20) ஹரியானா
ஹரியானா
ஹரியானா என்ற சொல்லுக்கு கடவுளின் இருப்பிடம் என்ற பொருள். மகாபாரதத்திற்கு பின்பு விவசாய கலையில் சிறப்பு திறன்களை கொண்ட அபிராஹிகள் இங்கு வாழ்ந்ததால் ஹரியானா என்ற பெயர் ஏற்பட்டது. ஹரியானா என்ற பெயர் அபிராயனா -அஹிராயனா-ஹிராயனா என்று மருவி ஹரியானா என்றானது என்றும் கூறுகின்றனர். இந்திய மாநில பிரிவினையின் போது பஞ்சாப் இரண்டாக பிரிக்கப்பட்டு இந்து மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியான கிழக்கு பஞ்சாப் இந்தியா வசம் வந்தது. மேற்கு பஞ்சாபிலிருந்து ஏராளமான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கிழக்கு பஞ்சாபிற்கு குடியேறினர். பஞ்சாப் மாநிலத்தை பிரித்து பஞ்சாபி மொழி பேசும் மக்கள் அடங்கிய பகுதிகள் பஞ்சாப் என்றும் இந்தி மொழி பேசும் பகுதிகள் ஹரியானா என்றும் மலைபிரதேசங்கள் அடங்கிய பகுதிகள் ஹிமாச்சல் என்றும் கி.பி.1966ல் மொழி அடிப்படையில் ஹரியானா உதயமாயிற்று. ஆனாலும் பஞ்சாப் மற்றும் ஹரியானா என இரண்டு மாநிலங்களுக்கும் சண்டிகர் நகரமே தலைநகரமாக இன்று விளங்குகிறது.
சண்டிகர் (Chandigarh) : இந்த புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நகருக்கு அருகில் இருந்த கோயிலான "சண்டி மந்திர்" என்பதிலிருந்து சண்டிகார் என்ற பெயர் வந்தது. சண்டி என்பது சக்தியின் தெய்வம் ஹர் என்பது வீடு என்ற பொருளில் "சண்டி தேவியின் வாழும் இடம்" என்ற அர்த்தத்தில் நகருக்கு இந்தப் பெயர் வந்தது.
குருகிராம் (Gurugram) : திருதராஷ்டிர மன்னன் இன்றைய குருகிராம் பகுதியை துரோணாச்சாரியாருக்கு பரிசாக அளித்தார். இந்த இடத்தில் அவர் ஆஸ்ரமம் அமைத்து இளவரசர்களுக்கு போர் பயிற்சி அளித்தார். அதனால் குருவின் கிராமம் என்று பொருள்படும் வகையில் குரு காவ் என்று அறியப்படுகிறது. இந்த காலப்போக்கில் குர்கான் என்று அழைக்கப்பட்டு மீண்டும் அரசு குருகிராம் என்ற பெயர் மாறியுள்ளது.
கர்ணால் (Karnal) : மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரமான கர்ணனின் பெயரைக் கொண்டு விளங்குகிறது.
ரோதக் (Rohtak) : இந்த பெயர் ரோஹ்தாஷ்கரின் திருத்தம் என்று கூறப்படுகிறது. நகரத்தின் கிழக்கே அமைந்துள்ள பழைய தளங்களில் ஒன்று ராஜா ரோஹ்தாஷின் பெயரால் உள்ளது. அவரின் காலத்தில் இந்த நகரம் கட்டப்பட்டதால் அவரின் பெயரை வழங்கலாம் என்று கூறுகின்றனர்.
சமஸ்கிருதத்தில் ரோஹிடகா என்று அழைக்கப்படும் ரோஹெரா (டகோமா அன்டுலேட்) மரத்திலிருந்து நகரம் பெற்றது என்றும் முன்பு காடாக இருந்த சமயத்தில் இந்த வகை மரங்களே இருந்த காரணத்தால் நகருக்கு ரோஹ்தக் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
ஃபரீதாபாத் (Faridabad) : இந்த நகரம் ஜஹாங்கீரின் பொருளாளராக இருந்த ஷேக் ஃபரீத் என்பவரால் நிறுவப்பட்டதால் அவரது பெயரை தாங்கி நிற்கிறது
அம்பாலா (Ambala) : கி.பி.14ம் ஆண்டு இந்த நகரை நிறுவிய அம்பா ராஜ்புத் என்பவரிடம் இருந்து பெயர் வந்தது.
