32) அருணாசல பிரதேசம்
அருணாச்சல பிரதேசம் (Arunachal pradesh)
அருணாச்சல பிரதேசம் என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் "விடியற்காலையில் ஒளிரும் மலைகளின் நிலம்" என்று பொருள். இந்தியாவில் காட்டுமிராண்டிதனமான மாநிலம் என்று மக்களால் தவறாக மதிப்பிடப்பட்ட மாநிலமாகவும் குறைவாக அறியப்பட்ட மாநிலமாகவும் உள்ளது. அஸ்ஸாம் சமவெளியில் இருந்து அடர்த்தியான காடுகளையும் மலை ஏறுவதற்கு சாத்தியமில்லாத செங்குத்தான மலைகளையும் அதன் திபெத்திய எல்லையாக பனி மூடிய சிகரங்களாகவும் அசாத்திய இயற்கையாக இந்த மாநிலம் அமைந்துள்ளது.
இந்தியா கி.பி.1987 பிப்ரவரி 20ல் தனது மாநிலங்களுள் ஒன்றாக அறிவித்தது. மேற்கில் பூட்டான் கிழக்கில் மியான்மர் (பர்மா) மற்றும் மக்மோகன் கோட்டில் வடக்கே சீனாவால் ஆக்ரமிக்கப்பட்ட திபெத்தின் பிராந்தியத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது. சீனாவால் இது திபெத்தின் ஒரு பகுதி என்றும் தனது நாட்டிற்குரிய பகுதி என்றும் சர்ச்சைகளுடன் உள்ள மாநிலம் என்றாலும் சர்வதேசம் அதை அங்கீகரிக்கவில்லை. கி.பி.1962 இந்தோ-சீனா போரின் போது சீனா சில பகுதிகளை ஆக்ரமித்தாலும் பின்னர் அந்த பகுதியிலிருந்து படைகளை திரும்ப பெற்றது. பண்டைய திபெத்திய உரையில் கிழக்கு அருணாசல பிரதேசம் மற்றும் திபெத்தின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் லோபா மக்கள் எனவும் அந்த இடம் லோயு பிரதேசம் எனவும் மேற்கு அருணாசல பிரதேசம் மற்றும் திபெத்தின் கமெங் மாவட்டம் மோன்யுல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சீனா அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று இன்றுவரை அழிச்சாட்டியம் செய்து வருகிறது. இது இந்தியாவின் குறைந்த மக்கட்தொகை கொண்ட மாநிலங்களுள் ஒன்று. இங்கு சுமார் 26 பழங்குடி இன மக்களும் மற்றும் 100க்கு மேற்பட்ட துணை பழங்குடி பிரிவினரும் வாழ்கின்றனர். லோயு பிரதேசம் கி.மு.500-கி.பி.600 வரை மோன்பா இராச்சியத்தின் கீழ் செழிப்பாக இருந்தது. பின்னர் துபோ ராச்சியம் என்ற திபெத்திய ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. பின்னர் கி.பி.1642ல் திபெத்தில் அரசியல் மேலாதிக்கத்தை அடைந்த 5வது தலாய் லாமா கட்டுப்பாட்டில் இருந்த அருணாசல பிரதேசத்திற்கும் வரி விதிக்கப்பட்டு திபெத்தின் லாசாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. மோன்யுல் பிரதேசம் அஸ்ஸாமின் சுட்டியா அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் கி.பி.1912-13ல் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் வடகிழக்கு எல்லை பகுதிகளை நிறுவியது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லைகோடாக மக்மோஹன் எல்லைக்கோடு பிறந்தது. ஆனாலும் அது 25 ஆண்டுகளாக இருதரப்பிலும் ஏற்றுக்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டு வந்தது. பின்னர் கி.பி.1938ல் சிம்லா ஓப்பந்தத்தின் மூலம் மக்மோஹன் கோட்டை இருதரப்பும் அங்கீகரித்தது. கி.பி.1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவுடன் இணைந்தது. கி.பி.1954ல் வடகிழக்கு எல்லை ஏஜென்சியாக (NEFA) அறிவிக்கப்பட்டது. கி.பி.1972ல் அருணாசல பிரதேசம் என்று பெயர் மாற்றப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் கி.பி.1987ல் தனி மாநிலமாக ஆனது.
ஆலோ (Aalo) : முன்பு இந்த நகரம் ஆலோங் என்று அழைக்கப்பட்டது. ஆரஞ்சு பழ தோட்டங்கள் நிரம்பிய நகரம் இது.
