28) மேகாலயா
மேகாலயா :
மேகாலயா என்ற சொல்லுக்கு மேகங்களின் உறைவிடம் என்று பொருள். சமஸ்கிருத வார்த்தையான மேகா (மேகம்) ஆலயா (இருப்பிடம்) என்பதே பெயரின் விளக்கம். இந்த மாநிலம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது "கிழக்கு ஸ்காட்லாந்து" என்று பெருமையுடன் அழைக்கப்பட்டது. வடகிழக்கின் ஏழ சகோதரிகள் மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. சிறந்த நீர்வளமும் மழை வளமும் விவசாயமும் கொண்ட மாநிலம். நாட்டிலையே அதிகமாக மழை பெய்யும் இடங்கள் உள்ளதும் இந்த மாநிலம் தான். இங்கு ஆங்கிலம் தான் அதிகாரபூர்வ மொழியாக உள்ளது. இந்தியாவில் தாய்வழி பராம்பரியத்தை பின்பற்றும் மாநிலம் இது. இளைய மகளே சொத்துக்கு அதிபதியாக உள்ளார். பெற்றோரை காக்கும் பொறுப்பும் அவளுக்கே உள்ளது. காசி, காரோ மற்றும் ஜெயந்தியா ஆட்சியாளர்கள் தங்களது பகுதிகளை ஆண்டு வந்தனர். பிரிட்டிஷ் அரசு கி.பி.1835ல் அசாமுடன் மேகாலயாவை இணைந்தனர். கி.பி.1905 வங்க பிரிவினையின் போது கிழக்கு வங்காளம், அஸ்ஸாம் மாகாணத்தின் பகுதியாக மாறியது. பின்னர் கி.பி.1912ல் வங்க பிரிவினை ரத்து செய்யப்பட்டபோது மேகாலயா அஸ்ஸாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. கி.பி.1947ல் இந்திய சுதந்திரத்தின் போது மேகாலயா அஸ்ஸாமின் இரு மாவட்டங்களாக ஆனது. கி.பி.1960ல் தனி மலைமாநில கோரிக்கையை முன்வைத்து தனி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. கி.பி.1968ல் இந்திய அரசு அஸ்ஸாம் மாநிலத்திற்குள் ஒரு தன்னாட்சியை அறிவித்தது. பின்னர் கி.பி.1971ல் வடகிழக்கு பகுதிகள் மறுசீரமைப்பு சட்டம் நிறைவேறியதை அடுத்து கி.பி.1972 ஜனவரி 21ல் தனி மாநில அந்தஸ்த்தை பெற்றது.
ஷில்லாங் (Shillong) : யெடோ என்பது பழைய பெயர். அது அங்குள்ள ஒரு மலைசிகரத்தின் பெயரால் ஷில்லாங் என்று மாற்றப்பட்டதாக கூறுவர். ஷில்லாங் என்ற வார்த்தை லே ஷில்லாங் என்பதிலிருந்து வந்தது. இதற்கு கடவுள் ஷில்லாங் மலைச்சிகரத்தில் இருந்து கொண்டு ஷில்லாங் நகரை கவனித்து கொண்டு இருக்கிறார் என்பது பொருள்.
இங்கு ஒரு கன்னிபெண் குறை பிரசவத்தில் ஒரு பையனை பெற்றெடுத்து அந்த குழந்தை இறந்த நிலையில் இருந்ததால் புதைத்து விட்டார். அந்த குழந்தை தானாகவே அதீத சக்திகளுடன் அழகான இளைஞனாக வளர்ந்து நின்றதால் அந்த குழந்தை யூ ஷில்லாங் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர். இயற்கையாகவே வளர்ந்த குழந்தை என்பதால் யூ ஷில்லாங் என்ற பெயர் வந்ததாகவும் அதிலிருந்தே நகருக்கும் ஷில்லாங் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்.
சிரபுஞ்சி (சோஹ்ரா) (Cherrapunji) : இந்த நகரத்தின் பழைய பெயர் சோஹ்ரா என்பதாகும். ஆங்கிலேயர்களால் செர்ரா என்று உச்சரிக்கப்பட்டது. இங்கு ஆரஞ்சு மிகுதியாக பயிரிடப்பட்டதால் ஆரஞ்சு நிலம் என்று பொருள்படும் வகையில் சிரபுஞ்சி என்ற பெயர் வந்தது. தற்போது மீண்டும் சோஹ்ரா என்ற பழைய பெயரிலையே அழைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே இரண்டாவது அதிக மழைப்பொழிவு பதியப்பட்ட நகரம் இது.
மவ்சின்ராம் (Mawsynram) : மாவ் என்பதற்கு கல் என்று பொருள். இங்குள்ள பாறைகள் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை. இங்குள்ள ஒரு குத்துப்பாறை சிவலிங்கம் வடிவில் அமைந்துள்ளதால் இந்த பெயர் வந்தது. இந்தியாவிலேயே அதிக மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்ட நகரம் இது.
துரா (Tura) : இங்குள்ள மக்கள் வழிபடும் சக்தி வாய்ந்த கடவுளான துராமா இம்பாமா என்ற கடவுளின் பெயரிலிருந்து துரா என்ற பெயர் ஏற்பட்டது.
