22) உத்திரபிரதேசம்
உத்திரபிரதேசம்
உத்திரப்பிரதேசத்தில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் இந்த இடத்தில் தான் தங்களது குடியிருப்புகளை உருவாக்கினர். வேத காலத்தில் இன்றைய உத்திரபிரதேசம் குரு நாடு, பாஞ்சால நாடு மற்றும் கோசல நாடு என்று மூன்று பகுதிகளாக இருந்தது. இந்தியாவில் அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலம் இது. சுமார் 16.5% இந்தியாவின் மக்கட்தொகையை தன்னகத்தே கொண்ட மாநிலமாக விளங்குகிறது. உத்தர் என்பதற்கு வடக்கு என்று பொருள். வடக்கே உள்ள மாநிலம் என்பதால் உத்திரபிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. அவதாரங்களான இராமரும் மற்றும் கிருஷ்ணரும் பிறந்த மாநிலமாகவும் கடைசி அவதாரமான கல்கி அவதாரம் பிறக்க போகும் மாநிலமாகவும் குறிப்பிடப்பட்ட மாநிலம். இந்துக்களுக்கு பாபவிமோசனம் தரும் தலமான வாரணாசி அமைந்து இருப்பதும் இங்கே தான். புத்தரின் முதல் பிரசங்கம் நடந்தது இங்கேயுள்ள சாரநாத்தில் தான். எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்களை தன்னகத்தே கொண்டுள்ள மாநிலம். இடைக்காலத்தில் டெல்லி சுல்தான்கள் அதன் பின்னர் மொகலாயர்களால் ஆளப்பட்டு பின்னர் ஆங்கிலேயர் வசம் வந்தது. பின்னர் இந்திய சுதந்திரத்தின் போது அயோத்தி (அவுத்) மற்றும் ஆக்ரா இணைந்த ஐக்கிய மாகாணம் (United pradesh) என்ற பெயரில் இருந்தது வடக்கு மாகாணம் என்ற பெயரில் (உத்தர் பிரதேஷ்) என்று அழைக்கப்பட்டது. கி.பி.2000ல் மாநிலம் பிரிக்கப்பட்டு உத்தராஞ்சல் என்ற புதிய மாநிலம் உதயமாகி அந்த மாநிலத்தின் பெயர் தற்போது உத்திரகாண்ட் என்றாகியது.
லக்னோ (Lucknow) : இந்த நகரம் ராமாயண லக்ஷ்மணன் நினைவாக பெயரிடப்பட்டது. லக்ஷ்மணபுரி (லக்ஷ்மணனின் நகரம்) என்று அழைக்கபப்ட்டது. இது லக்கன்பூர் (லச்மன்பூர்) என்றும் மருவி லக்னோ என்றானது என்பர்.
லக்ஷ்மணனுக்கு பிறகு லக்ஷ்மணவதி (அதிர்ஷ்டசாலி) என்று அழைக்கப்பட்டு லக்னவதி என்றும் லக்னாவ் என்று மாறியது என்பர்.
இந்து தெய்வத்தின் பெயரான லக்ஷ்மியின் பெயரால் லக்ஷ்மணெளதி, லக்ஸ்மனாட், லக்ஷ்நெளட், லக்ஷ்னெள என்றும் இறுதியாக லக்னோ என்று மாறியது என்றும் கூறுவர்.
லக்னோ கிலா (கோட்டை) கட்டிய லக்னா அஹிர் என்ற கட்டிட கலைஞரின் பெயரால் வந்தது என்றும் கூறுவர்.
ஈட்டா (Eteh) : பழங்காலத்தில் ஐந்தா என்று அழைகக்ப்பட்டது. அதற்கு ஆக்ரோஷமாக பதிலளிப்பது என்று அர்த்தம். வேட்டையாட போகும்போது இராஜாவின் நாய்கள் நரியை துரத்த இந்த இடத்தில் வந்தவுடன் நரி ஆக்ரோஷமாக மாறி திரும்ப கத்தியது. நரியின் நடத்தையை மாற்றிய இடத்தை "ஐந்த" என்று அழைக்க அது தவறாக ஏட்டா என்று அழைக்கப்பட்டது.
ஒருவர் தண்ணீரை தேடி நிலத்தில் தோண்ட அவரது காலணி ஒரு செங்கலை (ஈண்ட்) தாக்க அதனால் ஈண்டா என்ற பெயர் வந்து மருவி எட்டா என்றானது என்பர்.
