8) ஆந்திரா & தெலுங்கானா
பண்டைய காலத்தில் இந்த மாநிலத்திற்கு ஆந்திரா என்று எப்படி பெயர் வந்தது என்பதற்கான சொற்பிறப்பியல் காரணம் தெரியவில்லை என்று தான் கூறுகின்றனர். ரிக் வேதத்தில் விஸ்வாமித்திரர் தனது மகனை 50 பழங்குடியின மக்களுடன் இணைந்து வாழாத காரணத்தால் விரட்டியடித்தார் என்று கூறுகிறது. அதில் ஒரு பழங்குடியின மக்களின் பெயர் ஆந்திரா என்பதாகும். இந்த காரணத்தால் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
வாயு புராணம் இந்த பகுதிகளை ஆட்சி செய்த சாதவாகனர்களை ஆந்திர பிரித்தியர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
சந்திரகுப்த மெளரியரின் தூதுவரான மெகஸ்தனிஸ் மெளரியர்களுக்கு அடுத்த வலிமையான இராணுவத்தை ஆந்திரர்கள் வைத்திருந்தனர் என்று குறிப்பிட்டார்.
சமஸ்கிருதத்தில் ஆந்திரா என்றால் வேட்டையாடுபவன் என்று பொருள். சங்க இலக்கியங்களில் வேட்டை நாய்களை வைத்திருந்த வடுகர்கள் தான் தெலுங்கர்கள் என்று குறிப்பிடுவது இதனுடன் ஒத்துப் போகிறது.
பாலி பேரரசரின் மகனான ஆந்திரா என்பவர் இந்த பகுதிகளை கைப்பற்றியதால் தனது பெயரை இந்த பிரதேசத்திற்கு வைத்ததாக பாகவதம் கூறுகிறது.
புத்த இலக்கியங்கள் ஆந்திராவை ஆந்தரட்டா (ஆந்திர ராஷ்டிரா) என்று குறிப்பிட்டுள்ளன.
பண்டைய காலத்துக்கு முந்தைய பழங்குடியினர் துங்கபத்திரா மற்றும் ஹந்திரி ஆற்றங்கரையில் வாழ்ந்து பின்னர் தெலுங்கு பிரதேசங்களில் பரவியதாக சொல்லுவதால் ஆற்றங்கரையில் வாழ்ந்தவர்கள் என்ற பொருளில் ஆந்திரர்கள் என்று பெயர் வழங்கப்பட்டதாக கூட சொல்லுவார்கள்.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு ஆந்திர பிரதேசத்தின் பகுதிகள் சென்னை மாகாணத்துடன் இருந்தது. தெலுங்கானா பகுதிகள் ஹைதராபாத் நிஜாம் வசம் இருந்தது. இந்திய சுதந்திரம் அடைந்தவுடன் ஒரே தெலுங்கு மொழி பேசும் என்ற அளவில் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திர பகுதிகள் பிரிக்கப்பட்டு தெலுங்கானா பகுதியுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம் என்று கி.பி.1955ல் முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திர பிரதேசம் உருவானது. அப்போதே தெலுங்கானா மக்கள் இந்த இணைப்பை ஏற்கவில்லை. பின்னர் தனி தெலுங்கானா போராட்டங்கள் தீவிரமடைந்தாலும் அரசின் முயற்சியால் இந்த போராட்டம் ஒடுக்கபப்பட்டது. பின்னர் கி.பி.2014ல் ஆந்திராவிலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு தனி மாநிலமாயிற்று.
ஹைதராபாத் : இன்றைய ஹைதராபாதின் பழைய பெயர் பாக்யா நகர். இதன் சுல்தானான முகம்மது குலி குதுப் ஷா இந்த நகரத்தை நிறுவிய பின்னர் இதன் கிராமத்தை சேர்ந்த பஞ்சார இனப்பெண்ணான பாக்யமதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனால் இந்த நகருக்கு பாக்யா நகர் என்று பெயரிட்டார். பாக்யமதி இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின் ஐதர் மஹால் என்று பெயர் சூட்டி கொண்டார். அதனால் ஐதர்-ஆ-பாத் (ஐதர் நீடூழி வாழ்க) என்ற பொருளில் இந்த நகருக்கு ஐதராபாத் என்ற பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.
