9) கர்நாடகா


கர்நாடகா என்ற சொல்லுக்கு பல வித சொல் இலக்கியங்கள் கூறப்பட்டாலும் கரு + நாடு என்ற சொல்லே சிலப்பதிகாரத்தில் கருமையான மண் பொதிந்த நாடு என்ற பொருளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

உயரமான நிலம் என்ற பொருளில் கரு+நாடக என்று பிரித்தும் கூறுகின்றனர். தமிழில் சுத்த கர்நாடகமாக இருக்கிறாயே என்ற சொற் பதத்தில் எடுத்துரைத்தால் பழமையான நாடு என்றும் அர்த்தங்கள் கொள்ளலாம்.

இன்றைய கர்நாடகாவின் பகுதிகள் சுதந்திர இந்தியாவில் பம்பாய் பிரசிடென்சியிலும், மைசூர் பிரசிடென்சியிலும், ஹைதராபாத் நிஜாம் பிரசிடென்சியிலும், மைசூர் பிரசிடென்சியிலும் இருந்தது. பின்னர் கி.பி.1956 நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அனைத்து பகுதிகளும் இணைந்து மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் கி.பி.1973ல் மைசூர் மாநிலம் என்ற பெயர் கர்நாடகா என்று மாற்றப்பட்டது.

பெங்களூரும் அதன் புறநகர் பகுதிகளும்:

கி.பி.12 ஆம் ஆண்டு காடாக இருந்த இந்த பகுதிகளை ஆண்டு வந்த ஹொய்சாள அரசர் வீர பல்லாளன் இந்த பகுதிக்கு வேட்டையாட வந்தபோது வழி தவறிவிட்டார். காட்டில் ஓரத்தில் குடிசையில் இருந்த மூதாட்டி பசியாக இருந்த மன்னருக்கு வேக வைத்த மொச்சை பீன்ஸை உண்ண கொடுத்தார். மன்னர் மூதாட்டியின் இது என்ன இடம் என்று கேட்டதற்கு பெண் காலு என்று வேக வைத்த மொச்சை என்று கூற மன்னர் அந்த இடத்திற்கு பெண் காலூரு (வேக வைச்ச மொச்சை கொடுத்த ஊர்) என்று பெயரிட்டார். பெண்தே காலூரு பின்னர் மருவி பெங்களூர் என்றானது.

இதை பெங்களூரு ஸ்தாபித்த முதலாம் கெம்பே கவுடா தனக்கு என்று ஒரு இராஜ்ஜியம் உருவாக்கத் தேடும்போது இங்குள்ளவர் அவருக்கு வேக வைத்த மொச்சை பீன்ஸை உணவாகக் கொடுத்து வரவேற்றதால் பெண்டே காலூரு என்று பெயரிட்டதாகவும் கூறுகின்றனர்.

கி.பி.10,11 நூற்றாண்டுகளில் கங்கர்களின் ஆட்சியில் கீழ் இருந்தது.’அந்த காலத்தில் இது புறகாவலர்களாக இருந்திருக்கலாம் என்பதற்கு பழைய கன்னடத்தில் பெங்கா-வல்-ஓரு என்பதற்கு காவலர்களின் நகரம் என்ற பொருள் உண்டு. 

பெங்களூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெண் கிரானைட் கற்கள் மிகுதியாக இருந்ததால் வெண் கல்லூர் என்று அழைக்கப்பட்டு மருவி பெங்களூர் என்று கூறுபவர்.

மாரத்தஹள்ளி :  ஹள்ளி என்பதற்கு கிராமம் என்ற பொருள். மாரத்த என்பது இங்கு விபத்துக்குள்ளான மாருட் வகை விமானத்தின் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஆனால் அதை மறுத்து மாரத்த என்பது இங்குள்ள பழைய அனுமன் கோயிலின் பெயரால் மாருதி என்ற சொல்லில் இருந்து மாரத்தஹள்ளி என்ற பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.