பிரக்யாராஜ் (Prayagraj) : இந்த நகரம் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அருகில் அமைந்துள்ளது. வேத காலங்களில் பிரயாகை (நதிகளின் சங்கமம்) என்று அழைக்கப்பட்டது. பின்னர் கோசாம்பி என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
அக்பரின் காலத்தில் பெரிய நகரம் நிறுவப்பட இலாஹபாஸ் அல்லது இலாஹாபாத் என்று அழைக்கப்பட அவருக்கு பின்னர் ஷாஜஹானால் அலகாபாத் என்று அழைக்கப்பட்டது.
பிரயாக்ராஜ் என்பதற்கு "ஜந்து பிரயாகைகளின் ராஜா" என்று அர்த்தம்.
அயோத்தி (Ayotya) : இந்த அயோத்தி என்ற சொல் யுத் (போரைநடத்துதல், எதிர்கொள்ளுதல்) என்பதன் அர்த்தமாகும். அயோத்தி என்பதற்கு வெல்லமுடியாத என்று பொருளாகும். சிலர் எதிரிகளால் வெல்ல முடியாத நகரம் என்றும் சிலர் பாவங்களால் வெல்லமுடியாத என்றும் கூறுவர்.
இராமாயணத்தில் கோசல அரசின் தலைநகராக கோசாலை என்று குறிப்பிடபப்ட்டுள்ளது.
ஆக்ரா (Agra) : ஆக்ரா என்பது அகர் என்ற ஹிந்தி வார்த்தையிலிருந்து வந்தது. இங்குள்ள மண் உவர்ப்பாக இருப்பதால் உப்பு - நான் என்ற பொருளில் ஆக்ரா என்றானது என்பர்.
கிருஷ்ணர் விருந்தாவனத்தில் கோபிகையருடன் உல்லாசமாக இருந்த தோப்பு காடு என்ற பொருளில் அக்ரவனா என்று சொல்லுக்கு தோப்புகாடு என்று பொருளில் ஆக்ரா என்றானது என்பர்.
மொகலாய காலத்தில் இது அக்பராபாத் என்று அழைக்கப்பட்டது. ஷாஜஹான் தனது தாத்தா அக்பரின் நினைவாக ஆக்ரா என்று பெயர் சூட்டினார் என்றும் கூறுவர்.
அலிகார் (Aligarh) : இதன் பெயர் முன்பு கோல் (அல்லது) கோயில் என்பதாக இருந்தது. இங்கு பலராமன் கோல் என்ற அரக்கனை கொன்றதால் நகருக்கு கோல் அல்லது கோயில் என்ற பெயர் வந்தது. பின்னர் டெல்லி சுல்தான்களின் ஆட்சியில் கோல் மாதாணத்தின் ஆளுநராக இருந்த முஹம்மது பெயரால் முஹமதுகர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மொகலாய ஃப்ரூக்ஷியார் காலத்தில் இந்த பகுதியின் ஆளுநராக இருந்த சபித்கான் பெயரால் சபித்கர் என்று அழைக்கப்பட்டு பின்னர் ராம்கர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. நஜாப் கான் இந்த நகரை கைப்பற்றி அலிகார் என்று பெயரிட்டார்.
கான்பூர் (Kanpur) : கான்பூரியா குலத்தை சேர்ந்த ராஜா கான் தியோ இந்த நகரத்தை நிறுவினார் அவரது பெயரை தாங்கி கான்பூர் என்றானது.
வாரணாசி (Varanasi) : கங்கை நதியின் துணை நதிகளான வருணா மற்றும் அசி நதிகளின் பெயர்களால் வாரணாசி என்று பெயர் வந்தது.
மகாபாரதத்தில் இந்த நகரம் காசி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ் என்பதற்கு சமஸ்கிருதத்தில் பிரகாசிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் வாரணாசியை "ஒளி நகரம்" என்று அழைக்கின்றனர்.
நொய்டா (Noida) : New Okhla Industrial Development Authority என்பதின் சுருக்கமே நொய்டா என்பதாகும்.
