போர்த்துகீசிய அகுவாடா என்ற சொல்லில் இருந்து இந்த பெயர் வந்தது. இது மாண்டோவி ஆற்றின் அருகே மலை உச்சியில் அமைந்திருக்கிறது. இந்த சொல்லுக்கு மலை உச்சியிலுள்ள தண்ணீர் என்று பொருள்
கர்டோரிம் (Kartorium) : Kudd+Tari அல்லது Kudd+Toddi என்பதிலிருந்து கர்டோரிம் என்ற பெயர் வந்தது. அதற்கு வயல்கள் இருப்பதால் தானியங்களை சேமித்து வைக்கும் தனி கட்டிடங்கள் அமைக்கப்பட்டு இருந்ததால் இந்த பெயர் வந்தது. இந்த பகுதி "சல்ஷெட்டின் தானிய களஞ்சியம்" என்று அழைக்கப்படுகிறது.
ஓலெளலிம் (Olaulim) : கொங்கனி மொழியில் வால் என்ற சொல்லிருந்து வெளலே என்ற பெயர் வந்தது. இதற்கு பள்ளத்தாக்கு என்று பொருள். வெளலே என்பதிலிருந்து ஓலெளலிம் என்ற பெயர் வந்தது.
கன்கோலிம் (Cuncolim) : இது புண்ணியபூமி என்று அழைக்கபடுகிறது. கன்கோலிம் என்பது Kunk மற்றும் Halli என்ற இரு சொற்களில் இருந்து வந்தது. Kunk என்பது குங்குமம். பெண்கள் சிவப்பு நிற குங்குமத்தை நல்ல செய்திகள் வருகையை குறிக்கும் விதமாகவும் அணிவார்கள். ஹல்லி என்பது கன்னடத்தில் கிராமம் என்று பொருளில் Kunkhalli என்ற பெயர் வந்தது என்று கூறுகின்றனர். சிலர் கன்கோலிம் என்ற சொல்லுக்கு குங்குமப்பூ கிராமம் (Kesar halli) என்பது வெற்றியின் அடையாளமாகும். அது மருவி கன்கோலிம் என்றானது என்றும் கூறுவர்.
பிச்சோலிம் (pitcholim) : இது உள்ளூரில் திவ்ச்சலி என்று அழைக்கப்படுகிறது. இது இங்கு குடியமர்பந்த கன்சார் கைவினை கலைஞர்களின் படைப்புகளான செம்பு மற்றும் வெண்கல விளக்குகளால் இந்த பெயரை பெற்றது.
வாஸ்கோ (Vasco) : இந்தியாவிற்கு ஜரோப்பாவிலிருந்து கடல்வழியை கண்டுபிடித்த போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவின் பெயரிலிருந்து வாஸ்கோ என்ற பெயரை பெற்றது
பெனோலிம் (Benaulim) : போர்த்துகீசியர்கள் வருகைக்கு முன்னர் இந்த கிராமம் பனஹல்லி (அல்லது) பனவாலி என்று அழைக்கப்பட்டது. இதற்கு அம்பு கிராமம் என்று பொருள். பான் என்பது சமஸ்கிருத வார்த்தையான அம்பு என்றும் ஹல்லி என்பது கன்னடத்தில் கிராமம் என்றும் பொருள். ஸகந்த புராணத்தில் பரசுராமர் மழை தெய்வமான வருணனை கடலில் அம்பெய்து செய்து பின்வாங்க சொன்னார். அந்த அம்பு விழந்த இடம் தான் பனஹல்லி என்று கூறப்படுகிறது
கலங்கோட் (Calangute) : பழங்காலத்தில் மீனவர்கள் காளியை வழிபட்டதால் காலங்குட், கொலுங்குட் என்று அழைக்கப்பட்டது என்று கூறுவர். கல்யாங்குட் என்ற சொல்லில் இருந்து கலங்கோட் என்ற வார்த்தை வந்திருக்கலாம் என்றும் கூறுவர். கல்யாங்குட் என்பதற்கு "கலை கிராமம்" என்று பொருள். சிலர் கொன்வல்லோ கோட் என்ற வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம் என்றும் கூறுவர். அதற்கு வலுவான பித் கொண்ட தேங்காய் என்று பொருள். போர்த்துகீசியர் வருகைக்கு பின்னர் இது கலங்கோட் என்றாகியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
அரம்போல் (Arambol) : இது முதலில் ஹர்ஹரா அல்லது ஹர்மாலா என்று அழைக்கப்பட்டது. பாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்கு தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஹரி ஹரி என்று விஷ்ணுவை வழிபட்டதால் ஹர்ஹரா என்ற பெயர் வந்ததாகவும் சிலர் ஹரி என்றும் மால் என்றும் வழிபட்டதாகவும் அதற்கு "கடவுளின் நிலம்" என்றும் பொருள் என்றும் சிலர் கருதுகின்றனர். ஹர்மாலா என்ற சொல் ஹரம்போல் என்றாகி பின்னர் அரம்போல் என்றாகியது.
கார்மோனா (Karmona) : கி.பி.13ம் நூற்றாண்டில் இந்த கிராமம் கர்பன் அல்லது கராபன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு உப்புக்காடு என்று பொருள். சால் (உப்பு) ஆறு இந்த கிராமம் வழியாக செல்வதால் இப்த இந்த பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ராயா (Raia) : இந்த கிராமத்தில் தனது தலைநகரை நிறுவிய கடம்ப வம்சத்து மன்னரான அக்னி முக ராய் என்பவரின் பெயரிலிருந்து ராயா என்று இந்த கிராமம் பெயரை பெற்றது.