BTM லே அவுட்:  பன்னார்கட்டா, தாவரேகெரே, மடிவாலா ஆகிய மூன்று இடங்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த மூன்று இடங்களின் முதல் ஆங்கில எழுத்தில் இருந்து தான் BTM லேஅவுட் என்ற பெயர் வந்தது.

HSR லேஅவூட்:  ஓசூர் மற்றும் சர்ஜாபூர் சாலை ஆகிய இரண்டுக்கும் இடையே அமைந்துள்ள H என்பது ஹோசூரில் இருந்தும் SR எழுத்துக்கள் Sarjapur Road என்பதில் இருந்தும் இணைந்து HSR லேஅவுட் என்ற பெயர் வந்தது.

டோம்லூர் :  இந்த இடம் முன்பு பகத்சிங் நகர் என்று அழைக்கப்பட்டது. சிவபெருமானின் தொடர்புடைய மலரின் பெயரிலிருந்து தொம்பலூர் என்பது மருவி டோம்லூர் என்றானது என்றும் கூறுகின்றனர்.

ஜெயாநகர்:  ஜெயா நகர் என்பது வெற்றி நகரம் என்ற பெயரிலிருந்து வந்தது என்று கூறுவர்.

பசவன்குடி :  இந்த பகுதி நந்தியின் ஒற்றைக்கல் அமைப்பை கொண்ட காளை கோயில் காரணமாக வந்தது என்று கூறுவர். பசவா என்றால் காளை குடி என்றால் கோயில் என்று கன்னடத்தில் பொருளுண்டு. அதன்படி காளை கோயில் காரணமாக பசவன்குடி என்றானது.

பனசங்கரி :  இங்குள்ள பனசங்கரி அம்மன் கோயில் காரணமாக இந்த இடத்திற்கு பனசங்கரி என்று பெயர் வந்தது. தமிழில் வனசங்கரி அம்மன் என்ற அர்த்தத்தில் இருந்து பார்த்தால் இந்த இடத்தில் முன்பு காட்டுக்கோயிலாக இருந்திருக்கலாம்.

ராஜாஜி நகர்:  இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மற்றும் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த மூதறிஞர் இராஜகோபாலாச்சாரியார் பெயரை தாங்கி ராஜாஜி நகர் என்று பெயர் வந்தது.

நாகர்பவி :  நாகா என்றால் பாம்பு என்றும் பாவி என்றால் கிணறு என்றும் அர்த்தம். இங்கு ஏராளமான பாம்புகள் இருந்த காரணத்தால் சிறிய மணற் குன்றுகள் கிணறுகள் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்த காரணத்தால் இந்தப் பெயர் வந்ததாகக் கூறுபவர்.

ஓயிட்பீல்ஃட் :  19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த பகுதி மக்கள் வசிக்காத பகுதியாக இருந்ததால் அப்போதைய மைசூர் மன்னரான ஓன்பதாம் சாமராஜ உடையார் யூரோப்பியன் மற்றும் ஆங்கிலோ-இந்திய சங்கத்தின் தலைவரான டி.எஸ்.ஓயிட் என்பவருக்கு வழங்கப்பட்டது. அதனால் ஒயிட் என்பவரின் அடையாளமாக ஓயிட்பீல்ஃட் என்ற பெயர் வந்தது.

சதாசிவ நகர்:  இந்த இடம் முன்பு அரண்மனை பழத் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. பின்பு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான சதாசிவ ராவின் நினைவாக சதாசிவ நகர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

மல்லேஸ்வரம் :  இந்த ஊர் முன்பு மல்லபுரா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த பகுதியில் முன்பு காடாக இருந்தது. இங்குள்ள காடு மல்லேசுவரா கோயிலின் காரணமாக மல்லேஸ்வரம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

சிவாஜி நகர்:  மராத்திய சக்ரவர்த்தி சத்ரபதி சிவாஜி மகாராஜ் நினைவாக சிவாஜி நகர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

கர்நாடகாவின் பிற ஊர்கள் :