மீரட் (Meerut) : மண்டோதரியின் தந்தையான இராவணனின் மாமனாரான மாயாசுர ராஜ்ஜயத்தின் தலைநகரான "மாயாராஷ்டிரா" என்பதிலிருந்து இந்த நகரம் பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்த பெயர் மைராஷ்டிரா, மை-தந்த்-கா-கேரா, மைராத் என்று மருவி மீரட் என்று மாறியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மாயா (சூரா) என்ற கட்டிட கலைஞருக்கு யுதிஷ்டிரர் வழங்கிய நிலத்தை அவர் மகாராஷ்டிரா என்று அழைக்க அது காலப்போக்கில் மீரட் என்று சுருங்கியது.
இந்திரபிரஸ்தத்தின் மன்னரான மகிபாலனின் பகுதியாக இருந்ததால் மீரட் அவரது பெயருடன் தொடர்புடையது என்றும் கூறுகின்றனர்.
மய் என்பதற்கு மது என்று பொருள். மதுபான உற்பத்தி நகரத்தில் இருந்ததால் மய என்று பெயர் வழங்கி மீரட் என்றானது என்றும் கூறுகின்றனர்.
ஹஸ்தினாபுரா (Hastinapura) : இந்த நகரம் ஹஸ்தினா (யானைகள்) புரா (நகரம்) என்பதிலிருந்து யானைகளின் நகரம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ஹஸ்தி மன்னனின் பெயரில் அழைக்கப்பட்டது என்றும் கூறுவர்.
காஜியாபாத் (Ghaziabad) : இந்த நகரம் மொகலாய பேரரசர் முகமது ஷாவின் அமைச்சரவையில் வஸீராக பணியாற்றிய இரண்டாம் காஜி-உத்-தின் என்பவரால் நிறுவப்பட்டு காஜியுதீன் நகர் என்று அழைக்கப்பட்டு பின்னர் காஜியாபாத் என்று அழைக்கப்படுகிறது.
ஜான்சி (Jhansi) : ஜான்சி என்ற பெர்க்"புதர்களால் மூடப்பட்டிருக்கும்" என்று அர்த்தம். அதாவது இந்த நகரம் கோட்டை கட்டப்படுவதற்கு முன்பு காடுகளால் மூடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த கிராமம் பல்வந்த்நகர் என்று அழைக்கப்பட்டது.
ஒர்ச்சா அரசர் இந்த கோட்டையை கட்டிய போது அவரது அரண்மனையில் இருந்து பார்த்த போது தெளிவற்ற நிழலாக தெரிந்ததால் (jhain-si) அந்த பெயரே நகருக்கு வந்தது என்றும் கூறுவர்.
ராம்பூர் (Rampur) : காதர் என்று நான்கு கிராமங்களின் குழுவுக்கு பைசாபாத் என்று அழைக்க நிறைய நகரங்கள் இந்த பெயரில் இருப்பதால் முஸ்தபாபாத் அல்லது ராம்பூர் என்று ராஜா ராம் சிங் பெயரை கொண்டு நகருக்கு பெயர் வந்தது.
உன்னோவ் (Unnao) : உன்வந்த் சிங் என்பவர் கவர்னரின் லெப்டினன்ட் ஜெனரலை யுத்தத்தில் வென்று கோட்டையை கட்டியதால் இந்த பெயர் வந்தது.
சுல்தான்பூர் (Sultanpur) : இராமனின் மகனான குசா இங்கு பிறந்ததால் குசாபுரா என்று அழைக்கபப்ட்டு வந்தது. பின்னர் குஸ்பவன்பூர் என்றும் அலாவுதீன் கில்ஜி பட்டத்திற்கு வந்த பிறகு குஸ்பவன்பூர் என்ற பெயர் சுல்தான்பூர் என்றும் மாற்றப்பட்டது.
பரேலி (Bareli) : இந்த நகரத்தை நிறுவிய ஜகத் சிங் கத்தேரியா என்ற உள்ளூர் தலைவரின் இரண்டு மகன்களான பன்சால்தேவ் மற்றும் பரேல்தேவ் ஆகியோரின் பெயரால் பான்ஸ் -பரேலி என்று நகருக்கு பெயர் வைக்கப்பட்டது.