மெச்சுகா (Mechuka) : இது முன்பு மென்சுகா என்று அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் பனியின் மருத்துவ நீர் என்பதாகும் . சு என்பதற்கு நீர் என்றும் கா என்பதற்கு பனி என்றும் பொருள்.
இடாநகர் (Itanagar) : அஸ்ஸாமியில் இடா என்பதற்கு சுட்ட செங்கல் என்று பொருள். இடா நகர் என்பதற்கு செங்கல் கோட்டை என்று பொருள்
செப்பா (Seppa) : முன்பு செப்லா என்று அழைக்கப்பட்டு வந்தது. உள்ளூர் மொழியில் செப்லா என்பதற்கு சதுப்பு நிலம் என்று பொருள்
சாங்லாங் (Changlang) : இந்த பெயர் சாங்லாங்கன் என்ற உள்ளூர் வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. அதற்கு மக்கள் நதியில் மீன்களை விஷமாக்குவதற்கு பயன்படுத்தப்படும் மூலிகைகளை கண்டுபிடித்த மலை உச்சி என்று பொருள்.
கோன்சா (Khonsa) : இந்த இடத்தின் வரலாற்று பிண்ணனி இதற்கு "மறந்த நிலம்" என்ற பொருளை பெயராக வழங்கியது.
பிஸ்மக்நகர் (Bismaghnagar) : இந்த ஊர் முன்பு சதயபுரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூட்டியா மன்னன் லக்ஷ்மிநாராயணனின் தலைநகரின் ஒரு பகுதியாக இருந்த நகரம் இது. ஆங்கிலத்தில் தலைசிறந்த நகரம் என்று பொருள்
டபோரிஜோ (Daporijo) : டபோ என்ற சொல்லுக்கு தீய ஆவி/தொற்றுநோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு என்றும் ரிஜோ என்பதற்கு பள்ளத்தாக்கு என்றும் பொருள்.
நம்சாய் (Namsai) : உள்ளூர் காம்டி மொழியில் நம் என்பதற்கு நீர் என்றும் சாய் என்பதற்கு மணல் என்றும் அர்த்தம்.
ஹவாய் (Hawai) : காமன் மிஷ்டி மொழியில் ஹவாய் என்ற சொல்லுக்கு குளம் என்று பொருள்
அனினி (Anini) : அனினி என்ற பெயர் இனினி என்பதிலிருந்து வந்திருக்கலாம். முன்பு இனினி என்ற பெயர் அனினி என்று மாறியது என்று கூறப்படுகிறது. இனினி இங்குள்ள இடு மிஷ்மி மக்களின் கடவுளின் பெயர்.
போர்டும்சா (Bordumsa) : போர் என்ற சொல்லுக்கு பெரியது என்றும் டும்சா என்பது இங்குள்ள சிங்போ இன மக்களின் ஒரு பிரிவான டும்சா பிரிவு மக்களையும் குறிக்கிறது.
விஜய் நகர் (Vijoynagar) : அஸ்ஸாம் ரைபிள்ஸ் மேஜர் ஜெனரல் ஏ.எஸ். கெளரயா மூன்று பக்க எல்லைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த அமைதியான நிலப்பரப்புக்கு தனது மகனின் நினைவாக விஜய்நகர் என்று பெயரிட்டார்.
செளகாம் (Chowkham) : சாங்காம் என்பது செளகாம் என்பது மருவியது. சாங் என்பதற்கு மடாலயம் என்றும் காம் என்பதற்கு தங்கம் என்றும் பொருள். இங்குள்ள தங்க மடாலயத்தின் காரணமாக செல்வ செழிப்புள்ள கிராமமாக கருதப்பட்டது.
வக்ரோ (Wakro) : மிஷ்டி மொழியில் க்ளோ என்ற சொல்லுக்கு நீர் என்று பொருள். இங்குள்ள ஏரிக்கு வக்ரோ நதியில் இருந்து நீர் வரத்து உள்ளது. நதியின் பெயரே கிராமத்திற்கும் பெயராக ஏற்பட்டது
தவாங் (Tawang) : த என்ற சொல்லுக்கு குதிரை என்றும் வாங் என்றால் தேர்தெடுக்கப்பட்டது என்று அர்த்தம். இந்த ஊரின் பெயர் புனிதமான மேரா லாமா லோட்ரே கியாட்சோவால் வழங்கப்பட்டது. இங்குள்ள மடாலயம் மேரா லாமா லோட்ரே கியாட்சோவின் குதிரையால் மடாலயம் அமைக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யததால் இந்த பெயர் வந்தது.
