7) கேரளா

 

கேரளா, மலை நாடு என்று அழைக்கப்படும். கேரளா என்ற சொல் சேரளம் (மலைச் சரிவு) என்ற சொல்லிலிருந்து தோன்றியது என்றும் சேர நாடு என்ற சொல்லில் இருந்து சேரலம் என்பது மருவி கேரளா என்ற சொல் உருவானது என்றும் கூறுவர். பரசுராமர் கடலில் இருந்து நிலத்தை மீட்டார் என்றும் அதனால் செர்னா - ஆலம் (சேர்க்கப்பட்ட நிலம்) என்றும் அழைக்கப்பட்டு கேரளா என்றாகி கேரளா என்று கூறுகின்றனர். சில வரலாற்றாளர்கள் கேரா என்பதற்கு தேங்காய் என்றும் இன்று கேரளா முழுவதும் பரவலாக தென்னை மரங்கள் வியாபித்து இருந்ததால் கேரளா என்று பெயர் வந்தது என்று கூறுகின்றனர். இன்றைய கேரளா பகுதி மக்கள் மலையாளிகள் என்று சொல்லால் அழைக்கப்படுகிறார்கள். மலையாளிகள் என்பதற்கு மலையில் வாழ்பவர்கள் என்ற பொருள்.


திருவனந்தபுரம் : திரு+அனந்தன்+புரம் இந்த சொற்களின் இணைப்பே திருவனந்தபுரம். ஆனந்தன் என்ற பாம்பின் மேல் பள்ளி கொண்ட திருமாலின் கோயிலில் உள்ள ஊர் என்று அர்த்தம். இங்குள்ள பத்மநாபா சுவாமி திருக்கோயிலின் பெயராக ஊருக்கும் திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது.

வர்கலா : புராணத்தில் கூறியபடி நாரத முனிவரை 9 பிரஜாபதிகள் சந்தித்து தங்களது பாவங்களை தீர்க்க வழி கேட்க அவர் தனது வால்கலத்தை வீசி எறிந்த இடத்தின் பெயர் வால் கலத்திலிருந்து வர்கலா என்று பெயர் மாறியது. வால்கலம் என்பது மரப்பட்டையால் அணியும் ஒரு வகை அஸ்திரம்.

பாண்டிய மன்னனின் பாவங்களிலிருந்து விடுபட அவரது கனவில் பிரம்மதேவன் ஒரு கோயிலை கட்ட பணித்த இடமே வர்கலா. இங்கு திருவிதாங்கூர் மன்னர் இந்த ஊரின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்காக உதய மார்த்தாண்ட புரம் என்ற பெயரில் கூட அழைக்கப்பட்டது.

கோழிக்கோடு : முன்பு கல்லிக்கோட்டை என்ற பெயரில் தற்போது கோழிக்கோடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கோயில் கோட்டை என்று அழைக்கப்பட்டது தான் மருவி கோழிக்கோடு என்றானதாக கூறுவர். முன்பு சுள்ளிக்காடு என்ற பெயரால் அழைக்கப்பட்டது. 

கொச்சி : கோச் & ஆழி என்ற இரு சொற்களின் கலவையே கொச்சி என்றானது. இதன் பொருள் சிறிய நதி வாய் (முகத்துவாரம்) என்பதாகும். ஆற்றுநீர் கடற்காய்களில் கலந்து கடலில் கலப்பதால் இந்த நகரத்தை கொச்சி என்று அழைத்தனர்.

எர்ணாகுளம் : சிவபெருமான் முன்பு ஏறியனார் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அதனால் தான் எர்ணாகுளம் என்ற ஊருக்கு பெயர் வந்தது.

திருச்சூர் : இவ்வூரில் தான் சிவனின் திருசிவப்பேரூர் சிவன் கோயில் உள்ளது. கோயில் பெயரே ஊருக்கும் மருவி திருச்சூர் என்று வந்ததாகக் கூறுகின்றனர். 

வைக்கம் : வைக்கத்தப்பன் குடிகொண்டுள்ள ஊர் என்பதால் ஊருக்கும் வைக்கம் என்ற பெயர் வந்தது.

கண்ணூர் : கண் மற்றும் தோல் சிகிச்சைக்கு முன்னர் இந்த ஊரில் உள்ள கன்ஹிராங்காடு வைத்தியநாதர் கோயிலில் உள்ள சிவபெருமான் சிலைக்கு பால் மற்றும் நீர் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது அவர்களின் உடல் நலனுக்கு நல்லது என்று வழிபட்டு செல்வார்கள். அதனாலலையே கண்+ஊர் என்ற பெயராக கண்ணூர் என்றாகியிருக்கலாம்.

ஆலப்புழா : அழகிய கால்வாய்கள், உப்புங்கழிகள், கடற்கரை மற்றும் தடாகங்களினால் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலான கர்சன் பிரபு இந்நகரை "கிழக்கின் வெனிஸ்" என்று அழைத்தார். ஆலப்புழா என்றால் கடலுக்கும் ஆற்றுக்கும் இடையில் உள்ள நிலம் என்ற பொருள். இந்த நகரின் புவியியல் அமைப்பே இந்த நகரத்தை ஆலப்புழா என்ற பெயரை சூட்டியுள்ளது.