தலக்காடு :  தல மற்றும் காடா என்ற இரு வேடவ சகோதரர்கள் இந்த வீட்டில் வசித்து வந்தனர். இந்த இடத்தில் இருந்த குளத்தில் இருந்த நீரை யானைகள் தும்பிக்கையால் எடுத்து வந்து அருகே இருந்த சால்பரி மரத்தில் ஊற்றி வழிபாடு நடத்தின. யானைகள் இல்லாத நேரம் பார்த்து சகோதரர்கள் சால்பரி மரத்தை வெட்டினர். மரத்தில் உள்ளே இருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. அங்கே வந்த யானைகள் தவ முனிவர்களாக மாறினர். மரம் மீண்டும் உயிர்த்தெழுந்து பழைய மாதிரி ஆயிற்று. அதனால் இந்த வனம் தலக்காடு என்று பெயர் பெற்றது. இன்றும் இங்குள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் எதிரே இந்த இரு சகோதரர்களின் கற்சிலைகள் உள்ளன.

மங்களூர்:  இந்த நகரத்தின் பழைய பெயர் மங்களபுரம். புராணங்களின் படி கேரளாவை சேர்ந்த இளவரசி மங்களாதேவி இங்குள்ள யோகி மத்ஸ்யேந்திரநாத்தை மணந்தார். அதனால் ஊருக்கு மங்களபுரம் என்ற பெயர் வந்து மருவி மங்களூர் என்றானது.

உடுப்பி:  உடு என்றால் நட்சத்திரம் பா என்றால் தலைவன். நட்சத்திரங்களின் தலைவன் என்ற பொருள். இதுவே மருவி உடுப்பி என்றானது. சந்திரனுக்கு 27 மனைவியர் இருந்தும் மூத்த மனைவியின் ரோஹினி மீது மட்டும் அலாதி பிரியம். இதனால் மற்ற மனைவிகள் தங்கள் தந்தையிடம் புகார் கூற அவர் சந்திரனுக்கு இன்று முதல் தேய்ந்து போவாய் என்று சாபமளிக்க சந்திரன் உடுப்பி வந்து கிருஷ்ணரை வழிபட்டு பாவத்தை போக்கினார். அதனால் நட்சத்திரங்களின் தலைவனான சந்திரனின் பாவத்தை போக்கியதால் இந்த ஊருக்கு உடுப்பி என்று பெயர் வந்தது.

தும்கூர் :  இங்கு தென்னை மரங்கள் அதிகம் இருப்பதால் கல்பதரு நாடு என்றும் அழைக்கப்பட்டுள்ளது. சோழர்களின் ஆட்சியின் போது கூளூர் என்றும் அழைக்கப்பட்டதாகக் கூறுவர். தும்பே ஊரு என்பதிலிருந்து தும்கூரு என்று பெயர் வந்திருக்கலாம். தும்பே ஹூவு என்பது இங்கு பயிராகும் ஒரு வகையான பூ. அதிலிருந்து பெயர் வந்திருக்கலாம்.

மததே ஊரு என்பதிலிருந்து வந்திருக்கலாம் எனவும் கூறுவர். ஒருவகையான நாட்டுபுற இசைக்கருவியான தமடே என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கூறுவர். 

உயரமான இடம் என்பதால் காவலர்கள் எச்சரிக்கை எழுப்ப ஒரு வகையான டிரம் இசைக்கருவி (துமாகி) உடன் எப்போதும் இருப்பார்கள். அதிலிருந்து கூட தும்கூரு என்று பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.

ஹாசன் :  ஹாசனம்பா என்ற பெண் தெய்வத்தின் பெயரிலிருந்து இந்த ஊர் பெயர்.

மைசூர் :  எருமையூர், மையூர், மகிசூர் என்ற பெயர்களால் வழங்கப்பட்டது. எருமை வடிவம் எடுத்து மகிஷாசூரனைக் கொன்றதால் தன் பெயர் வழங்கப்படவேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் மகிஷாசூர், மகிசூர் என்ற பெயர்களுக்கு மருவி மைசூர் என்ற பெயர் வழங்கப்பட்டது.

ஹூப்ளி (ஹூப்பள்ளி) :  ஹூப்பள்ளி என்னும் சொல்லுக்கு கன்னட மொழியில் பூக்கும் கொடி என்ற பொருள். தமிழில் பூப்பள்ளி என்றால் அர்த்தம் வரும்.

