4) சேலம்



சேலம்:   சேலம் என்று சொன்னாலே இயற்கை மலைகளுக்கு நடுவே அமைந்த இடம் என்று தான் ஞாபகம் வரும். சைலம் என்றால் மலைகளுக்கு நடுவே அமைந்த நகரம் என்ற பொருளில் சைலம் என்பது திரிந்து சேலம் என்றானது என்று கூறுவர்.

சேலம் நெசவு சேலை நெய்தலுக்கு மிகவும் புகழ்பெற்றது. அதனால் சேலையூர் என்று பெயர் பெற்று மருவி சேலம் என்றாகி இருக்கலாம் என்றும் கூறுவர்.

இந்த பகுதி முன்பு சேரர்கள் வசம் இருந்ததால் சேரமண்டலம் என்று அழைக்கப்பட்டு பின்னர் சேரலம் என்றழைக்கப்பட்டதாகவும் பின்னர் இது மருவி சேலம் என்றானதாகவும் கூறுவர்.

ஏற்காடு:  ஏரியும் காடும் சேர்ந்த ஊர் என்பதால் ஏரிக்காடு என்ற பெயர் ஏற்காடு என்று மருவியதாக கூறுவர்.

கரூர்:  இதன் பழைய பெயர் வஞ்சி. சேரர்களின் தலைநகராக இருந்த பழமையான நகரம். தெய்வீக இசையை பாடிய கருவூர் தேவரின் பெயரில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். கருவூர் தேவர் தான் இராஜராஜ சோழனின் குருவாக இருந்தவர். இவர் பெயரால் இந்த ஊருக்கு கருவூர் என்று அழைக்கப்பட்டு மருவி கரூர் என்று மாற்றம் பெற்றிருக்கலாம் என்று கூறுவர்.

வந்தவாசி :வந்த என்ற சொல்லுக்கு நூறு என்ற பொருள் உண்டு. வாசி என்ற சொல்லுடன் சேர்த்தால் நூற்றவர் வாழும் ஊர் என்ற பொருளில் வந்தவாசி என்றானது. சமஸ்கிருதத்தில் வெள்ளிமலை என்று அழைக்கப்படுகிறது.

நெய்வேலி:  முன்பு இந்த ஊரில் மாட்டுபண்ணைகள் நிறைந்து காணப்பட்டதால் நெய் பொருட்கள் வியாபாரம் சிறந்து இருந்ததால் நெய்வேலி என்ற பெயர் வந்திருக்கலாம். 

திருப்பத்தூர் :  இந்த ஊர் மன்னர்கள் காலத்தில் பிரம்மபுரம், திருப்பேரூர்,திருவனபுரம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. விஜயநகர மன்னர்கள் காலத்தில் திருவனபுரம் என்ற பெயர் திருப்பத்தூர் என்றானதாக கூறுகின்றனர். இந்த ஊரின் 8 திசைகளில் பத்து திருக்கோயில்கள் இருந்த காரணத்தால் திரு+பத்து+ஊர் என்று திருப்பத்தூர் என்ற பெயர் வந்தது.

ஒட்டன்சத்திரம் :  ஒட்டு + அன் என்பது ஒட்டன் என்றானது. வெளியூர் பயணிகளை ஒட்டுதலுடன் அன்பாக வரவேற்று உபசரிக்கும் சத்திரங்களை கொண்ட ஊர் என்பதால் ஒட்டன்சத்திரம் என்று ஊருக்கு பெயர் வந்தது.

அந்நனேரி :  கோவலன் கண்ணகியை மதுரைக்கு கவுந்தியடிகள் அழைத்து வரும்போது வழியில் இருவர் "யார் இவர்கள்?" என்று வினவ "இவர்கள் எம் மக்கள்" என்று கவுந்தியடிகள் பதிலுரைக்க அவர்கள்"உம் மக்கள் ஒருவரையொருவர் மணமுடிப்பாரோ" என்று கேலி செய்ய தன் வலிமையால் ஓராண்டு நரியாக போகுமாறு சாபமிடுகிறார். அந்த ஓராண்டு இவர்கள் காட்டில் அலைந்து திரிந்த இடத்திற்கு "அந்தநேரி " என்ற பெயர் வந்து மருவி "அந்தனேரி " என்று மாறிற்று.

கம்பம் :  விஜய நகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ஹரிஹர,புக்கரில் புக்கநாயக்கரின் மகனான கம்ப நாயக்கர் கி.பி.14ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட மன்னனை வென்று இங்கு கோட்டை கட்டி ஆட்சி செய்தார். அதனால் கம்பம் என்று பெயர் வந்ததாக கூறுகின்றனர்.

போடி நாயக்கனூர் :  இந்த ஊரின் ஆரம்பகால பெயர் தென்காசியம்பதி. கிருஷ்ண தேவராயரின் குறுநில மன்னரான திருமலை நாயக்கரின் கீழ் இருந்த ஜமீன்தார் போடைய நாயக்கரின் பெயரால் தான் இந்த ஊர் போடி நாயக்கனூர் என்ற பெயர் வந்ததாக கூறுவர்.