கோட்டயம் : மீனச்சில் ஆற்றங்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள கோயிலை சுற்றி கோட்டையை (கோட்டா) கட்டி அதன் உள்ளே வீடுகளை அமைத்து குடியேறினர். திருவிதாங்கூர் மகாராஜா இந்த நகரை கைப்பற்றினார். கோட்டா என்ற பெயரிலையே அழைக்கப்பட்ட இந்த நகரம் ஆங்கிலேயரால் kotym என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி கோட்டயம் என்றானது.

மலப்புறம் : மல்லப்புறம் என்ற பெயர் மருவி மலப்புறம் என்றாகி இருக்கலாம் என்று கூறுகின்றனர். 

பாலக்காடு : இந்த ஊர் முன்பு பாலக்காட்டுச்சேரி என்ற பெயரிலும் வழங்கப்பட்டது. வறண்ட நிலத்தை பாலை என்ற பெயரில் வழங்குவார்கள். அதனால் பாலநிலம் என்று சொல்லி பாலக்காடு என்று மாறியிருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் ஏரிகளும் குளங்களும் நிறைந்த வளமான பாலக்காடு இருப்பதால் இந்த பெயர் காரணமல்ல என்று கூறுபவர்களும் உண்டு.

பாலமரங்கள் நிறைந்து காணப்பட்ட பகுதி என்பதால் பாலக்காடு என்ற பெயர் வந்தது என்றும் கூறுவர்.

பாறைகள் நிறைந்த காணப்பட்டதால் பாறை+காடு என்ற பெயர் மருவி பாலக்காடு என்று ஆகியிருக்கலாம் என்று கூறுபவர்களும் உண்டு. 

காசர்கோடு : கன்ஹிராகோடு (கன்ஹிரா மரங்களின் நிலம்) என்ற பொருளில் அழைக்கப்படும் காசர்கோடு என்ற பெயர் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

கொல்லம் : முன்பு தேசிங்க நாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கொல்லம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் மிளகு என்பதற்கு பொருள். அதனால் மிளகு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தலைசிறந்து விளங்கியதால் அந்த பெயர் நிலைத்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

கோயிலகம் (அரண்மனை) இல்லம் (பிராமணர் வீடு) இவற்றின் கலவையில் கோயிலம் என்ற பெயர் மருவி கொல்லம் என்று பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.

கொல்லம் என்ற பெயர் சீன மொழியின் வார்த்தையான கோசலம் என்ற சொல்லிலிருந்து வந்ததது என்ற மிகப்பெரிய சந்தை என்றும் கூறுகின்றனர்.

தலச்சேரி : இந்த ஊரின் பழைய பெயர் ஸ்வேதாரண்யபுரா என்ற பண்டைய சமஸ்கிருத இலக்கியங்களில் இருந்து தெரியவருகின்றது. திராவிட மொழிகளின் படி தல என்றால் தலை என்றும் சேரி என்றும் குடியிருப்பு என்றும் பொருளில் குடியிருப்புகளின் தொடக்க இடம் அல்லது குடியேற்றத்தின் தலைவர் என்ற பொருளில் வரும்.

தலக்கத்தே என்றால் மேல் அல்லது வடக்கு என்ற பொருளில் தலக்கத்தே சேரி என்ற வார்த்தையில் மருவி இருக்கலாம் என்றும் கூறுவர்.

பூவார் : பூக்களால் ஆன ஆறு என்ற பொருளில் இந்த ஊருக்கு பூவார் என்ற பெயர் வந்தது.

நெய்யாட்டிங்கரா : நெய்யாற்றின் தரைப்பகுதியில் திருவனந்தபுரம் நகரில் இருந்து 20 கி.மீ. அது மருவி நெய்யாட்டிங்கரா என்ற பெயரில்.

மூணார் : மூன்று ஆறுகளின் சங்கமத்தினால் இந்த ஊருக்கு மூணாறு என்று பெயர் வந்தது.

இடுக்கி : இடுக்கி என்ற பெயர் இடுக்கு என்ற வார்த்தையில் இருந்து வந்தது. பெரிய ஆறான பெரியாறு குறவன் மற்றும் குறத்தி என்ற இரு மலைகளுக்கு இடையே உருவான இடுக்கி பள்ளத்தாக்கு வழியாக பாய்கிறது. அதனால் ஊருக்கும் இடுக்கி என்ற பெயர் ஏற்பட்டு இருக்கலாம். 

தேவிகுளம் : இங்குள்ள குளத்தில் சீதாதேவி குளித்த காரணத்தால் அந்த குளத்திற்கு "சீதாதேவி குளம்" என்று கூறப்படுகிறது. குளத்தின் பெயரால் ஊருக்கும் தேவிகுளம் என்ற பெயர் ஏற்பட்டது.

பீர்மேடு : பேரா மரங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் "பீருமேடு" என்ற பெயர் வந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். 

கொய்யா மரங்கள் இருந்ததால் "பேரமேடு" என்றழைக்கப்பட்டு "பீர்மேடு" என்றானது என்றும் கூறுவர்.