பாஸிகாட் (Pasighat) : இந்த பகுதியில் வசிக்கும் பழங்குடி இன மக்களான "பாசிஸ்" என்ற பெயரிலிருந்து பாசிகாட் என்ற பெயர் வந்தது. இது அருணாச்சல பிரதேசத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது.
தலிஹா (Taliha) : இந்த சொல்லுக்கு ஞானத்தை தேடுபவன் என்று பொருள்.
கர்சங் (Kharsang) : இந்த பெயர் உள்ளூர் லெப்பா மொழி வார்த்தையான குர்ஷியோங் (Kurseong) என்பதில் இருந்து வந்தது. அதற்கு வெள்ளை ஆர்ஷிட் மலர்களின் நகரம் என்று பொருள்.
திராங் (Dirang) : இது உள்நாட்டில் ஜோங் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள கோட்டை வியட்நாம் போரின் போது சிறைக் கைதிகளை அடைத்து வைக்கும் ஜெயிலாக இருந்தது. இது பக்கத்து அரசுகளிடம் இருந்து போம்டிலாவை காப்பாற்ற இங்கு திராங் கோட்டை கட்டப்பட்டது. அதுவே கிராமத்திற்கும் பெயராகியது.
ஜெமிதாங் (Jemithang) : இது நியாம்ஜாங் சூ ஆற்றங்கரையில் உள்ளது. இங்குள்ள மொழியில் ஜெமிதாங் என்பதற்கு "நதியில் மூழ்கிய நிலம்" என்று பொருள்
தெம்பாங் (Thembang) : இந்த கிராமம் முன்பு யுச்சோ-பெமா-சென் என்று அழைக்கப்பட்டது. அதற்கு தாமரை போன்ற கிராமம் என்று பொருள். முன்பு 10 கி.மீ தொலைவில் இருந்த இந்த கிராமம் தொற்று நோயின் பாதிப்பினால் தற்போதுள்ள இடத்திற்கு வந்ததாக தெரிகிறது. இந்த கிராமம் திபெத் மன்னரின் நேரடி வாரிசாக இருந்த தெம்பாங் பாபுவால் ஆளப்பட்டதால் அவரது பெயரையே தாங்கியது.
காமெங் (Kameng) : இங்கு ஓடும் காமெங் ஆற்றின் பெயரிலிருந்து கிராமத்திற்கும் இந்த பெயர் வந்தது
ஹயுலியாங் (Hayuliyong) : ஹயுலியாங் என்ற சொல்லுக்கு "ஓய்வெடுக்கும் இடம்" என்று பொருள். கடல் மட்டத்திலிருந்து 750 மீட்டர் உயரத்தில் லோஹித் மற்றும் தலாய் என்ற இரு நதிகளின் சங்கமத்தில் குளிரான மற்றும் இதமான காலநிலையையும் மயக்கும் இயற்கை அழகையும் பெற்றிருப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம்.
பாலுக்போங் (Palukbong) : கி.பி.10ம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த பாலர்கள் வம்ச அரசனான பாலுக்போ இங்குள்ள பராலி ஆற்றின் கரையில் கோட்டையை கட்டினார். அது அவரின் பெயரால் பாலுக்போங் கோட்டை என்று அழைக்கப்பட்டு ஊருக்கும் அதே பெயர் வந்தது.
கலக்டாங் (Kalaktong) : கி.பி.6ம் நூற்றாண்டில் வாழ்ந்த கியெல்போ கா லா வாங்போ என்ற மன்னனுக்கு பிடித்தமான இன் தங் பள்ளதாக்கு இது. இங்கே அவர் வேட்டையாட வருவார். அவரின் பெயரை தாங்கி பள்ளதாக்கு தாங் கலா வாங்போ பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. கலக்டாங் என்ற பெயருக்கு கா லா வாங்போ மன்னரின் பள்ளத்தாக்கு என்று பொருள்
பந்தேர்தேவா (Banderdewa) : இந்த பெயர் அங்குள்ள பஞ்சமுகி பாலாஜி கோயிலிலிருந்து வந்தது. இந்தியில் பந்தர் என்ற சொல்லுக்கு வானரம் என்றும் தேவா என்ற பொருளுக்கு கடவுள் என்றும் ஹனுமான்ஜியை குறிப்பிட்டு இந்த கிராமத்திற்கு பெயர் வந்தது. இது அருணாச்சல பிரதேசத்தின் நுழைவாயிலாக உள்ளது.

Comments
Post a Comment