சரவணபெலகுளா :  இந்த இடத்தை பெகோனா என்று சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சரவணாவின் வெள்ளைக்குளம் என்பதை குறிக்கும் வகையில் சரவணபெலகுளா என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

கோலார் :  இந்த ஊரின் பழைய பெயர் குவலாளபுரம். இங்குள்ள கோலரம்மா கோயில் தெய்வத்தின் பெயரிலிருந்து கோலார் என்ற பெயர் வந்தது. கோலரம்மாவை துர்க்கையின் வடிவில் வணங்கும் கோயில் உள்ளதால் ஊருக்கும் கோலார் என்று பெயர் மருவியது.

ஷிமோகா :  கன்னடத்தில் மோகா என்றால் முகம் என்ற பொருள் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் பூக்களின் மொட்டுகள் என்பதால் சிவமோகா என்ற பதத்தில் சிவமோகா என்ற பெயர் வந்தது மருவி ஷிமோகா என்றானது.

குல்பர்கா (அல்லது) கலபுரகி :  குல் என்றால் பூ. பர்கா என்றால் தோட்டம். முன்பு இங்கு மலர் தோட்டங்களுடன் கூடிய பல வீடுகள் இருந்த காரணத்தால் பூக்கள் நகரம் அல்லது பூக்கள் தோட்டம் என்ற பொருள்பட குல்பர்கா என்றானது. பின்னர் கன்னட அரசு கலபுரகி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கலபுரகி என்றால் கல்பரப்பி. கல்லை பரப்பி வைத்தது போல இந்நகரம் காணப்படுவதால் கல்பரப்பி என்ற அர்த்தத்தில் கலபுரகி என்ற பெயர் வந்தது.

பெல்காம் (அல்லது) பெலகாவி :  மூங்கில் தாவரங்கள் அதிகமாக இருந்ததால் வேணு கிராமம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் பெயர் மருவி பெல்காம் என்றும் தற்போது பெலகாவி என்றும் கூறப்படுகிறது.

சிக்மகளூர்:  மலைகளுக்கு புகழ்பெற்ற நகரமானது தனது இளைய மகளின் திருமணத்திற்கு வரதட்சணையாக வழங்கப்பட்டது ஊர் என்பதால் சின்ன மகள் ஊர் என்ற கன்னட பெயராக சிக்மகளூர் என்ற பெயர் வந்தது.

பெல்லாரி :  ஆரம்ப காலத்தில் பல்லாரி என்றழைக்கப்பட்டது. உள்ளூர் காவல் தெய்வமான துருகம்மாவின் பெயரான பலாரி என்ற பெயரிலிருந்து பல்லாரி என்றழைக்கப்படுகிறது.

இன்னொரு கதையாக இந்த நகரத்திற்கு பயணித்த வணிகர்கள் வணங்குவதற்கு சிவன் கோயில் இல்லாததால் பல்லவை (தானியங்களை அளக்க உதவும் படி அளவை) தலைகீழாக லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்து சிவனாக வழிபட்டனர். இதனால் பல்லீஸ்வர் என்ற கோயில் உள்ளது. இதன் காரணமாக பல்லாரி என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுவர். 

இந்திரன் பல்லா என்ற அரக்கனை கொன்றதால் இந்த பெயர் வந்தது என்றும் கூறுவர்.

பிஜப்பூர் (விஜாபுரா, விஜயபுரா) :  சாளுக்கியர் ஆட்சியில் இந்த நகரம் வெற்றியின் நகரம் என்று பொருள்படும்படி விஜயபுரா என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் சுல்தான்களின் ஆட்சியின் போது பிஜப்பூர் என்றானது. இது மாதுளையின் பெயரிலிருந்து சமஸ்கிருதத்தில் "பீஜ்பூர்" என்ற சொல்லில் விதைகள் நிறைந்தது என்பது அர்த்தமாகும்.