நாங்க்ஸ்டோயின் (Nongstoin) : இங்குள்ள நோங்கனம் நதி தீவின் பெயராலும் நதியினாலும் இந்த பெயர் வந்ததாக கூறுகின்றனர்
பாக்மாரா (Baghmara) : பாங் லஸ்கர் என்பவர் இந்த இடத்தில் ஒரு புலியுடன் நடந்த நேரடி மோதலில் தன் கைகளால் புலியின் தாடையை அடித்து கொன்றார். பாக் என்பதற்கு புலி என்றும் மாரா என்பதற்கு கொல்லப்பட்டது என்றும் பொருளில் இந்த இடத்திற்கு பாக்மாரா என்ற பெயர் வந்தது
ரிபோய் (Ri bhoi) : இந்த பகுதியில் மிகுதியாக இருக்கும் போய் பழங்குடி மக்களின் பெயரால் நகருக்கு பெயர் வந்தது
மைராங் (Mairang) : மைராங் என்ற சொல்லுக்கு போடா மொழியில் அரிசி அல்லது நெல் என்று பொருள். இங்கு மிகுதியான நெல் சாகுபடிக்கு பெயர் பெற்றதால் இந்த பெயர் வந்தது
வில்லியம்நகர் (William nagar) : இந்த மாநிலத்தின் முதல் முதல்வராக இருந்த கேப்டன் வில்லியம்சன் ஏ. சங்மாவின் நினைவாக நகருக்கு வில்லியம்நகர் என்ற பெயர் வந்தது.
மவ்லாய் (Mawlai) : இந்த வார்த்தை அரபு முஸ்லீம்களிடம் இருந்து முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் மற்ற இன் மக்களை குறிப்பிடவதற்காக பயன்பட்ட வார்த்தையாகும்.
மாவ்ப்லாங் (Mawphlang) : மாவ் என்பதற்கு கல் என்றும் ப்லாங் என்பதற்கு புல் என்றும் அர்த்தம். நகருக்கு புல்கல் என்ற பொருளில் மாவ்பலாங் என்ற பெயர் வந்தது.
நோங்தைமால் (Nongthymmal) : இந்த பெயர் காசி மக்கள் பயன்படுத்தும் இரு வார்த்தையில் இருந்து வந்தது. நோங் என்பதற்கு கிராமம் என்றும் தைமால் என்பதற்கு புதியது என்றும் அர்த்தம். நோங்தைமால் என்பதற்கு புதிய கிராமம் என்று பொருள்
அம்படி (Ampati) : இங்கு முதலில் குடியேறிய மக்கள் விவசாயம் செய்து நெற்பயிர்களை உலர்த்துவதற்கு பாய்களை பயன்படுத்தினர். அந்த பாய்கள் அம்பாட்சி என்று அழைக்கப்படுகிறது. அதிலிருந்து மருவி நகருக்கு அம்படி என்ற பெயர் வந்தது
மவ்லய்நோன்ங் (Mawlynnong) : மவ் என்ற சொல்லுக்கு கல் என்றும் லய்நோன்க் என்பதற்கு ஒரு இடத்தில் பரவலாக குவிந்து கிடக்கின்ற என்றும் அர்த்தம். நிலப்பகுதியை விட்டு தாழ்வான பகுதியில் பரவலாக குவிந்து கிடக்கின்ற கற்கள் என்பதால் இந்த பெயர் வந்தது. இந்த இடம் கடவுளின் சொந்த தோட்டம் என்று சிறப்பித்து அழைக்கப்படும் அளவுக்கு இயற்கை அழகு நிறைந்த பகுதி.
டாவ்கி (Dawki) : இது Diwik என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது. அதற்கு கடவுளின் அருள் என்று பொருள். இங்கு பாயும் உம்ங்கோட் நதி டாவ்கி நதி என்று பெயராலும் அழைக்கப்படுகிறது. உண்மையிலேயே பூலோக சொர்க்கமாக தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து நதியின் தரைபகுதி வரை சுத்தமாக தெளிவாக தெரியும் வண்ணம் ஒடும் நதி உண்மையிலையே கடவுளின் அருள் என்று தான் சொல்ல வேண்டும்
டெயின்த்லென் (Dainthlen) : இங்கு வாழ்ந்த த்லென் என்ற மிகப்பெரிய பாம்பு இந்த வழியே செல்லும் மக்களில் பாதி பேரை விழுங்கி விடும். அதனால் ஒருவர் ஒருவராக தான் இந்த பாதையை கடப்பார்கள். இந்த பாம்பின் கொடுமையை அழிக்க யூ சூட்னோ என்பவர் அதனுடன் நன்கு பழகி நண்பர் போல அதற்கு உணவளித்து வந்தார். குகையின் வாசலில் பாம்பு வாயை திறந்தவுடன் இவர் உணவிடுவது வழக்கம். நன்கு பழகியவுடன் பாம்பு வாயை திறந்தவுடன் பழக்க காய்ச்சிய இரும்பை பாம்பின் வாயில் வைக்க பாம்பு அலறி செத்து விழுந்தது. உடனே மக்கள் அங்குள்ள ஆற்றங்கரையில் பாம்பை வெட்டி உண்டனர். ஆற்றங்கரையின் பாறைகள் பாம்பின் இறைச்சி போல சிதறி கிடந்ததால் டெயின்த்லேன் என்ற பெயர் வந்தது.
லா சூட்னோ (Law Suidnoh) : த்லென் என்ற பாம்பை வீரமாக கொன்ற யூ சூட்னோ என்பவர் வசித்த கிராமம் அவரின் பெயரை தாங்கி லா சூட்னோ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
உம்லிங் (Umling) : நகருக்கு அருகிலுள்ள சிறு கிராமமான உம்லிங் என்பதிலிருந்து நகருக்கு பெயர் வந்தது

Comments
Post a Comment