இஸ்லாமிய ஞானி முகமது என்பவரின் மருமகனான அலி இப்ன் அலி தாலிபின் மற்றொரு பெயர் ஐதர் என்பதாகும். அதன் மூலமே இந்த நகருக்கு ஐதராபாத் என்று பெயர் ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் ஹைதர் அலியின் பெயரால் இந்த நகருக்கு பெயர் ஏற்பட்டு இருக்கலாம் என்றாலும் ஹைதர் அலியின் காலத்திற்கு முன்பே இந்த நகருக்கு ஐதராபாத் என்ற பெயர் இருந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.
செகந்திராபாத் : ஹைதராபாதின் இரட்டை நகரமாக அறியப்பட்ட இந்நகரம் உசேன் சாகர் ஏரியால் பிரிக்கப்பட்டு இருந்தாலும் ஹைதராபாத் நகரின் ஒரு பகுதியாகவே அழைக்கப்படுகிறது. ஆசப் சாகி அரச குடும்பத்தின் மூன்றாம் நிஜாமாக இருந்த சுல்தான் சிக்கந்தர் ஷா என்பவரின் பெயரை முன்வைத்து சிக்கந்தராபாத் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி செகந்திராபாத் என்று அழைக்கப்படுகிறது.
அமராவதி : இதன் பழைய பெயர் ஒளதும்பரவதி என்பதாகும். சமஸ்கிருத உச்சரிப்பில் உம்ராவதி. பழமையான அம்பா தேவியின் கோயிலால் இந்த ஊருக்கு பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.
இதன் பழைய பெயர் உடும்பராவதி என்றும் இங்கு ஆடி மரங்கள் அதிகமாக இருந்ததால் இந்த பெயர் வந்ததாகவும் பின்னர் உம்பராவதி என்று மருவியும் உம்ராவதி என்றும் மருவி அமராவதி என்றும் ஆனது என்றும் கூறுகின்றனர்.
அசுரனை அழிக்க தேவர்கள் சிவனை வழிபட்ட இடம் இது. தேவர்களை அமரர்கள் என்றும் அழைப்பார்கள். அதனால் இந்த ஊருக்கு அமராவதி என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.
ஒங்கோல் : ஒங்குலு கிட்டா இன் மக்கள் காரணமாக ஒங்கோல் என்ற பெயரால் அழைக்கப்பட்டு இருக்கலாம் என்கின்றனர்.
அனந்தப்பூர் : முடிவில்லாத பெருங்கடல் என்ற அர்த்தத்தில் அநாதசாகரம் என்ற பெயர் கொண்ட பெருங்குளம் விஜயநகர மன்னரான புக்கரின் அமைச்சரான அனந்தராவ் சில்க்கவோடேயாவால் கட்டப்பட்டது என்பதால் அவரின் பெயரால் அமைந்தது என்று கூறுகின்றனர். சிலர் புக்கரின் ராணிகளுள் ஒருவரின் பெயரால் அழைக்கப்பட்டது என்று கூறினாலும் அவரது ராணிகளின் பெயர் இதுவல்ல என்பதால் அமைச்சரின் பெயர் காரணமாகவே ஊருக்கு அனந்தப்பூர் என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இந்துபூர் : மராட்டிய தலைவர் முராரி ராவின் தந்தையார் ஹிந்தோஜி ராவ் பெயரால் ஹிந்துபூர் என்று அழைக்கப்பட்டு மருவி இந்துபூர் என்றானது என்று கூறுகின்றனர்.
விஜயவாடா : ஒரு கோரிக்கையின் அடிப்படையில் அர்ஜூனன் மலைகளின் வழியே தனது அம்பினால் பெஜ்ஜம் (துளை) செய்தார். இதனால் கிருஷ்ணா நதி வங்காள விரிகுடாவில் கலக்க முடிந்தது. அதனால் பெஜ்ஜம்வாடா என்று இந்த ஊருக்கு பெயர் வந்து மருவி பெஸவாடா என்று மருவியது.
