6) திருச்சி
திருச்சி : சிரா என்ற சமணத் துறவி இங்குள்ள பாறையில் தவம் செய்த காரணத்தால் சிராப்பள்ளி பெயர் வந்ததாகக் கூறுவர்.
முன்பு திருசிராய்பள்ளி என்று அழைக்கப்பட்டது. சிராய் என்றால் பாறை என்றும் பள்ளி என்ற பொருளால் பாறை மீது அமைந்துள்ள கோயில் மலைக்கோட்டை கோயிலின் காரணமாக வந்த பெயரான திருசிராப்பள்ளி என்ற பெயர் மருவி திருச்சிராப்பள்ளி என்றானது. பேச்சு வழக்கில் திருச்சி என்றும் தற்போது அழைக்கின்றனர்.
மேலும் திரிசரன் என்ற அரக்கன் சிவனை வழிபட்டு வரம் பெற்ற காரணத்தால் திரிசரன்பள்ளி என்ற பெயரால் அழைக்கப்பட்டு மருவி பின்னாளில் திருச்சிராப்பள்ளி என்று கூறுபவர்.
தஞ்சாவூர் : குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த நிலமென்ற பெயரில் தண்+செய் என்ற பொருளில் தஞ்சை என்ற பெயர் மருவி தஞ்சை என்றாயிருக்கலாம் என்று கூறுவர்.
எட்டாம் நாட்டில் வாழ்ந்த தனஞ்செய முத்தரையர் என்ற அரசரின் பெயரால் தனஞ்செய்+ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.
சிதம்பரம் : இதன் பழைய பெயர் பெரும்பற்றப்புலியூர் என்பதாகும். சித் என்றால் ஞானம் ஆம்பரம் என்றால் ஆகாயம் என்ற பொருள். இங்கு வியாக்கிரபாதர் தவம் செய்து ஞானம் பெற்ற இடம் என்பதால் சிதம்பரம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.
சிற்றம்பலம் என்ற பெயர் மருவி சிதம்பரம் ஆனதாகவும் கூறுவர்.
தில்லை மரங்கள் நிறைந்த காட்டுபகுதியாக இருந்ததால் தில்லை அம்பலம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுபவர்.
கும்பகோணம் : அந்த காலத்தில் இந்த ஊர் குடந்தை மற்றும் குடமூக்கு என்ற பெயரால் அழைக்கப்பட்டது. புராண கதையின் படி அமிர்தம் இருந்த குடத்தின் மூக்கு பகுதி வழியே கீழே வாழ்ந்து பரவிய ஊர் என்ற பெயரால் குடமூக்கு என்று அழைக்கப்பட்டு கும்பகோணம் என்று கூறுபவர்.
ஊழிக்காலத்தில் பிரம்மதேவன் அனைத்து ஜூவராசிகளின் வித்துக்களையும் ஒரு குடத்தில் இட்டு வெள்ளத்தில் மிதக்க விட்டு வெள்ளம் வடிந்த சமயத்தில் அந்த கும்பம் கோணலாக தரைதட்டி நின்றதாம். அந்த நேரத்தில் சிவபெருமான் அம்பெய்து கும்பத்திலிருந்து ஜூவராசிகள் வெளிப்பட வைத்தார். கும்பம் கோணிய தலம் என்ற பெயரில் கும்பகோணம் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.
மயிலாடுதுறை : இந்த ஊர் முன்பு மாயவரம், மாயூரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. மயில்கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என்று பெயர் வந்தது என்பர். வட மொழியிவ் மயூரம் என்பதற்கு மயில் என்ற பொருள் மாயவரம், மாயூரம் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டது.
பார்வதி தேவியார் மயிலாக உருவெடுத்து இறைவனை ஆடி பாடி காவிரி ஆற்றுத்துறையில் வணங்கியதால் இந்த ஊருக்கு மயிலாடுதுறை என்று பெயர் வந்தது என்றும் கூறுவர்.