இந்த நகரில் உள்ள பவானி அம்பா என்ற தெய்வத்தின் பெயரால் நகருக்கும் பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர்.
ஹிஸார் (Hisar) : ஃபிரேஷஸ் ஷா துக்ளக்கால் இந்த நகரம் கி.பி.1354ல் நிறுவப்பட்டது. இதற்கு ஹிசார் -இ- ஃபிரோசா என்ற பெயர் வைத்தார். அதாவது பாரசீக மொழியில் ஃபிரோஸின் கோட்டை என்று அர்த்தம்.
பிவானி (Bhiwani) : இந்த நகரை நிர்மாணித்த ராஜ்புத்தான நீம் சிங் என்பவர் தனது உயிரை துரோகத்திலிருந்து காப்பாற்றிய தனது மனைவி பானி என்பவரின் பெயரை நகரை வைத்தார். அது பியானி என்றும் மருவி தற்போது பிவானி என்றும் மருவிற்று.
பானிபட் (Panipat) : இந்த நகரத்தின் பெயர் பாண்டுபிரஸ்தா. அதாவது பாண்டு நகரம் என்பதாகும். மகாபாரதத்தில் பாண்டவர்கள் சார்பாக கோரிய 5 கிராமங்களுள் இதுவும் ஒன்று.
பாக்பத் (Baghbat) : இந்த நகரத்தின் முதல் பெயர் வியாக்ரபிரஸ்தா. சமஸ்கிருதத்தில் புலி நகரம் என்று பெயர். இந்த பகுதியில் ஏகப்பட்ட புலிகள் இருந்ததால் இந்த பெயர் வந்தது. மகாபாரதத்தில் வியாக்ரபிரஸ்தம் என்று குறிப்பிடப்பட்டு கிருஷ்ணர் அஸ்தினாபுரத்தில் பாண்டவர்கள் சார்பாக கோரிய 5 கிராமங்களில் இதுவும் ஒன்று.
மொகலாயர் காலத்தில் நகரத்தின் தோட்டங்களை குறிக்கும் வகையில் பாக்பத் என்று பெயரிடப்பட்டது.
கைதல் (Kaithal) : இந்த நகரம் முன்பு கபிஸ்டல் என்று அழைக்கப்பட்டது. அதாவது கபியின் (ஹனுமான்) உறைவிடம் என்ற பொருள். இது ஹனுமன் பிறந்த இடம் என்று நம்பப்படுகிறது. பின்னர் மருவி கபிஸ்தலா என்ற மருவி கைதல் என்றானது.
ஜிந்த் (Jind) : மகாபாரத போருக்கு முன் பாண்டவர்கள் வெற்றியின் அதிபதியான ஜெயந்த் (இந்திரன்) நினைவாக ஜெயந்த் தேவி கோயிலை கட்டி வழிபட்டனர். அதனால் ஜெயந்த்புரி (ஜெயந்தி தேவியின் இருப்பிடம், இந்திரனின் மகள்) என்று பெயரிடப்பட்டது தற்போது ஜிந்த் என்று.
ரேவேரி (Revari) : மகாபாரத காலத்தில் ரேவத் என்ற அரசனுக்கு ரேவதி என்ற மகள் இருந்தாள். அவரை ரேவா என்று அழைத்தார். நகரை நிறுவிய பின் நகருக்கு ரேவா வாடி என்று பெயரிட்டார். இந்த ரேவதி கிருஷ்ணரின் அண்ணனான பல்ராமனை திருமணம் செய்து கொண்டதால் ரேவா வாடி வரதட்சணையாக வழங்கப்பட்டது. பின்னர் நகரம் ரேவாரி என்ற பெயரில்.
சிர்ஸா (Sirsa) : இதன் பழைய பெயர் சைரிஷாகா என்பதாகும். அதிலிருந்து சிதைந்து சிர்ஸா என்று வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
நகரின் அருகில் ஓடிய சரஸ்வதி நதியிலிருந்து சர்சுதி என்று இடைக்காலத்தில் இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த நகரின் சுற்றுப்புறத்தில் ஏராளமான சிரிஸ் மரங்கள் (அல்பிசியா லெப்பாக் பெண்ட்) இருப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.