ஹோஸ்பெட் (ஹோசப்பேட்டை) :  விஜய நகரத்து கிருஷ்ணதேவ ராயரால் அவரது தாயார் நாகலாம்பிகை நினைவாக கட்டப்பட்ட நகரம் என்பதால் நாகலாபுரா என்று அழைக்கப்பட்டது. புதிய நகரமாக கட்டப்பட்டதால் "ஹோசாபீட்" வழங்கப்பட்டது மருவி ஹோஸ்பெட் ஆனது.

சிக்கபல்லாபூர்:  சிக்கா என்றால் கன்னடத்தில் சிறியது என்ற பொருள். பல்லா என்றால் தானியங்களை அளக்க எடை போடும் உருளை படி . உணவு தானியங்களை எடை போடும் சிறிய அளவீட்டு கருவிகளை பயன்படுத்திய இடம் என்ற பொருளில் சிக்கபல்லாபூர் என்ற பெயர் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஹளபேடு :  ஹொய்சாளர்களின் தலைநகரமாக இருந்த இந்த ஊர் முன்பு துவாரசமுத்திரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த நகரம் பாமினி சுல்தான்களால் இரண்டு முறை அழிக்கப்பட்டு சிதிலமாக ஆனதால் ஹளபேடு என்று அறியப்படுகிறது. ஹளபேடு என்றால் பழமையான நகரம் என்று பொருள்.

சாம்ராஜ் நகர்:  மைசூரின் ஒன்பதாம் சாம்ராஜ உடையாரின் நினைவாக இந்த ஊருக்கு சாம்ராஜ் நகர் என்ற பெயர் வந்தது.

ஹவேரி :  கன்னட சொற்களான ஹாவு, கேரி என்ற சொற்களில் இருந்து உதயமானதாகக் கூறுவர். இதற்கு பாம்பின் இடம் என்ற பொருள்.

பாதாமி :  பாதாமியில் இரண்டு நரமாமிசம் உண்ணும் அசுர சகோதரர்களான வாதாபி மற்றும் இல்வல வாழ்ந்து வந்தனர். இளையவனான வாதாபிக்கு துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டாலும் மீண்டும் உயிர்பெறும் சக்தி வரமாக கிடைத்தது. அதனால் அந்த வழியாக போவோருக்கு விருந்து வைப்பதாக கூறி இளைய சகோதரனை ஆண்டு உருவம் எடுத்து வெட்டி மாமிசம் படைத்து முடித்தவுடன் வாதாபி வெளியே வா என்று அழைக்க வாதாபி அவர் உண்டவரின் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்து அவர்களை கொன்று தின்பது வழக்கம். இந்த வழியே போன அகஸ்திய முனிவரிடம் சகோதரர்கள் இதே வேலையைக் காண்பித்தார் அவர் தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்து சாப்பிட்டு முடித்தவுடன் "ஜீரணமாகு வாதாபி" என்று கூற மூத்தவன் இல்வல வாதாபி வெளியே வா' என்று கூற வாதாபியால் மீண்டும் உருக முடியாமல் போக மூத்த சகோதரன் கோபமுற்று அகஸ்திய முனிவரைத் தாக்கினார்.

பாதாமி என்பது நாட்டுப்புற தெய்வமான படுபே என்ற பெயர் திரிந்து வந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இங்குள்ள இயற்கையான பாதாம் நிற மலைகள் காரணமாக பாதாமி என்ற பெயர் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

பத்ராவதி:  இந்த ஊரின் பழைய பெயர் பென்கிபுரா அல்லது பெண்கி பட்டனா என்பதாகும். இந்த நகரின் வழியே பாயும் பத்ரா ஆற்றின் பெயரால் இந்த நகருக்கு பத்ராவதி என்ற பெயர் வந்தது.

ஶ்ரீரங்கப்பட்டினா :  இங்குள்ள அரங்கநாதசாமி கோயிலின் காரணமாகவே இந்த நகருக்கு ஶ்ரீரங்கப்பட்டினம் என்ற பெயர் உண்டாயிற்று.

மாண்டியா :  முன்பு மாண்டவா என்ற முனிவரின் பெயர் காரணமாகவே மாண்டியா என்ற பெயர் வந்தது.