திருவாரூர் : திருமகள் இவ்வூரில் உள்ள வன்மீக நாதரை வணங்கி வழிபட்டு வரம் பெற்று திருமாலை திருமணம் செய்ததால் இந்த ஊருக்கு கமலாலயம் என்றும் திருவாவூர் (திரு - திருமகள் ஆர் - பூமாதேவி பூஜித்தது) என்றும் பெயர் வந்ததாக கூறுவர்.
இந்த ஊரில் கோயில் கொண்டுள்ள தியாகராஜர் இன்று 6 தலங்களில் கோயில் கொண்டுள்ளார். முதலில் ஆரூர் என்று பெயரால் அழைக்கப்பட்ட ஊர் பின்னால் கோயில் கொண்டுள்ள காரணத்தால் திரு அடைமொழியுடன் திரு+ஆரூர் என்று வழங்கி மருவி திருவாரூர் என்று கூறுபவர்.
அரித்துவார மங்கலம் : யார் பெரியவர் என்ற போட்டியில் ஹரி சிவனின் பாதத்தை காண வராஹ அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சென்றும் காணமுடியாமல் திரும்பினார். அந்த பாதாள துவாரம் இங்குள்ள பாதாளேஸ்வரர் கோயிலில் உள்ளது. இதனால் இந்த ஊருக்கு அரித்துவார மங்கலம் என்ற பெயர் வந்தது.
நாகூர் : நாவல் மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் ஒருகாலத்தில் நாவல் காடு என்று அழைக்கப்பட்டது. அது மருவி நாகூர் என்றானது என்று கூறுவர்.
முன்பு நாகப்பாம்பு நிறைந்த ஊர் என்பதால் நாகம்+ஊர் என்பது நாகவூர் என்று அழைக்கப்பட்டு மருவி நாகூர் என்றானது என்பர்.
நாக வணக்கம் கொண்டிருந்த நாகர் மக்கள் வாழ்ந்த காரணத்தால் நாகூர் என்ற பெயர் வந்தது என்று கூறுவர்.
கூர்மையான நா வன்மை படைத்த புலவர் பெருமக்கள் வாழ்ந்த ஊர் என்பதால் நாகூர் என்று பெயர் வந்தது என்று கூறுவர்.
இந்த ஊரில் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதற்கு இன்னொரு பெயர் நாக மரம் என்பதாகும். அதனால் நாகவூர் என்ற பெயர் மருவி நாகூர் என்றானது என்றும் கூறுகின்றனர்.
நாகப்பட்டினம் : நாகர் மக்கள் வாழ்ந்ததால் இந்த ஊருக்கு இந்த பெயர் வந்தது என்று கூறுவர். இந்த ஊரின் பழைய பெயர் படரிதித்த. இதை நாகநாடு என்று புத்த மத இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழ நாட்டின் பெருந்துறைமுக பட்டினம். நாவாய்கள் (கப்பல்கள்) கட்டும் பட்டினம் என்பதால் நாவல் பட்டினம் என்ற பெயர் மருவி நாகப்பட்டினம் என்ற பெயர் கூட ஏற்பட்டு இருக்கலாம்.
வேதாரண்யம் : வேதாரண்யம் ஊரின் பழைய பெயர் திருமறைக்காடு. இதற்கு வேதவனம், மறைவனம், மறைக்காடு என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டது.
மறை என்றால் சிறந்த இலக்கியத்தைக் குறிக்கும் சொல் என்பதால் தான் திருக்குறளை உலகப் பொது மறைநூல் என்று அழைக்கிறோம் என்றும் இன்னொரு சாரார் மறை என்பதற்கு வேதம் என்ற பொருளில் வேத அந்தணர்களின் இடமான காரணத்தால் மறைக்காடு என்று பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். நால்வகை வேதங்களும் இறைவனை வழிபட்டு மரம் செடி கொடிகளாக இருப்பதாகவும் அதனால் திருமறைக்காடு என்றும் பெயர் வருமாறு வடமொழியில் வேத -மறை ஆரண்யம் - காடு என்ற பொருளில் வேதாரண்யமாக ஊர் பெயர் மாறிற்று என்று கூறுவர்.
மரை என்பதற்கு மான் என்ற பொருள். இங்கும் அரிய வகை மான்கள் இருப்பதால் மரைக்காடு என்ற பெயர் திருமறைக்காடு என்று மருவியிருக்கலாம் என்றும் கூறுவர்.