யமுனா நகர் (Yamunanagar) : முன்பு அப்துல்லாபூர், ஜம்னா நகர் என்று அழைக்கப்பட்ட நகரில் ஓடும் யமுனை ஆற்றில் யமுனா நகர் என்ற பெயர் பெற்றிருக்கலாம்.
பல்வால் (Palwal) : கிருஷ்ணரின் சகோதரனான பலராமனால் கொல்லப்பட்ட பால்வாசுரன் என்ற அசுரனின் பெயரால் இந்த நகரத்திற்கு பெயர் வந்தது.
சோனிபட் (Sonipat) : மகாபாரதத்தில் பாண்டவர்கள் சார்பாக கோரிய 5 கிராமங்களுள் இதுவும் ஒன்று. மகன் பிரஸ்தா, ஸ்வர்ண பிரஸ்தா என்று அழைக்கப்பட்டது. அதாவது தங்க நகரம். ஸ்வர்ண பிரஸ்தா பின்னர் ஸ்வர்ணபாத் என்று அழைக்கப்பட்டு தற்போது உள்ள சோனிபட் என்ற பெயருக்கு மாற்றம் பெற்றது.
நர்னால் (Narnal) : ஆரம்பத்தில் நந்தி கிராமம் என்று அழைக்கப்பட்ட இந்த நகரம் பின்னர் நர ராஷ்டிரா என்று இடைக்காலத்தில் அழைக்கப்பட்டது தற்போது மருவி நர்னால் என்று அழைக்கப்பட்டது.
பஞ்சகுலா (Panchakula) : இந்த நகரம் பஞ்ச்(ஐந்து) குலா (கால்வாய்) ஆகியவற்றிலிருந்து பெயர் வந்தது. அதாவது நகருக்கு காகர் நதியிலிருந்து தண்ணீரை வினியோகம் செய்யும் 5 கால்வாய்களின் பெயரால் இந்த பெயர் வந்தது.
ஜகத்ரி (Jagatri) : இந்த பெயர் யுகந்தர அரசரின் பெயரால் யுகந்தாரி என்று அழைக்கப்பட்டு சிதைந்து ஜகத்ரி என்றானது.
மகேந்திரகர்க் (Mahendragarh) : இந்த நகரம் முன்பு கனாட் என்று அழைக்கப்பட்டது. பின்னர் பாட்டியாலா நகரத்தின் மகாராஜாவான மகேந்திர சிங்கின் பெயரால் மகேந்திரகர் என்று பெயரிடப்பட்டது.
தானேஷ்வர் (Thaneswar) : இந்த பெயர் ஸ்தானீஸ்வர என்பதிலிருந்து வந்தது. அதாவது கடவுளின் இடம் என்று பொருள்படும்.
புண்ட்ரி (Pundri) : இந்த நகரம் புண்டரிக் முனிவரின் நினைவாக புண்ட்ரி என்று பெயரிடப்பட்டது.
பஹதூர்கர் (Bahadurgarh) : இந்த நகரம் மொகலாய பேரரசர் இரண்டாம் ஆலம் கீர் என்பவரால் நிறுவப்பட்டது. அவர் பகதூர் கான் மற்றும் தேஜ் கானுக்கு இந்த பகுதிகளில் வழங்க ஷரபாபாத் என்ற பெயரிலிருந்து பஹதுர்கர் என்ற பெயருக்கு நகரத்தின் பெயர் மாற்றப்பட்டது.
தில்பத் (Tilpat) : இதன் பழைய பெயர் தில்பிரஸ்தா. பாண்டவர்களுக்காக கெளரவர்களிடம் கேட்கப்பட்ட 5 கிராமங்களுள் இதுவும் ஒன்று.
ஜாஜ்ஜர் (Jhajjar) : இந்த நகரம் சாஜூவால் நிறுவப்பட்டதாகவும் அதனால் சாஜூநகர் என்பது ஜஜ்ஜராக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நகரத்தின் பெயர் ஜார்நகர் என்ற இயற்கை நீருற்றில் இருந்து பெறப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
கோஸ்லி (Kosli) : டெல்லி மன்னரின் பேரன் கோசல் தேவ் சிங்கால் நிறுவப்பட்டதால் கோஸ்லி என்று பெயர் வந்தது.
பஃதேஹ்பாத் (Fatehabad) : ஃபிரோஸ் ஷா துக்ளக்கால் கட்டப்பட்ட நகருக்கு அவரின் மகன் பெயரால் பஃதேஹ்பாத் என்று பெயர் வைக்கப்பட்டது.