பிடார் :  பிடார் என்ற பெயர் மூங்கில் என்று பொருள்படும் பிடிரு என்ற சொல்லிலிருந்து உருவானதாக கூறப்படுகிறது. விதுரன் இங்கு வாழ்ந்தால் இந்த நகர் முன்பு விதுர நகர் என்று அழைக்கப்பட்டது.

ராயச்சூரு :  ராயா என்ற கன்னட சொல்லுக்கு அரசன் என்ற பொருள். ஊர் என்றால் நகரம். அரசனின் இடம் என்பது பொருள். இதிலிருந்து ராயச்சூரு என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். 

சிலர் தெலுங்கில் ராய் என்றால் கல். ஊர் என்றால் நகரம் என்ற பொருளில் கற்களால் ஆன நகரம் என்ற பொருளில் ராயச்சூரு என்ற பெயர் வந்தது என்றும் கூறுவர்.

சித்ரதுர்கா :  அழகான விசித்திரமான வடிவங்களில் கற்பாறைகள் கொண்ட கோட்டை என்பதால் இந்த இடத்திற்கு சித்ரதுர்கா என்ற பெயர்.

யாத்கிரி :  முன்பு யாதவர்களின் தலைநகராக இருந்த காரணத்தால் யாதவகிரி என்று அழைக்கப்பட்ட இந்த நகரம் தற்போது யாதகிரி என்ற பெயரில் உள்ளது.

சோமநாதபுரம் :  இந்த ஊரிலுள்ள கேசவர் கோயில் ஹொய்சாள மன்னன் மூன்றாம் நரசிம்மனின் ராணுவ தளபதியான சோமநாதரால் மன்னரின் அனுமதியுடன் கட்டப்பட்டது. கோயிலை சுற்றி ஒரு சிறிய நகரை உருவாக்கினார். அதனால் நகரம் அவரது பெயரில் சோமநாதபுரா என்று வழங்கப்பட்டது.

அர்சிகெரே:  இந்த ஊர் முன்பு உத்பவ சர்வஜன விஜயம் என்ற பெயரிலும் பல்லாலபுரம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. போசள வம்சத்து இளவரசி ஊருக்கு அருகில் ஒரு ஏரியை கட்டினார். அரசி என்றால் ராணி என்ற பொருள். கெரே என்றால் ஏரி என்ற பொருள். அரசிய + கெரே என்ற ராணியின் குளம் என்ற பொருளில் மருவி அர்ச்சிகெரே என்றானது.

குலோஸ்பேட் (ராம்கர், ராமநகரா) :

 கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ ஜெனரலான சர் பாரி குலோஸின் நினைவாக இந்த ஊர் குலோஸ்பேட் என்று அறியப்படுகிறது. 

நந்தி ஹில்ஸ்:  சோழர்கள் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என்று அழைக்கப்பட்டது. இங்கு யோக நந்தீஸ்வரர் தவம் செய்த காரணத்தால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.

இம்மலை துயில் கொள்ளும் நந்தியின் உருவத்தில் வடிவமைப்பதால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறுவர்.

மேக்தாத் :‌‌. மேக்க என்றால் ஆடு என்ற பொருள்.'ஆற்றுநீர் குறுகலான பாறை வழியாக பாய்ந்து செல்கிறது. புலி துரத்தி வந்த நிலையில் ஆடு ஒரே பாய்ச்சலாக இதை தாண்டி சென்று தப்பித்ததால் மேக்கேதாட் (ஆடு தாண்டி கல்) என்ற பொருளில் மருவி மேக்தாத் என்ற பெயர் வந்தது.

கஜேந்திரகாட் (கதா) :  மேலே உயரத்தில் இருந்து பார்த்தால் இந்த நகரம் யானையின் உடலை போன்று தோற்றமளிக்கும். கஜேந்திரா என்றால் யானை என்றும் காட் என்றால் கோட்டை என்றும் பொருள். இரண்டு வார்த்தைகளின் அர்த்தங்களும் சேர்ந்து கஜேந்திரகாட் என்ற பெயர் வந்தது. உள்ளூர் மக்கள் இந்நகரை கதை என்ற பெயரில் அழைக்கின்றனர்.