பெரம்பலூர் : இவ்வூரில் பிரம்பு மரங்கள் அதிகமாக இருந்ததால் பிரம்பு சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்பட்டதால் இந்த ஊருக்கு பிரம்பலூர் என்ற பெயர் அழைக்கப்பட்டு மருவி பெரம்பலூர் என்று கூறுகின்றனர்.
அரியலூர் : அரி என்றால் விஷ்ணு, இல் என்றால் உறைவிடம், ஊர்-பகுதி என்பதால் விஷ்ணு உறைவிடம் கொண்ட ஊர் என்பதால் அரியிலூர் என்ற பெயர் மருவி அரியலூர் என்றானது.
ஏரியல் என்றால் ஒருவகையான மதுபானம். இந்த ஊர்பகுதியில் கள் உற்பத்தி காரணமாக அரியலூர் என்று அழைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
இராமநாதபுரம் : வைகை ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்ததால் முகம் என பெயர் ஏற்பட்டது என்று கூறுவர்.
இராமநாதபுரத்தை சுற்றி நெல் விளையும் பகுதியாக இருந்ததால் நெல் கதிரடிக்கும் பொட்டல் பகுதிக்கு முகவை என்று பெயர் ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
இராமேஸ்வரம் : சிவ பக்தரான இராவணனை கொன்ற தோஷம் நீங்க இராமர் இங்கு ஈசனை பிரதிஷ்டை செய்து தன் பாவத்தை போக்கிய இடம் என்பதால் இராமர்+ஈஸ்வரம் என்ற பெயரில் இராமேஸ்வரம் என்று ஊர் பெயராயிற்று.
சிவகங்கை : சிவனது கங்கை என்ற பொருளால் சிவகங்கை என்று அழைக்கப்பட்டது என்று கூறுவர்.
இந்த ஊரை நிர்மாணிக்கும் போது சசிவர்ணதேவர் ஒரு செந்நிற வேங்கையை (புலி) வெட்டி வீழ்த்தியதால் செவ்வேங்கை என்று அழைக்கப்பட்ட சிவகங்கை என்றானது என்றும் கூறுவர்.
வேளாங்கண்ணி : கண்ணி என்பது அழகிய விழிகள் கொண்ட பெண் என்ற பொருள். தேவாரத்தில் இங்குள்ள இறைவியின் திருநாமப்பெயராக "வேலன கண்ணி" என்பதிலிருந்து ஊருக்கும் அதே பெயர் வந்தது. பின்னர் மருவி "வேளாங்கண்ணி" என்றானது. இந்த ஊரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் கருங்கண்ணி என்ற ஊரும் உண்டு.
அறந்தாங்கி : அரண்+தாங்கி என்ற பொருளில் அரந்தாங்கி என்று அழைக்கப்பட்ட ஊர் பெயர் மருவி தற்போது அறந்தாங்கி என்று அழைக்கப்படும்.
தொண்டி : தொண்டி என்பதற்கு ஓட்டை என்ற பொருள் உண்டு. கடலோரப் பகுதி இயற்கையாக உள்வாங்கி இருப்பதால் தொண்டி என்று அழைத்து அதுவே ஊர் பெயராயிற்று.
பூம்புகார்: காவிரி+பூம்(புகும்)+ஆர்(அழகிய)+பட்டினம் என்பது இதன் பெயர். காவிரியாறு இந்த நகரில் ஓடிவரும் அழகால் காவிரிபூம்பட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது. நாளடைவில் காவிரி மற்றும் பட்டினம் பெயர்கள் விடுபட்டு பூமார் என்று அழைக்கப்பட்டு மருவி பூம்புகார் என்றானது.
குளித்தலை : நன்செய் நிலங்களும் மலர் சோலைகளுமாய் இயற்கை வனம் கொழித்து இருந்த கடம்பவனத்திற்கு "குளிர் தண்டலை" என்ற பெயர் வந்தது. அதுவே பின் மருவி "குளித்தலை" என்றானது.
