33) மணிப்பூர்

மணிப்பூர்‌ (Manipur) : இந்த நகரம் சமஸ்கிருதத்தில் மாணிபுரா (நகைகளின் நகரம்) என்றும் மணலூரா என்றும் அழைக்கப்படுகிறது. மாணி என்ற சொல்லுக்கு நகை என்றும் புரே என்ற சொல்லுக்கு தங்குமிடம்/நிலம் என்றும் பொருள். இதன்படி மணிப்பூர் என்பதற்கு "நகைகள் நிறைந்த நிலம்" என்று மொழிபெயர்க்கலாம். மணிப்பூர் பழைய நூல்களில் "கங்லிபக் " என்றும் "மிடீலிபக்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஒப்பந்தத்தில் "மெக்லி " என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றாகும். வடக்கே நாகாலாந்து தெற்கில் மிசோராம் மற்றும் மேற்கில் அசாம் என்று இந்திய மாநிலங்களை எல்லைகளாக கொண்டுள்ளது. இது தவிர கிழக்கே மியான்மரையும் எல்லையாக கொண்டுள்ளது. மாநிலத்தில் பரவலாக பேசப்படும் மொழியாக மெய்டே மொழி (இது மணிப்பூரி மொழி என்று கூறப்படுகிறது) உள்ளது. இங்கு இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் சம அளவில் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு மெய்டேய் மக்கள் 53% பல்வேறு நாகா மக்கள் 24% மற்றும் குகி/சோ பழங்குடியினர் 16% பேரும் மற்றவர்கள் மீதம் உள்ள 7% பேரும் உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மணிப்பூர் அவர்களின் சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்தது. கி.பி.1930களின் பிற்பகுதியில் பர்மாவுடன் இணைந்திருப்பதை விட இந்தியாவுடன் இணைந்து இருப்பதையே விரும்பியதால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடன் கி.பி.1939ல் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தாலும் 2ம் உலகப்போர் காரணமாக பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது. பின்னர் கி.பி.1947 ஆகஸ்ட் 11ல் மன்னர் புத்தசந்திரா இந்திய யூனியனில் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பின்னர் கி.பி.1949ல் ராஜ்ஜியத்தை இந்தியாவுடன் இணைத்தார். மணிப்பூர் இந்தியாவின் சி பகுதி மாநிலமாக மாறியது. கி.பி.1956ல் யூனியன் பிரதேசமாக மாறியது. பின்னர் கி.மி.1971ல் இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றாக மாறியது . இந்த இணைப்பு மணிப்பூரில் உள்ள பல்வேறு குழுக்களால் விமர்சனத்திற்குள்ளாகி தொடர்ந்து 50 ஆண்டுகாலமாக ஆயுதபுரட்சி தொடர்ந்து நடந்து வருகிறது. கி.பி.1964ல் ஜக்கிய தேசிய விடுதலை முன்னணி இந்தியாவிலிருந்து மணிப்பூர் பிரித்து தனி நாடாக்கும் முயற்சியில் ஆயுதத்தை கையில் எடுத்தது. இதை தொடர்ந்து மேலும் பல குழுக்கள் உருவாகின. கி.பி.1977ல் காங்கிலீபாக் மக்கள் புரட்சி கூட்டணி உருவாகியது. இந்த குழுக்கள் எல்லாம் பண தேவைக்கு நாட்டுமையாக்கப்பட்ட வங்கிகளை கொள்ளையடித்து தங்கள் தேவையை சமாளித்தனர். கி.பி.1989-2004 வரையிலான காலப்பகுதியில் மணிப்பூரில் குழப்பமான சூழ்நிலையே நிலவியது. கி.பி.2023ல் குக்கி மக்களுக்கும் மெய்டி மக்களுக்கும் இடையேயான மோதல் பல தீவைப்புகள், கொலைகள், பலாத்காரங்களுடன் மாநிலத்தின் அமைதியை கெடுத்தன. 