காட்டுபன்றி நகரத்தில் ஊடுருவி பண்ணைகளை அழித்ததால் அந்த காட்டுபன்றியை கொல்பவர் பெயரை அந்த ஊருக்கு வைப்பதாக திருவாங்கூர் ராஜா அறிவித்தார். அதன்படி காட்டுப்பன்றியை போடயநாயக்கர் கொன்றதால் இந்த ஊருக்கு போடிநாயக்கனூர் என்ற பெயர் வந்ததாக கூறுவர்.

நாமக்கல் :  இந்த ஊரின் பழைய பெயர் "ஆரைக்கல்" ஆகும். 65 மீட்டர் உயரமுள்ள ஒற்றை பாறை நகரின் நடுவில் இருந்த காரணத்தால் நாமகிரி என்று இந்த ஊருக்கு பெயர் வந்தது. பின்னர் இந்த பெயர் மருவி "நாமக்கல்" என்றானது.

எடப்பாடி :  இந்த ஊரின் பழைய பெயர் இடைப்பாடி. குறிஞ்சி நிலத்திற்கும் மருதம் நிலத்திற்கும் இடைப்பட்ட பகுதி என்ற பொருளால் இடைப்பாடி என்று அழைக்கப்பட்ட ஊர் மருவி தற்போது எடப்பாடி என்று அழைக்கப்படுகிறது.

பொய்மான் கரடு :  கரடு என்றால் குன்று. தூரத்தில் இருந்து பார்க்கும்போது மான் போலவே குன்று இருக்கும். பக்கத்தில் வந்து பார்த்தால் தான் அது மானில்லை என்று உண்மை புரியும். பொய் மான் போல காட்சியளிக்கும் குன்று என்பதால் பொய்மான் கரடு என்று இந்த ஊருக்கு பெயர் வந்தது.

தர்மபுரி :  சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்டது. இரும்புத்தாது பொருட்கள் நிறைந்த ஊர் என்பதால் இந்த பெயர் ஏற்பட்டது. பின்னர் தருமபுரி என்று பெயர் மாற்றம் பெற்றது. 

கிருஷ்ணகிரி :  இந்த ஊர் முற்காலத்தில் "எயில் நாடு" என்று அழைக்கப்பட்டு வந்தது. கிருஷ்ணா என்பதற்கு கருப்பு என்றும் "கிரி" என்பதற்கு "மலை" என்றும் பொருள். கறுப்பு கிரானைட் கற்கள் நிரம்பிய மலையாக இருந்ததால் இந்த ஊருக்கு கிருஷ்ணகிரி என்று பெயர் வந்தது.

ஓசூர் :  இந்த ஊர் முற்காலத்தில்"முரசு நாடு" என்று அழைக்கப்பட்டு வந்தது. ஹொச என்ற கன்னட சொல்லுக்கு புதிய என்று பொருள். அதனால் புதியதான இந்த ஊருக்கு ஹொசவூரு என்று பெயர் வந்தது. பின்னர் இது மருவி ஹொசூரு என்றும் ஹொசூர் என்று மருவி கடைசியில் ஓசூர் என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது.

வேலூர் :  இந்த ஊரை ஆண்ட முருக பக்தனான நல்லியக்கோடன் மீது பகை மன்னர்கள் படையெடுத்து வர முருகப்பெருமான் அவரது கனவில் வந்து யாமிருக்க பயமேன். கேணியில் பூத்திருக்கும் தாமரை மலரை உனக்கு ஆயுதம் என்று உரைக்க கேணியில் பூத்த தாமரை மலரை பறித்து எதிரிகள் மேல் எறிய அது வேலாக மாறி பகைவர்களை அழிக்க ஆரம்பிக்க பகைவர்கள் புறமுதுகிட்டு ஒடி ஒளிந்தனர். வேல் எறிந்து வென்ற ஊர் என்பதால் வேல்+ஊர் என்ற பெயரில் வேலூர் என்ற பெயர் வந்ததாக கூறுவர். 

வேல மரங்களால் சூழப்பட்ட ஊர் என்பதால் வேலூர் என்றானது என்றும் கூறுவர்.

ஆத்தூர் :  ஆறு+ஊர் என்பது ஆற்றூர் என்பது மருவி ஆத்தூர் ஆனதாக கூறுவர். ஆற்றங்கரையின் அமைந்திருப்பதால் ஆற்று+ஓரம்+ஊர் என்பது மருவி ஆத்தூர் ஆகியருக்கலாம் என்றும் கூறுவர்.

தாரமங்கலம் :  சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் இங்கு நடந்த போது திருமால் மணவிழாவை தாரை வார்த்து கொடுத்து நடத்தியதால் "தாராமங்கலம்" என்று பெயர் வந்ததாக கூறுகின்றனர்.

இத்தலத்தில் சூரியன் சந்திரனின் கதிர்கள் இத்தலத்தில் மாலை வேளையில் சிவலிங்கத்தின் மீது படும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் தாரகன்,தாரகாபதி என்ற வேறு பெயர்கள் உண்டு என்பதால் "தாராமங்கலம்" என்ற பெயர் உண்டானது என்றும் கூறுவர்.