சிந்தாமணி :  சிந்தாமணி என்ற பெயரில் உள்ள நவரத்தினத்திற்கும் இந்த ஒரு தொடர்பும் இல்லை. மராத்திய தலைவர்களில் ஒருவரான சிந்தாமணி ராவ் பெயரால் இந்த நகரம் பெயரிடப்பட்டது என்று கூறுவர்.

சோகல் :‌. இந்தப் பகுதியில் வாழ்ந்த சுகோலா முனிவரின் பெயரால் இந்த நகருக்கு இந்தப் பெயர் வந்ததாகக் கூறுபவர். ஒரு கல்வெட்டில் இந்நகரின் பெயர் சோவாலா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுப்ரமண்யா :‌  முதலில் இந்த நகரம் குக்கே பட்டணம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள சுப்ரமணியர் கோயில் காரணமாக ஊரின் பெயரும் சுப்ரமண்யா என்றும் காரணம்.

நஞ்சன்கூடு :  இங்குள்ள இயக்கிரீகண்டேஸ்வரர் என்னும் நஞ்சுண்டேஸ்வரர் கோயிலின் காரணமாக ஊர் பெயர் நஞ்சன்கூடு என்றானது என்று கூறுவர்.

ஹரிகர் (ஹரிஹரா) :  இந்த ஊரிலுள்ள ஹரிஹரேஸ்வரர் கோயிலின் காரணமாக ஹரிகர் என்ற பெயர் வந்தது என்று கூறுவர்.

கோகர்ணா :  கோகர்ணா என்றால் பசுவின் காது என்று அர்த்தம். சிவன் பிரம்மாவால் பாதாள லோகத்துக்கு அனுப்பப்பட்ட பிறகு பசுவின் காதில் சிவன் தோன்றியதால் இந்த பெயர் வந்தது என்கிறார்கள். சிவலிங்கம் பசுவின் காதை போல தோற்றமளிப்பது மட்டுமல்ல மிகவும் மென்மையாகவும் இருக்கும். இமயமலையில் சிவனிடம் இருந்து பெற்ற ஆத்மலிங்கத்தை இலங்கையில் பிரதிஷ்டை செய்து இராவணன் கொண்டு போன போது மாடு மேய்க்கும் சிறுவன் உருவில் விநாயகர் அவனை ஏமாற்றி கோகர்ணத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த லிங்கம் இதுவே. ஊருக்கும் கோகர்ணா என்ற பெயர் வந்ததற்கு காரணமும் இதுவே.

கங்காவதி மற்றும் அகநாசினி ஆகிய இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் பசுவின் காது போன்ற தோற்றமளிப்பதால் கோகர்ணா என்ற பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர்.

கைவாரா :  இந்த நகரம் துவார யுகத்தில் ஏகசக்ரபுரா என்று அழைக்கப்பட்டது. அருகில் உள்ள மலையில் தான் பீமன் பகாசுரன் என்ற அரக்கனை கொன்ற நிகழ்வு நடந்ததாக பாகவதம் கூறுகிறது. இங்குள்ள அமரநாராயணா கோயிலில் இந்திரன் தனது மனைவிகளான ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நாராயணின் சிலையை நிறுவி அவரை புகழ்ந்து பக்தி பாடல்களை பாடினார். சிறிய வசனங்கள் கொண்ட பக்தி பாடல்கள் கைவர என்று அழைக்கப்பட்டன. அதனால் இந்த நகரத்திற்கு கைவாரா என்ற பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.


மேல் கோட்டை :

இந்த நகரில் இராமானுஜர் முயற்சியால் மண்ணில் புதையுண்ட செலுவநாராயணா கோயில் ஹொய்சாள விஷ்ணுவர்த்தன் உதவியால் மீட்கப்பட்டது. நகருக்கு திருநாராயணபுரம் என்ற பெயரும் வந்தது. மலை மேல் பகரகலாதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நரசிம்மர் கோயில் கோட்டையில் இருந்ததால் மேல் கோட்டை என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து