மகாபாரதத்தில் அர்ச்சுனன் தேச யாத்திரையின் போது உலூபியை திருமணம் செய்து விட்டு பின்னர் மணிப்பூர் இராச்சியத்திற்கு வந்தார். மன்னர் சித்ரவாஹனனின் மகளான சித்ராங்கதா மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு பிறந்த மகனான பப்ருவாஹனா பிறந்தபின் இராச்சியத்தை விட்டு வெளியேறினார். அதனால் தான் மணிப்பூர் மக்கள் அர்ச்சுனன் வழிதோன்றல்கள் என்று கூறுகின்றனர். ஆனாலும் வரலாற்று ஆய்வாளர்கள் அர்ச்சுனனின் யாத்திரை திட்டத்தில் மணிப்பூர் இல்லையென்றும் இன்றைய ஒரிசா மாநிலத்திலுள்ள மணிப்புரா நகருக்கு தான் சென்றதாக குறிப்பிடுகின்றனர்.

இம்பால் (Imphal) : இம்பால் என்ற சொல் இரண்டு வார்த்தைகளின் கலவை. இம் என்பது யம் என்று பழைய மணிப்பூரி மொழி உச்சரிப்பில் வரும். Yum என்பதற்கு வீடு என்றும் phal என்பதற்கு அழகான அல்லது நிறைய என்று பொருளில் இம்பால் என்பதற்கு அழகான வீடு என்று பொருள் 

உக்ரூல் (Ukhrul) : இந்த நகரம் ஹன்பூன் என்றும் அழைக்கப்படுகிறது. இது தங்குல் நாகர்களின் வீடு என்று அழைக்கப்படுகிறது.

தங்குல் (Tangkhul) : இந்த பகுதியில் வாழும் தங்குல் பழங்குடி இன மக்களின் பெயரிலிருந்து பெயர் வந்தது.

ஜெஸ்ஸாமி (Jessami) : இந்த கிராமத்திற்கு 2ம் உலக போருக்கு பின்னர் நாகாலாந்திலிருந்து வந்த "கெசா பழங்குடியினரின் வாழ்விடத்தின் எல்லை" என்று பொருள்

மாரூ (Maaru) : இந்த பெயர் மரியோரம் என்ற சொல்லில் இருந்து வந்தது. மரியோரம் என்பதற்கு விலங்குகள் மற்றும் பூச்சிகளால் தீண்டப்படாத சுவையான பழங்களின் நிலம் என்று பொருள். பின்னர் இந்த பெயர் மருவி மாரூ என்றானது 

தெளபால் (Thoubal) : தெளபால் என்ற சொல் அத்தூபா என்ற சொல்லில் இருந்து வந்தது. இதற்கு தைரியமான மக்கள் என்று பொருள் 

கச்சிங் (Kakching) : கச்சிங் என்ற சொல்லுக்கு பெரும்பான்மையான "மெய்டீஸ் மக்களால் அடிபணியவைக்கப்பட்ட/ அவர்களுடன் இரண்டற கலந்த மக்கள்" என்று பொருள்படும். 

வாய்காம் (Waikhom) : மணிப்பூரின் மெய்டீ மக்களின் ஒரு பிரிவினரின் பெயர் இது. அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடத்திற்கும் அதே பெயர் வந்தது 

சுராசந்த்பூர் (Churachandpur) : முன்பு மணிப்பூரின் மகாராஜாவாக இருந்த சர் சுராசந்த் சிங் என்பவரின் பெயரை தாங்கி சுராசந்தபூர் என்ற பெயர் வந்தது 

மெய்ராங் (Moirang) : இந்த பகுதியில் வாழும் மெய்ராங் பழங்குடி இன மக்களின் பெயரிலிருந்து கிராமத்திற்கு பெயர் வந்தது. 