கர்மல் (Carmal) : கர்மல் என்ற சொல் கர்மல் காட் என்பதிலிருந்து வந்தது. அதற்கு கருப்பு மலை என்று பொருள்
வெர்னா (Verna) : வெர்னா என்பது சமஸ்கிருத சொல்லான வரேண்யா அல்லது வர்ணபூர் (கடல் கடவுளின் கிராமம்) என்பதன் சிதைவு என்று கூறப்படுகிறது
லோட்லி (Lotli) : கடலில் மூழ்கிய குஜராத்தின் லோதல் பகுதியில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் ஜூவாரி ஆற்றின் கரையில் உள்ள கிராமத்திற்கு லோட்லி என்ற பெயரை சூட்டியிருக்கலாம் என்று நம்புகின்றனர்
மர்கோவா (Margao) : இது முன்பு மஹர்காவ் என்று அழைக்கப்பட்டது. அதாவது மகர்களின் கிராமம்-நெசவாளர்களின் பெரிய சமூகம். சிலர் சமஸ்கிருத மத்தகிராமத்தில் இருந்து பெறப்பட்டது. இப்போது மர்கோவாவின் புறநகர் பகுதியான மத்ஸ்யேந்திரநாத் மற்றும் கோரக்நாத் சன்னதிகள் காரணமாக "மடங்களின் கிராமம்" என்று பொருள் என்றும் கூறுவர்.
மர்கோவா என்ற சொல் Mharugarv (பேய்களின் கிராமம்) அல்லது Maravile (அற்புதமான கிராமம்) என்ற வார்த்தைகளிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.
சிஞ்சினிம் (Chinchinim) :. இது இங்குள்ள நான்கு கோயில்களுள் ஒன்றான சிஞ்சிநாத் கோயிலின் பெயரிலிருந்து வந்தது. இந்த கோயில்களை கி.பி.1567ல் போர்த்துகீசியர்கள் அழித்து விட்டதாக கூறப்படுகிறது. சிலர் காலப்போக்கில் அதுவாகவே மறைந்து விட்டது என்றும் கூறுவர்
சங்கோலே (Sancoale) : இந்த சொல் சமஸ்கிருதச் சொல்ஷான ஷங்கவலி என்பதிலிருந்து பெறப்பட்டது. இதற்கு ஷாங்க் (சங்கு செல்கள்) நிறைந்த இடம் என்று பொருள். இந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த சங்கசுர் என்ற அரக்கனை கிருஷ்ணர் வதம் செய்த இடம் என்பதால் ஷாங்க் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்
சால்வடார் (Salvadar) : இந்த சொல்லுக்கு உலகின் மீட்பர் என்று பொருள். இந்த இடத்தில் உள்ள சால்வடார் டூ முண்டோ தேவாலயம் 450 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது
வர்கா (Vargha) : இந்த பெயர் கிருஷ்ணரின் இருப்பிடமான துவாரகா என்பதிலிருந்து வந்தாதகவும் சிலர் படகு என்பதற்கான பார்கா என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்
பிர்நா (Pirna) : இங்குள்ள ஒரு மசூதியில் ஒரு பிர் (புனிதர்) இருந்ததாகவும் அவரை தேடி வந்த படையெடுப்பாள்ரகள் அவர் இல்லை என்பதை பிர் -நா (புனிதர் இங்கில்லை) என்று குறிப்பிட்டதிலிருந்து பிர்நா என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது
க்யூலா (Queula) : முன்பு சாந்ததுர்கா கோயில் இருந்த kelshi என்பதிலிருந்து குவாலே என்ற சொல் வந்தது. மறு கருத்தாக கிராமத்தின் பழைய பெயராக கைவல்யபுரா என்றும் முனிவர் இங்கு தவம் இயற்றினார் என்றும் பண்டைய புராண நூல்களில் குறிப்பிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
கஞ்செம் (Ganjem) : இந்த பெயர் கஞ்சமுஹானா என்பதிலிருந்து வந்தது. அதாவது கடலுடன் ஒரு நதி சங்கமிக்கும் இடத்தில் உள்ள வர்த்தக மையம் என்று பொருள். பாரசீகத்தில் கன்-ஜ்-ஐ-ஆம் என்பதற்கு உலகின் தானிய களஞ்சியம் என்று பொருள்.
கோடர் (Codar) : கோடர் என்ற பெயர் கோராட் என்பதிலிருந்து வந்தது என்று கூறுகின்றனர். அதற்கு காட்டுபுல் என்று பெயர்.
பார்டெஸ் (Bardez) : வட இந்தியாவில் மகதம் (இன்றைய பீகார்) வழியாக கொங்கன் பகுதியில் குடியமர்ந்த சரஸ்வத் பிராமணருக்கு இந்த பெயர் வந்தது. பார் என்பது பாரா (பன்னிரண்டு) டெஸ் (தேஷ்) என்று பொருள். அதாவது 12 தேசங்களில் என்றும் குறிக்கலாம் அல்லது பன்னிரண்டு பிராமணர் பிரிவுகள் என்றும் குறிக்கலாம்.

Comments
Post a Comment