சங்ககிரி :  இந்த ஊரிலுள்ள மலையானது சங்கு வடிவத்தில் அமைந்துள்ளதால் சங்கு+கிரி என்று சங்குகிரி என்று அழைக்கப்பட்டு மருவி சங்ககிரி என்றானது.

ஆரணி :  இந்த ஊரில் அத்தி மரங்கள் அணிஅணியாக வரிசையாக இருந்த காரணத்தால் ஆரணி என்ற பெயர் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

சமஸ்கிருதத்தில் ஆரண்யம் என்றால் காடு என்று பொருள். அடர்த்தியாக மரங்கள் நிறைந்து காடு போல இருந்ததால் ஆரண்யம் என்ற பெயர் மருவி ஆரணி என்று கூட வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.

ஆற்காடு :  இந்த ஊர் இராஜராஜ சோழன் காலத்தில் திருவழுந்தூர் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஆர் என்ற வகை மரங்கள் அடர்ந்து காடு போல காணப்பட்டதால் ஆர்+காடு என்ற பெயராக ஆற்காடு வந்தது எனவும் கூறுவர்.

ஆறு வகை மரங்கள் அடர்த்தியாக பாலாறும் பெண்ணையாறும் சங்கமிக்கும் இடத்தில் காணப்பட்டதால் ஆறு+காடு என்பது ஆற்காடு என வந்தது என்றும் கூறுவர்.

அத்தி மரங்கள் அதிகம் காணப்பட்டதால் ஆற்காடு என வழங்கப்பட்டதாகவும் கூறுவர்.

ஆறும் காடும் சங்கமிக்கும் இடம் என்பதால் ஆற்காடு என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்.

செஞ்சி :  சோழர்கள் காலத்தில் சிங்கபுரி மற்றும் சிங்கபுரி கூட்டம் என்ற பெயரால் அழைக்கப்பட்ட இவ்வூர் பின்னர் மருவி செஞ்சி என்றானது.

திருவண்ணாமலை :  அண்ணா என்றால் நெருங்கமுடியாத என்று பொருள். திருமால் வராக அவதாரம் எடுத்து சிவனின் அடியையும் பிரம்மா அன்னம் அவதாரம் எடுத்து சிவனின் முடியையும் காண முயன்று முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணா+மலை என்று பெயர் வந்தது. அத்துடன் திரு என்று உயர்பொருளுடன் திருஅண்ணாமலை என்பது மருவி திருவண்ணாமலை என்றானது.

ஆம்பூர் :  ஆம் என்னும் சொல்லுக்கு ஊற்றுநீர் என்று பொருள். ஊற்றுநீர் கசியும் ஊர் என்பதால் ஆம்பூர் என்று அழைக்கப்பட்டது. பழங்காலத்தில் இந்த ஊர் காட்டாம்பூர் என்று அழைக்கப்பட்டு கடாம்பூர் என்று மருவி பின்னர் ஆம்பூர் என்று மாறியதாக கூறுவர்.

வாணியம்பாடி :  வணிகன்பாடி (வணிகம்+பாடி). வணிகர்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு தங்கள் பொருட்களுடன் பல ஊர்களுக்கு பாடி வீரர்களுடன் (பாதுகாப்பு வீரர்கள்) சென்று வணிகம் செய்து வந்தனர். அதனால் இந்த ஊருக்கு வணிகன்பாடி என்று பெயர் வந்து மருவி வாணியம்பாடி என்றானது.

ராணிப்பேட்டை :  செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கு போரில் மாண்டவுடன் அவருடைய மனைவியான ராணிபாய் அவருடன் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தார். இந்த நிகழ்வை கண்டு மனம் கலங்கிய கர்நாடகா நவாப் ராணிபாயின் கற்புத்திறனை பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்ட நகருக்கு ராணிப்பேட்டை என்று பெயர் வந்தது.

ஊத்தங்கரை :  ஆரம்ப காலத்தில் இந்த ஊர் "கோவூர் நாடு" என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. ஊரின் பழைய பெயர் ஊர்கரை என்பதாகும். காலப்போக்கில் இந்த பெயர் மருவி ஊத்தங்கரை என்று பெயராக ஆனது.

அரூர் :  அரியூர் என்ற இந்த ஊரின் பழைய பெயரே மருவி அரூர் என்று அழைக்கப்படுகிறது.

செய்யாறு :  சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்திட வேண்டி சிவனை நோக்கி தவம் செய்ய அன்னை பார்வதி விரும்பினார். அதனால் தன் மகனான முருகனை அழைத்து ஒரு நதியை உருவாக்க கட்டளையிட அவர் தாயின் வாக்கை நிறைவேற்ற வேலை எடுத்து மலையை நோக்கி வீசினார். அந்த வேல் மலையை குடைந்து நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. தாயின் சொல்லுக்காக சேய் உருவாக்கிய ஆறு என்ற பொருளில் சேயாறு என்று அழைக்கப்பட்டது மருவி செய்யாறு என்றானது.

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து