இங்குள்ள கனகதுரா கோயிலின் துர்காதேவி அரக்கனை கொன்று நகரத்தில் சிறிது காலம் ஒய்வெடுத்ததால் "விஜயா" அல்லது வெற்றி என்று பொருள்படும்படி இந்த ஊருக்கு விஜயவாடா (வெற்றி இடம்) என்ற பெயர் வந்தது என்றும் கூறுவர்.
மகாபாரதத்தின்படி அர்ஜூனன் சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரத்தை பெற்ற இடம் என்பதால் விஜயவாடிகா என்ற பெயர் வந்ததாகவும் மருவி விஜயவாடா என்று மாறியதாகவும் கூறுவர்.
நெல்லூர் : நெல் + ஊர் என்ற சொற்களின் இணைப்பினால் நெல்லூர் என்றானது. பெயருக்கேற்ப நெல் வயல்கள் மிகுந்த விவசாய பூமி.
குப்பம் : பொருளாதாரத்தில் சமூகத்தில் பின்தங்கிய மக்கள் கூட்டம் கூட்டமாக வாழும் இடத்திற்கு குப்பம் என்று பெயர். வேலை வாய்ப்புக்காக இவ்வாறு மக்கள் கூட்டமாக வாழ்ந்ததால் குப்பம் என்ற பெயர் வந்ததாக கூறுவர்.
திருப்பதி : திரு என்றால் இறைவன் குடி கொண்ட என்று அர்த்தம். மேலே இந்த திருமலையில் வெங்கடாசலபதி கோயிலும் கீழே திருப்பதியில் பத்மாவதி தாயாரும் குடிகொண்டுள்ளதால் திருப்பதி என்றே அழைக்கப்படுகிறது. மேல் திருப்பதி கீழ் திருப்பதி என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஶ்ரீ காளகஸ்தி : சிவனின் ஆணைப்படி பிரம்மதேவன் கயிலாயத்தை உருவாக்கிய போது அதன் ஒரு பகுதி பூமியில் விழுந்தது. அந்த இடமே சீகாளத்தி என்ற ஶ்ரீ காளஹஸ்தி என்று கூறுகின்றனர்.
சீகாளத்தி என்பது சீ + காளம் + அத்தி என்று பொருளால் அழைக்கப்படுகிறது. சீ என்றால் சிலந்தி . காளம் என்றால் பாம்பு என்றும் அத்தி என்றால் யானை என்றும் பொருள். இந்த உயிர்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தலம் என்பதால் ஶ்ரீ காளஹஸ்தி என்ற பெயர் வந்தது என்று கூறுவர்.
ஶ்ரீ சைலம் : இந்த ஊரின் பழைய பெயர் திருப்பருபதம் என்பதாகும். சிலாத முனிவரின் மகனான நந்தி தேவரின் தம்பியான பர்வதன் கடும் தவம் புரிந்து சிவனின் பாதம் தன் மேல் எப்போதும் இருக்க வேண்டும் என்று வரம் கேட்க அவரை மலையாக ஆக்கி ஶ்ரீ பர்வதம் என்று பெயரிட்டு அவர் அங்கு எழுந்தருளினார். ஶ்ரீ பர்வதம் என்ற பெயரை மருவி ஶ்ரீ சைலம் என்றானது. சைலம் என்பதற்கு மலை என்று பொருளும் உண்டு.
நகஶ்ரீ என்ற சிவபக்தை தவமிருந்து சிவபெருமானிடம் இத்தலம் தனது பெயரால் வழங்கப்பட வேண்டும் என்று பெற்ற வரத்தால் நகஶ்ரீ என்பது ஶ்ரீ நகம் என்று மாறி பின்னர் மருவி ஶ்ரீ சைலம் என்றானது என்றும் கூறுவர்.