பாலியா (Ballia) : இரண்டு நதிகளுக்கு இடைப்பட்ட நிலத்தின் மண் மணலாக இருப்பதற்கு "Balu" என்று பொருள். அதனால் இந்த நகரம் பாலியன் என்று அழைக்கப்பட்டு பாலியா என்று மாறியது
முராதாபாத் (Moradabad) : இந்த நகரத்தின் மறு உருவாக்கம் ஷாஜஹானின் காலத்தில் சப்பானின் ஆளுநராக இருந்த ருஸ்தம் கான் தகானி என்பவரால் ஏற்படுத்தப்பட்டு "ருஸ்தம்நகர்" என்று பெயரிடப்பட்டது. ஷாஜஹானின் கோபத்திற்கு ஆளானதால் அவரை சமாதானப்படுத்த ஷாஜஹானின் மகனான முராத் பக்ஷ்ன் பெயரால் முராதாபாத் என்று பெயரிடப்பட்டது.
ஓரை (Orai) : இந்த நகரத்தில் வழிபாடு செய்த புனித உத்தலக்கின் நினைவாக நகருக்கு ஓரை என்று பெயரிடப்பட்டது.
மதுரா (Madhura) : யாது பழங்குடியினரான மதுவின் மகனான யாதவ லவணனை கொன்ற பின்னர் சத்ருகனால் நிறுவப்பட்டதால் மதுரா என்ற பெயர் வந்தது என்று கூறுவர்.
ஹமிர்பூர் (Hamirpur) : 11ம் நூற்றாண்டில் ஹமிரா தேவால் நிறுவப்பட்ட ஊர் என்பதால் ஹமிர்பூர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
கோரக்பூர் (Gorakhpur) : புகழ்பெற்ற துறவியான கோரக்நாத்தின் உறைவிடம் என்ற பொருளில் கோரக்ஷபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் கோரக்பூர் என்றானது.
ஷாஜஹான்பூர் (Shahjahanpur) : இந்த நகரம் ஜஹாங்கீரின் படை தளபதியாக இருந்த தாரியா கானின் மகன்களான திலிர் கான் மற்றும் பகதார் கான் ஆகியோரால் உருவாக்கப்பட்டது என்பதால் அவர்கள் ஷாஜஹானின் அரசவையில் இடம்பெற்று இருந்ததால் நகருக்கு ஷாஜஹான்பூர் என்று பெயர் வைத்தனர்.
ஹாபூர் (Hapur) : கி.பி.10ம் நூற்றாண்டில் இந்நகரை நிறுவிய ஹர்தத்தாவின் பெயரால் ஹரிபூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் ஹாபூர் என்றானது.
ஃபிரோஸாபாத் (Firozabad) : இந்த நகரத்து (அசாஃபாபாத்) மக்கள் அக்பரின் அவையில் இருந்த ராஜா தோடர்மால் கயாவிற்கு புனிதப்பயணம் சென்று திரும்பிய போது அவமானப்படுத்தியதால் அகபரால் ஃபிரோஸ் குவாஜா அனுப்பப்பட்டு நகரத்தை இடித்து தரைமட்டமாக்கினார். பின்னர் அங்கு புதிய நகரம் நிர்மாணிக்கப்பட ஃ பிரோஸ் குவாஜாவின் பெயரால் நகருக்கு ஃபிரோஸாபாத் என்று பெயர் வைக்கப்பட்டது.
ரேபரேலி (Raebareli) : பார்ஸால் நிறுவப்பட்ட நகரம் என்பதால் பரெளலி அல்லது பாரெளலி என்று அழைக்கப்பட்டது. ரே (ராய்) என்பது அருகிலுள்ள கிராமத்தின் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
ஜான்பூர் (Jaunpur) : டெல்லி சுல்தானான ஃபெரோஸ் ஷா துக்ளக்கால் நிறுவப்பட்டு அவரது உறவினரான ஜெளனா கான் நினைவாக பெயரிடப்பட்டது.
சந்தெளசி (Chandausi) : நகரத்தின் உண்மையான பெயர் "சந்தா சி" என்பதாகும். அதற்கு அர்த்தம் சந்திரன் போன்று அழகானது என்று அர்த்தம். அது பின்னர் மருவி சந்தெளசி என்றானது.
பாரபங்கி (Barabanki) : இந்த இடத்தில் "பகவான் பராவின்" மறு அவதாரம் காரணமாக பான்ஹன்யா என்று அழைக்கப்பட்டது மருவி பாரபங்கி என்றானது.
அஸம்கர் (Azamgarh) : இது இராமாயண துர்வாச முனிவரின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. விக்ரமஜித்தின் மகனான அசாம் என்பவரால் நிறுவப்பட்டதால் அஸம்கர் என்ற பெயரை பெற்றது என்று கூறுவர்.