பிஷ்ணுபூர் (Bishnupur) : இந்த நகரின் அமைந்துள்ள பழமையான விஷ்ணு கோயிலின் பெயரால் நகருக்கு பிஷ்ணுபூர் என்ற பெயர் வந்தது 

நம்புல் (Nambul) : இந்த கிராமத்தின் வழியே ஓடும் நம்புல் நதியின் பெயரிலிருந்து நம்புல் என்ற பெயர் வந்தது 

ஜிரிபாம் (Jiribam) : ஜிரி நதி பாயும் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிராமம் என்பதால் அந்த பெயரை தாங்கி ஜிரிபாம் என்ற பெயர் வந்தது 

மாயாங் (Mayang) : மாயாங் என்ற சொல்லுக்கு மணிப்பூரி மக்களால் மணிப்பூரை தாயகமாக இல்லாத இந்துஸ்தானி மற்றும் பெங்காலி மக்களை குறிக்கும் வார்த்தை. இங்கு மணிப்பூரை தாயகமாக கொண்டிராத மக்கள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தால் இந்த பெயர் வந்திருக்கலாம் 

மோரே (Moreh) : மணிப்பூரின் மலையின மக்களின் கூற்றுப்படி இந்த கிராமத்திற்கு அசல் பெயர் மொல்லென்பாய் என்பதாகும். ஆனால் மோலன் என்பது அதன் சுருக்கமான வடிவமாகும். பிரிட்டிஷார் இதை மோரே என்று குறிப்பிட அவ்வாறே பெயர் மாற்றம் பெற்றது. மோரே என்பதற்கு தெய்வ வாக்கு என்று பொருள் 

வாஞ்சிங் (Wangjing) : இங்கு ஓடும் வாஞ்சிங் ஆற்றின் பெயரால் கிராமத்திற்கும் வாஞ்சிங் என்ற பெயர் நிலைத்தது 

ஹைரோக் (Heirok) : இங்கு ஓடும் ஹைரோக் நதியின் பெயரை தாங்கி கிராமத்திற்கும் அதே பெயர் வந்தது 

யாரிபோக் (Yairipok) : வெள்ளத்திலிருந்து தம் ஊர் மக்களை காக்க தன்னுயிரை தியாகம் செய்த யாரிபோக் தம்பால்னு என்ற பெண்ணின் பெயரை தாங்கி கிராமத்திற்கு யாரிபோக் என்ற பெயர் வந்தது 

லைலாங் (Lilong) : லைலாங் என்பதற்கு சகோதரத்துடன் வாழும் மக்களை கொண்டு எதிர் எதிரே கதவுகளுடன் நீளமான நேரான சாலைகளையும் கொண்ட கிராமம் என்று பொருள். அதற்கு ஏற்ப வீடுகளும் அமைந்திருப்பதால் இந்த பெயர் வந்தது 

ஆண்ட்ரோ (Andro) : ஆண்ட்ரோ என்ற சொல் ஹண்ட்ரோ என்பதிலிருந்து உருவானது. இதற்கு சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் அதே ஊருக்கு குடியமர்ந்த "திரும்பிய மக்களின் கிராமம் " என்று பொருள்.

கும்பி (Kumbi) : இதற்கு வெள்ளை பருத்தி மரத்தில் இருந்து பெறப்பட்ட சில்க் துணி என்று பொருள். இங்கு சில்க் துணிகள் உற்பத்தி செய்யப்படுவதால் இந்த பெயர் வந்திருக்கலாம் 

ஓய்னாம் (Oinam) : ஓய்னம் என்ற சொல்லுக்கு களிமண் மணமுடைய மக்கள் என்று நேரிடையாக பொருள் கூறினாலும் இங்குள்ள மக்கள் மண்பாண்டங்கள் செய்வதை தொழிலாக கொண்டவர்கள் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

தெங்னெளபால் (Thengnoupal) : தென் என்பதற்கு கற்றாழை என்று பொருள். தெங்னெள என்பதற்கு மென்மையான கற்றாழை என்றும் பால் என்பதற்கு வேலி என்றும் பொருள். கி.பி. 16ம் நூற்றாண்டில் ஆவா லான் என்று அழைக்கப்பட்டது. மணிப்பூர் -பர்மிய போரின் போது கிராமத்தை சுற்றி கற்றாழையால் வேலி அமைக்கப்பட்டதால் இந்த பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது 