நந்தியால் : சிலாதர் என்ற முனிவர் இறைவனை குழந்தை வரம் வேண்டி இரு குழந்தைகளாக நந்தி மற்றும் பர்வதன் பிறந்தனர். நந்தி தேவருக்கு ஆயுள் குறைவு என்று முனிவர்கள் கூற இறைவனை நோக்கி தவமிருந்து சாகாவரம் பெறுவேன் என்று தவம் செய்து இறைவனின் அருளை பெற்றார். அது முதல் சிவனின் கோயில் முன்பு நந்தி தேவரின் அனுமதியின்றி யாரும் காண முடியாது என்ற வரத்துடன் தனது வாகனமாகவும் அவரை ஏற்றுக்கொண்டார். நந்தி தேவர் சிவனை நோக்கி தவம் செய்த இடமே நந்தியால் என்று அழைக்கப்படுகிறது
விசாகப்பட்டினம் : இது முன்பு விசாகா, வால்டேர் மற்றும் விசாகப்பட்டினம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஆந்திர அரசர் ஒருவர் தனது குல தெய்வமான விசாகத்தை வணங்க இங்கு கோயில் கட்டினார். அதனால் இந்த ஊருக்கு விசாகா என்ற பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.
புத்தரின் சீடர்களுள் ஒருவரான விசாகா என்பவரின் பெயரால் அழைக்கப்பட்டது என்றும் கூறுவர்.
மன்னர் ஒருவரால் வைசாகருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் கட்டப்பட்டதால் பெயர் வந்தது என்றும் கூறுவர்.
சோழன் குலோத்துங்கன் பெயரால் குலோத்துங்க பட்டினம் என்ற பெயரால் கூட அழைக்கப்பட்டது.
முஸ்லீம் துறவியான சையத் அலி மதனி (இஷாக் மதனி) என்பவரின் பெயரால் இஷாகப்பட்டினம் என்று அழைக்கப்பட்டு மருவியது என்றும் கூறுவர்.
பிரிட்டிஷ் அரசாட்சி காலத்தில் புறநகர் பகுதி வால்டேர் என்றும் அழைக்கப்பட்டது. வைசாக் என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டது.
விஜயநகரம் (ஹம்பி) : கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஜஸ்வர்யம் பெற்ற சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைவரான வித்யாரண்யர் துருக்கியரால் அழிக்கப்பட்டு வரும் இந்து மதத்தையும் கோயில்களையும் காக்க ஹரிஹர புக்கர் சகோதரர்களை அரசராக்கினார். இந்த நகரம் ஜெயக்கொடியை எட்டும் என்று பெயரிலேயே விஜயநகரம் என்ற பெயரை பெற்றது.
ஹரிஹர புக்கர் சகோதரர்கள் இந்த இராஜ்யம் குரு வித்யாரண்யருக்கே சொந்தமானது என்று கருதி வித்யாநகர சாம்ராஜ்யம் என்று பெயர் வைத்ததாகவும் அது மருவி விஜயநகரமாயிற்று என்றும் கூறுவர்.
ஹரிஹர-புக்க சகோதரர்களை பட்டாபிஷேகம் செய்து வைத்த இடம் தான் ஹம்பி. இராமாயணத்தில் வரும் பம்பா ஸரஸ் என்ற கிஷ்கிந்தையை சார்ந்த பகுதி. தமிழில் ப என்பது கன்னடத்தில் ஹ என்று வரும். அதனால் பம்பா என்று ஹம்பா என்றாகி ஹம்பி என்று மாறிற்று என்றும் கூறுவர்.
வெங்கடகிரி : இந்த ஊர் முதலில் காளி மில்லி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. விஜயநகரத்திற்குற்பட்ட கோபுரி பாளையக்காரர்களால் ஆளப்பட்ட இந்நகரை விஜயநகர அரவீடு வம்சத்தை சேர்ந்த இரண்டாம் பெத்த வெங்கடபதி ராயரின் உறவினரான வெங்கடாத்ரி நாயுடுவால் தோற்கடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதனால் ஊருக்கு வெங்கடகிரி என்ற பெயர் வந்தது.