முஸாஃபர்நகர் (Muzaffar nagar) : இந்த நகரம் மொகலாய பேரரசர் ஷாஜஹான் காலத்தில் அவரது தளபதியான சயீத் முசாபர் கானால் நிறுவப்பட்டதால் அவரது பெயரை கொண்டு முஸாஃபர்நகர் என்று பெயர் வந்தது
புலந்த்ஷாஹர் (Bulandshahr) : இந்த நகரம் அஹிபரன் என்ற அரசனால் நிறுவப்பட்டு பரன் என்று அழைக்கப்பட்டு வந்தது. இது மேட்டுபாங்கான இடத்தில் அமைந்திருந்ததால் "உயர்ந்த நகரம்" என்ற பொருளில் பாரசீக மொழியில் மொகலாயர்கள் காலத்தில் புலந்த்ஷாஹர் என்று பெயரிடப்பட்டது.
காஸிபூர் (Ghazipur) : இந்த நகரின் பழைய பெயர் காதிபூர் என்பதாகும். இது காஜி மாலிக் பெயரால் காஸிபூர் என்ற பெயர் மாறற்ம் பெற்றது.
லக்கிம்பூர் (Lakhimpur) : இந்த நகரத்தின் பெயர் செல்வத்திற்கு பெண் கடவுளான லக்ஷ்மி என்ற பெயரிலிருந்து வந்தது என்று கூறுவர்
இந்த பகுதியில் நெற்விளைச்சல் அதிகம். நெற்பயிரை லக்கிமி என்ற பெயராலும் பூர் என்பதற்கு முழுவதும் என்ற பொருளில் நெற்பயிர்கள் முற்றிலும் பரந்து விரிந்த என்ற பெயரால் லக்கிம்பூர் என்றானது என்றும் கூறுவர்.
மைன்புரி (Mainpuri) : இந்த நகரம் மயன் முனிவருடன் பெயரை கொண்டு மைன்புரி என்ற பெயரை பெற்றது.
ஹர்தோய் (Hardoi) : இந்த நகரம் "ஹிரண்யகசிபு" யுடன் சம்பந்தப்பட்டது. இதன் ஆரம்ப பெயர் ஹரிதுரோஹி (அதாவது against to god) என்பதாவது மருவி ஹர்தோய் என்றானது
ஹத்ராஸ் (Hathras) : இந்த நகரின் பழைய பெயர் மகாமாயாநகர் என்பதாகும். புத்தரின் தாயான மாயாதேவியின் பெயரை கொண்டு அழைக்கப்பட்டு வந்தது. இந்த நகரம் பிரிஜ் பகுதியின் மடியில் அமைந்துள்ளதால் பிரஜ் கி தேஹ்ரி என்று அழைக்கப்படுகிறது.
பகவான் கிருஷ்ணர் தனது பசுக்களை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற வயல் என்பதால் ஹத்ராஸ் என்று பெயர் வந்தது என்றும் கூறுவர்.
மகாதேவ் பார்வதி தேவியுடன் கிருஷ்ணரை தரிசிக்க இங்கு வந்த போது பார்வதி தேவி ஒய்வெடுத்த இடத்தில் தேவி ஹத்ராசி கோயில் கட்டப்பட்டது. அதனால் இந்த இடம் ஹத்ராஸ் என்று அழைக்கப்படுகிறது
சீதாபூர் (Sitapur) : விக்ரமாதித்ய மன்னரால் இராமரின் மனைவியான சீதா தேவியின் பெயரால் நகருக்கு சீதாபூர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிலிபித் (pilipit) : இந்த நகரம் இதன் தலைவராக இருந்த ரோஹில்லா இன் தலைவரான ஹபீஸ் ரஹ்மத் கானின் பெயரால் ஹஃபிசாபாத் என்று அழைக்கப்பட்டது. பின்னர் நகரத்தின் பெயர் அருகிலிருந்த கிராமத்தின் பெயரிலிருந்து பிலிபித் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
குர்ஜா (Khurja) : குர்ஜா என்ற வார்த்தையானது உருது வார்த்தையான கரிஜா என்பதிலிருந்து வந்தது. அதற்கு ரத்து செய்யப்பட்டது என்று அர்த்தம். இந்த நகரத்தில் பெரும்பான்மையான நிலங்கள் சதுப்பு நிலங்களாக விவசாய பயிர்களை உற்பத்தி செய்ய முடியாமல் இருந்த காரணத்தால் நகரத்தின் வருவாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக நகருக்கு பெயர் வந்திருக்கலாம் என்று கூறுவர்.