சூபி துறவியான பீர் முகமதுவின் பெயரால் "ஹில் ஆஃப் தி பீர்" என்றழைக்கப்பட்டு பீர்மேடு என்றானது என்றும் கூறுவர்.

கொடுங்கல்லூர் :. இது முன்பு முசிறி, மகோதயபுரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட சேரர்களின் தலைநகரங்களுள் ஒன்று. கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் இமயமலையில் இருந்து கல் எடுத்து வந்து கோயில் கட்டியதால் பெரிய கல்லின் காரணமாக கோட்டம்+கல்+ஊர் என்று மருவி கொடுங்கல்லூர் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

கொற்றம்+கோல்+ஊர் (நல்லாட்சியின் நகரம்)என்ற பெயரில் கொடுங்கல்லூர் என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.

காளி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஊர் என்பதால் கோட்டம்+காளி+ஊர் என்பது மருவி கொடுங்கல்லூர் என்று வந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

கோழிக்கோடு மற்றும் கொச்சி ராஜாக்களுக்கு இடையே நடந்த போரால் கொடும்+கொலை+ஊர் என்பது இரத்தக்களரி ஊர் என்ற பொருளில் கொடுங்கல்லூர் என்று வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.

புனலூர் : புனல் என்பது தண்ணீர். தண்ணீர் ஊர் என்பதால் புனலூர் என்ற பெயர் வந்தது

குண்டடம் : இங்கு மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இந்து வனம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இங்கு விடங்கி முனிவர் தவம் செய்து வந்தார். சீசகன் என்ற அசுரன் வந்து கண்ணில் படுவோரை அடித்தி துரத்தி அந்த இடத்தின் அமைதியை கெடுத்தான். முனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி கும்பிட அவர் கால பைரவர மூர்த்திகளுக்கு ஒருவரான வடுக பைரவரை அனுப்பி வைத்தார். அவர் தொல்லை கொடுத்து வந்த சீசகன் என்ற அசுரனை கொன்றார். அசுரனை கொன்ற இடம் என்பதால் குண்டடம் என்று பெயர் வந்ததாக கூறுகின்றனர்.

அஞ்ஞாத வாசத்தின் போது திரவுபதியின் மீது ஆசைப்பட்டு அவளை அடைய முயன்ற அரக்கன் ஒருவனை பீமன் அடித்து கொன்ற இடம் என்பதால் குண்டடம் என்ற பெயர் வந்தது என்றும் கூறுவர்.

குருவாயூர் : இந்த ஊரில் உள்ள குருவாயூரப்பன் குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டதால் ஊருக்கு குரு+வாயு+ஊர் என்பது குருவாயூர் என்று குறிப்பிடப்படுகிறது.

வயநாடு : முன்பு இது மாயாசேத்திரம் என்று அழைக்கப்பட்டது. வயல்களும் வயல் சூழ்ந்த இடமாக இருப்பதால் வயல்+நாடு(ஊர்) என்பது வயநாடு என்று அழைக்கப்படும்.

தேக்கடி : தேக்கடி என்ற சொல் இங்குள்ள மிகுந்த விளைந்த தேக்கு மரங்களின் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

சுல்தான் பத்தேரி : இந்த ஊர் முன்பு கணபதி வட்டம் என்று அழைக்கப்பட்டது. போர்த்துகீசிய மொழியில் இருந்து பத்தேறிய (Batteria) என்ற சொல்லில் இருந்து உருவானது. இங்கு திப்பு சுல்தான் தனது ஆயுத கிடங்கை அமைத்த காரணத்தால் சுல்தான்ஸ் பாட்டரி என்று அழைக்கப்பட்டு சுல்தான் பத்தேரி என்று பெயர் மாறிற்று.

கொட்டாரக்கரா : கொட்டாரம் என்றால் அரண்மணை என்ற பொருள். காரா என்றால் நிலம் என்ற பொருள். இங்கு வரிசையாக அரண்மனைகள் இருந்த காரணத்தால் அரண்மனைகளின் நிலம் என்ற பொருளில் கொட்டாரக்கரா என்று அழைக்கப்பட்டது.

முன்பு ஒரு காலத்தில் அரசரின் கோட்டை இருந்ததால் கொட்டாரம் அக்கரை என்று அழைக்கப்பட்டது மருவி கொட்டாரக்கரா என்றானது என்றும் கூறுவர்.

கவியூர் : நிரம்பி வழியும் நீர் என்ற பொருளில் கவி+ஊர் என்பது கவியூர் என்றானது என்று கூறுகின்றனர்.

கபி என்றால் குரங்கு என்றால் அர்த்தம். அனுமன் பிரசன்னம் என்பதற்கான பொருளில் கபியூர் என்பது மருவி கவியூர் என்றானது என்றும் கூறுகின்றனர்.

சமணர்கள் குகை கோயில்கள் அமைத்து தங்கினர். கபி என்றால் பழைய கன்னடத்தில் குகை என்ற பொருளால் கபியூர் மருவி கவியூர் என்றாகியிருக்கலாம் என்று கூறுவர்.

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து