ஹியாங்ஸூ (Hiangzou) : ஹியாங்ஸூ என்ற பெயர் சிங்ங்காட் பெஹியாங் பகுதியில் அமைந்துள்ள ஹியாங்டாம் என்ற மற்றொரு கிராமத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது. ஹியாங்டாம் கிராமத்தின் தலைவரின் மனைவியான தோங்ஹோய்ஹிம் இந்த கிராமத்திற்கு ஹியாங்ஸூ என்று பெயரிட்டார் 

லாம் லாய் (Lam lai) : மெய்தி இன் மக்கள் வணங்கும் கிராம் தெய்வத்தின் பெயர் லாம் லாய் என்பதாகும். அதுவே கிராமத்திற்கும் பெயராக மாறியது 

செக்மாய் (Sekmai) : முன்பு இந்த கிராமம் செங்கமாய் என்று அழைக்கப்பட்டு மருவி செக்மாய் என்று தற்போது அழைக்கப்படுகிறது. செக்மாய் என்பதற்கு வடிகட்டிய நீர் என்று பொருள். மாநிலத்தில் பல பகுதிகளில் மக்கள் அரிசியிலருந்து வடிகட்டி பீர் தயாரித்தாலும் செக்மாய் கிராமம் தான் அதில் புகழ்பெற்றது.

நோனி (Noney) : இந்த இடத்தின் பெயர் நோனி என்று அழைக்கப்பட்டாலும் உள்ளூர் மக்கள் இதை லூங்மாய் என்றே அழைக்கின்றனர். லாங்மாய் என்பது நிலத்தின் அனைத்து பகுதிகளுக்குமான கூட்டுபெயர். இங்கு அனைத்து நிலத்தின் வகைகளும் அமைந்துள்ளதால் இந்த பெயர் வந்திருக்கலாம். இந்த கிராமம் ரோங்மாய் நாகாக்கள் நிரம்பிய கிராமம். 

திபைமுக் (thibaimukh) : இதன் பூர்வீக பெயர் ரூங்லேவைசாவோ என்பதாகும். திபை என்பது திவாய் நதியின் சிதைந்த சொல் என்றும் வங்காள மொழியில் முக் என்பதற்கு வாய் என்றும் பொருள். அதன்படி துவாய் நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளதால் இந்த பெயர் வந்தது 

கங்காபோக் (Khangabok) : இது காங்கரா மரத்தின் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. காங்க்ரா மரங்கள் அடர்ந்து காணப்பட்ட பகுதி காங்ராபோக்பி என்று அழைக்கப்பட்டது. இதன் தற்போதைய பெயர் தான் கங்காபோக் என்பதாகும் 

சக்பிகரோங் (chakpikarong) : இந்த கிராமம் சக்பி ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ளதால் சக்பிகரோங் என்ற பெயர் வந்தது. 

லாய் (Laii) : இது காசிபீமா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் ஏராளமாக வளரும் நாட்வீட் என்ற தாவரத்தில் இருந்து வஃபிமை என்ற வார்த்தை உருவானது. வா என்பது தாவரத்தின் பெயர், ஃபை என்பது இடம் என்றும் மாய் என்றால் மக்கள் என்றும் பொருள். அதாவது வாவு நிலத்தை சேர்ந்தவர்கள் என்று பொருள். காசிபெமா என்ற பெயருக்கு வாவு நிலத்தை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம். மணிப்பூரி மொழியில் லாய் என்பதற்கு கடவுள் என்று பொருள். 

கலாபஹார் (kalapahar) : ஆங்கிலேயர்கள் இந்த இடத்தின் அடர்ந்த காடுகளை பார்த்து காலா பஹாட் (கருங்காடு) என்று அழைத்தனர். பின்னர் அதுவே கலாபஹார் என்று மாற்றம் பெற்றது.
 

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து