பஃதேபூர் (Fatehpur) : இந்திய சுதந்திர போராட்டத்தில் ராணி லெட்சுமி பாயக்கு உதவிய பாபு ஃபதே சந்திராவின் நினைவாக நகருக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
புடான் (Budaun) : நகரின் பெயரான அஹிர் இளவரசர் புத்தின் நினைவாக பெயரிடப்பட்டது.
சஹ்ரன்பூர் (Saharanpur) : நகரின் பெயர் புனித ஷா ஹாரூன் சிஷ்டியின் பெயரால் அழைக்கப்படுகிறது.
விருந்தாவன் (Vrindavan) : சமஸ்கிருதத்தில் விருந்தா என்பதற்கு புனித துளசி என்றும் வன் என்பதற்கு தோப்பு,காடு என்றும் பொருளில் விருந்தாவன் என்று அழைக்கப்படுகிறது
சம்பால் (Sambhal) : இதன் பழைய பெயர் பீம்நகர் என்பதாகும். புராணங்களில் கல்கியின் பிறப்பிடமாக குறிப்பிடபப்ட்டுள்ளது. ஷம்பாலா (ஷாம்-பா-லா) என்று அழைக்கப்படுவதற்கு அமைதியான இடம் என்று பொருளாகும்.
அம்ரோஹா (Amroha) : கி.மு. 5ம் நூற்றாண்டில் பன்சி வம்சத்தின் ராஜா அமர்ஜதாவின் ஆட்சியின் போது நகரம் நிர்மாணிக்கப்பட்டதால் அம்ரோஜா என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுவர்.
இங்குள்ள மாம்பழங்கள் மற்றும் ரோகு வகை மீன்களால் (ஆம்+ரோகு) இந்த நகரம் அம்ரோஹா என்ற பெயர் பெற்றது என்றும் கூறுவர்.
பஹ்ரோச் (Bahraich) : பிரம்மாவிற்கு உகந்த நகரமாக இருந்ததால் அவரின் பெயரை தாங்கி பஹ்ரோச் என்று நகருக்கு பெயர் வந்தது என்று கூறுவர்.
இடைக்காலத்தில் இந்நகரம் "பார்" பேரரசின் தலைநகராக இருந்ததால் பாரோச் என்று அழைக்கப்பட்டது மருவி பஹ்ரோச் என்றானது என்றும் கூறுவர்.
மோடிநகர் (Modinagar) : கி.பி.1933ல் இங்கு மோடி குழுமத்தின் ராய் பகதூர் குஜர் மோடி மற்றும் அவரது சகோதரர் கேதார் நாத் மோடியுடன் இணைந்து இங்கு நகரத்தை நிறுவி தனது வர்த்தக நிறுவனங்களை ஆரம்பித்தார். அதனால் நகருக்கு மோடி நகர் என்று பெயர் வந்தது.
பஸ்தி (Basti) : இந்த நகரம் முன்பு வைசிஷ்டி என்று அழைக்கப்பட்டது. மகரிஷி வசிஷ்டரின் ஆசிரமமாக இருந்த காரணத்தால் வைசிஷ்டி என்று அழைக்கப்பட்டது பின்னர் பஸ்தி என்றானது.
ஷிகோஹாபாத் (Sihohabad) : இந்த நகரின் பழைய பெயர் முகமது மஹ். மொகலாய பேரரசர் ஷாஜஹானின் மூத்த மகனான தாரா ஷிகோவின் நினைவாக ஷிகோஹாபாத் என்று பெயரிடப்பட்டது.
ஷாம்லி (Shamli) : குந்தியின் மகனான பீமனால் இந்நகரம் நிறுவப்பட்டது. கிருஷ்ணர் குருஷேத்திரம் செல்லும் வழியில் இங்குள்ள கிணற்றில் தண்ணீர் குடித்தாராம். அங்கு ஹனுமானின் அடையாளங்கள் அவரை ஆசீர்வதித்தன. ஷியாம்வலி என்று அழைக்கப்பட்ட நகரம் பின்னர் "ஷ்யாமா நகரி" என்றானது. பின்னர் மருவி ஷாம்லி என்றானது.

Comments
Post a Comment