தேரழந்தூர் : அகத்தியர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கும் போது அதை அறியாத அரசரான ஊர்த்தவ ரதன் என்பவர் தேரை செலுத்த முற்பட்டபோது தேர் மண்ணில் அழுந்தி நின்றதால் "தேரழுந்தூர்" என்ற பெயர் வந்தது.
காளையார்கோவில் : இந்த ஊரின் பழைய பெயர் கானப்பேர். புறநானூற்று பாடல்களில் கானப்பேர் எழுந்த உக்கிரபெருவழுதி என்ற ஒரு பாண்டிய மன்னன் இந்த ஊரை வென்றதால் ஊரின் பெயர் அவருக்கு ஏற்பட்டது. கி.பி.9 ஆம் ஆண்டு சுந்தர மூர்த்தி நாயனார் இறைவனை காளையாக உருவகப்படுத்தி பாட இந்த கோயிலுக்கு காளையார்கோவில் என்று ஏற்பட்ட பெயரே ஊருக்கும் மாறியது.
உசிலம்பட்டி : அந்த காலத்தில் சோப்புக்கு பதிலாக அரப்பு பொடியை தேய்த்து குளிப்பது வழக்கம். அந்த அரப்பு மரமான உசிலை மரத்தின் காய்களில் இருந்து தான் அரப்பு பொடியை தயாரிப்பார்கள். அதனால் உசிலை மரங்கள் அதிகமாக இருந்ததால் இந்த ஊருக்கு உசிலம்பட்டி என்று பெயர் வந்தது.
மானாமதுரை : இராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்க இராம லெட்சுமணர்கள் வானர வீரர்களுடன் இலங்கைக்கு செல்லும் வழியில் இந்த ஊரில் தான் தங்கி சென்றனராம். அதனால் வானரவீர மதுரை என்றழைக்கப்பட்ட இந்த ஊர் பெயர் மருவி மானாமதுரை என்றானது.
மீன்மிசல் : மிசல் என்ற சொல்லுக்கு வாழும் பகுதி என்பது அர்த்தம். மீன்+மிசல் என்பது மீன்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் இந்தப் பெயர் வந்தது என்று கூறுவர்.
மீன்கள் மீசை மீன்கள் என்ற வகை உண்டு. அதாவது விரால் மீன்கள் என்றும் கெளுத்தி மீன்கள் என்றும் சொல்லுவர். அதன் முகத்தில் இரு மீசைகள் இருப்பதால் சுலபமாக தப்பித்துக் கொள்ளும். அந்த மீசை மீன்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதால் மீன்மிசல் என்று பெயர் மருவிற்று என்றும் கூறுவர்.
திருவையாறு : திருவையாறு என்பதை திரு+ஜந்து+ஆறு என்று பிரித்து கொள்ளவேண்டும். அதாவது காவிரி ஆறும் அதன் கிளை ஆறுகளான குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்று 5 நதிகளாக பிரிந்து செல்வதால் இந்த ஊருக்கு திருவையாறு என்று பெயர் வந்தது.
தாராசுரம் : தாரன் என்ற அசுரன் தேவர்களை அடக்கியாள சிவபெருமானை வழிபட்டு வந்தான். அவனும் அவனது 100 மனைவியரும் சிவனை வழிபட்டு சிவலோக பதவியை அடைந்தனர். அவர்கள் இறைவனை வழிபட்ட தலம் தான் தாராசுரம் என்று குறிப்பிடுகிறார்கள்.
சோழ மன்னன் இரண்டாம் இராஜராஜன் காலத்தில் அவரது அவைக்கள புலவரான ஒட்டக்கூத்தரால் இங்குள்ள இறைவனான ஐராவதேசுவரர் பாடப்பெற்றார். இராஜேசுவரம் என்று அழைக்கப்பட்ட ஊர் ராராசுரம் எனத் திரிந்து பின்னர் தாராசுரம் என்றானது என்றும் கூறுகின்றனர்.
நீடாமங்கலம் : நீடு + ஆம்+மங்கலம் என்று பிரித்து கொண்டால் மங்கலம் நீடித்து நிலைக்கும் ஊர் என்று பொருள்படும்.

Comments
Post a Comment