புட்டபர்த்தி : இதன் பழைய பெயர் கொல்லப்பள்ளி. அதாவது பசுக்கள் மற்றும் மாடு மேய்ப்பவர்கள் நிறைந்த கிராமம் என்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டது. ஒரு பசு மேய்ச்சலுக்கு சென்று திரும்பும்போது பால்மடி காலியாக இருந்ததை கண்ட மாடு மேய்ப்பவர் மாட்டை பின்தொடர்ந்து சென்று மலையில் ஏறி பார்த்த போது புற்றிலிருந்து ஒரு நாகப்பாம்பு வந்து பசுவின் மடியிலிருந்து பால் குடித்து சென்றது. கோபமடைந்த மாடு மேய்ப்பவர் பாம்பின் மீது கல்லெறிந்து கொன்றார். அதிலிருந்து இந்த ஊரில் எறும்பு குன்றுகள் எல்லா இடத்திலும் எறும்பு குன்றுகள் தோன்றியதால் புட்டு வர்த்தினி என்று கிராமத்திற்கு பெயர் வந்தது. அதாவது எறும்பு மலைகுன்றுகள் நிறைந்த கிராமம். பின்னர் ஊரின் பெயர் மருவி புட்டபர்த்தி என்றானது.
அமலாபுரம் : அமலன் என்பது விஷ்ணுவின் பெயர். இங்கு விஷ்ணுவின் பழங்கால கோயில் இருப்பதால் இந்த பெயர் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுவர்.
கடப்பா : இந்த நகரம் நல்லமலா மற்றும் பால்கொண்டா மலைகளால் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளது. திருமலையின் மேற்கில் இருந்து மலைக்கு செல்லும் நுழைவாயில் என்பதால் இந்த நகரம் கடபா (வாசல்) என்று பெயர் வந்தது.
அஹோபிலம் : எட்டாம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இந்த நகரை "சிங்கவேள் குன்றம்" என்று குறிப்பிட்டுள்ளார். அஹோ என்றால் சிங்கம் என்றும் பிலம் என்றால் குகை என்றும் அர்த்தம். சிங்கம் வெளிப்பட்ட மலைபிளவு, சிங்கத்தின் குகை என்றும் கூறலாம்.
தேவர்கள் நரசிம்மரின் பலத்தை கண்டு வியந்து "அஹோபலம்" என்று பாராட்டியதால் இப்பெயர் வந்தது என்று கோயில் ஸ்தல புராணம் கூறுகிறது.
இங்குள்ள குகைகளில் நரசிம்மர் தனது அவதாரத்தில் கருடனுக்கு தோன்றி காட்சியளித்ததால் சிங்ககுகை என்று பொருள்படி அஹோபிலம் என்ற பெயர் வந்தது என்றும் கூறுவர்.
இராஜமன்றி : இந்த ஊர் முன்பு இராசமகேந்திரி என்றும் இராசமகேந்திரவரம் என்றும் அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் மருவி இராஜமன்றி என்றாகியது.
ஶ்ரீகூர்மம் : ஸ்வேதபுரத்து அரசர் ஸ்வேதனின் மனைவியான விஷ்ணு ப்ரியா திருமாலின் பக்தை. ஏகாதசி தினத்தில் பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டு இருந்த போது மன்னர் அவளை காதலுடன் நோக்க கூர்மாவதார தினம் புனிதமான நாள் என்பதை அதை தவிர்க்க இறைவனை வேண்ட தம்பதியரிடையே ஒரு நதி பிரவாகமாக ஒடியது. அதை கண்டு திடுக்கிட்டு மன்னன் இந்த நதியை கடக்க ஒரு கூர்மமாக உதவ வேண்டும் என்று வேண்ட திருமாலும் கூர்மமாக மாறி நதியில் மிதந்து வர மன்னனுக்கு ஞானோதயம் பிறந்தது. அந்த அவதார திருவுருவிலையே திருமாலுக்கு ஒரு ஆலயம் கட்டினார். அந்த நதி சுருங்கி ஸ்வேத புஷ்கரணியாயிற்று. ஸ்வேதபுரம் அதனால் ஶ்ரீகூர்மம் என்ற பெயரை பெற்றது.

Comments
Post a Comment