குருஷேத்ரா (Kurashetra) : பாண்டவ கெளரவர்களின் மூதாதையரான குரு மன்னரின் பெயரால் குருஷேத்திரம் என்ற பெயர் வழங்கப்படுகிறது. ஷேத்திரா என்றால் பிராந்தியம் என்ற பொருள். அதன்படி வேத காலங்களில் குருஷேத்திரம் பெரிய பிராந்தியமாக இருந்தது.
கோஹனா (Gohana) : இந்த நகரத்தின் பழைய பெயர் கவன்பவனா என்பதாகும். இதற்கு பசுக்கள் அதிகம் உள்ள இடம் என்ற பொருள். இந்த பெயர் கோ மற்றும் ஹானி என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
ஹன்சி (Hansi) : மன்னர் அனன்பால் விஹங்க்பால் தோமர் என்பவரால் தனது குருவான ஹன்சாகர் என்பவருக்காக நிறுவப்பட்ட நகரம் என்பதால் இந்தப் பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.
சிலர் பிருத்விராஜ் சவுகானின் நோய்வாய்ப்பட்ட மகள் ஹன்சிவதியால் (அம்பாவதி) நிறுவப்பட்டதால் இந்த பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர்.
பிஞ்சோர் (Pinjore) : பாண்டவர்கள் நாடுகடத்தப்பட்ட சமயத்தில் இந்த நகரில் தங்கியிருந்த காரணத்தால் பஞ்சபுரா என்று அழைக்கப்பட்டது பின்னர் மருவி பிஞ்சோர் என்றானது.
எல்லனபாத் (Ellenabad) : பிரிட்டிஷ் ஆட்சியில் ஹிசார் கவர்னராக இருந்த ராபர்ட் ஹட்ச் என்பவரால் நிறுவப்பட்டது. கரியால் மக்கள் கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியான எலினாவை வேட்டையாடும் போது பிரசவ வலி வந்த நேரத்தில் காப்பாற்றி அவருக்கு சேவை செய்ததால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இந்த நகரை நிர்மாணித்து அதற்கு தனது மனைவி எலினாவின் பெயராக எலெனாபாத் என்று நகருக்கு பெயர் வைத்தார்.
சஃபிடோன் (Safidon) : மகாபாரதத்தில் பரீசித்து மகாராஜா நகரின் சாபத்தால் பாம்பு கடித்து மரணம் அடைந்தார். அவரது மகன் ஜன்மேஜயனால் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு இந்த இடத்தில் சர்ப்யஜ்ஞா (பாம்பு பலியிடல் சடங்கு) செய்தார். இதன் மூலம் இந்த நகருக்கு சர்ப்பதாமன் என்ற பெயர் வந்தது. அது மருவி சஃபிடோன் என்றானது. ஃபிரோஸ் ஷா துக்ளக் காலத்தில் இந்த நகரம் துக்ளக்பூர் என்றும் அழைக்கப்பட்டது.
மஜ்ரா (Majra) : மஜ்ரா என்ற பெயர் மஸாரா என்பதிலிருந்து வந்தது. அதற்கு சிறிய நகரம் என்றும் சிறிய இடம் என்றும் பஞ்சாபியில் அர்த்தம்
ஃபரூக் நகர் (Faruknagar) : இந்த நகரம் மொகலாய பேரரசர் ஃபரூக்ஷியாரின் பெயரை தாங்கி அவரது ஆளுநர் ஃபவுஜ்தர் கானால் நிறுவப்பட்ட நகரம்.
அசாந்த் (Assanth) : இந்த நகரம் பழைய அசந்திவாட் ராஜ்ஜியத்துடன் தொடர்புடையது என்றும் பெரிய பேரரசர் அசோகரின் தலைமை ராணி அசந்திமித்ராவுக்கும் இந்த நகருக்கும் தொடர்புடையது என்றும் நம்பப்படுகிறது.
சர்கி தாத்ரி (Charkhi Dadri) : தாத்ரி என்ற பெயர் தாதர் என்ற ஏரியில் இருந்து பெறப்பட்டது. அருகிலுள்ள சார்கி கிர்மத்துடன் இணைந்து நகருக்கு சார்கி -தாத்ரி என்ற பெயர் வந்தது.

Comments
Post a Comment