2) திருநெல்வேலி
திருநெல்வேலி: திருநெல்வேலியின் பழைய பெயர் வேணுவனம். வேணு என்றால் மூங்கில். மூங்கில் காடுகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இந்த பெயர் வழங்கலாயிற்று. இங்கு பாண்டிய மன்னர் ராமபாண்டியன் ஆட்சி செய்யும் காலத்தில் வேதபட்டர் என்ற அந்தணர் வீடு வீடாக சென்று நெல் யாசகம் பெற்று தினமும் இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்து வந்தார். அவரின் பக்தியை அனைவரும் அறிய செய்ய இறைவன் முடிவெடுத்தார். அந்த நெல்லை காய வைத்த சமயத்தில் பெருமழை பெய்தது. அய்யோ இறைவனின் நெய்வேத்தியம் நெல் ஈரம் படக்கூடாதே என்ற பதறியடித்து வந்த வேத பட்டர் அந்த அதிசயத்தை கண்டு திகைத்து நின்றார். அவர் கொட்டி வைத்திருந்த இடத்தை தவிர மற்ற இடங்களில் தண்ணீர் நிறைந்தும் அணை போலவும் நெல் மணிகள் மேல் ஈரமே படாமலும் இருந்தது. அதிசயத்தை கண்ட அவர் மன்னரிடம் சொல்ல அவரும் அதிசயித்து நின்றார். நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் நெல்வேலி என்பதுடன் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி என்று அழைக்கப்படலாயிற்று. இறைவனுக்கு நெல்வேலி நாதர் என்ற பெயராக தற்போது நெல்லையப்பர் என்று வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை: பாளையங்கோட்டையின் பழைய பெயர் ஶ்ரீவல்லப சதுர்வேதி மங்கலம். ஶ்ரீ மாற வல்லப பாண்டியனால் உருவாக்கப்பட்ட ஊர் என்பதால் அவரின் பெயரிலையே வழங்கப்பட்டது.
பின்னர் பாளையன் என்பவரால் கோட்டை கட்டப்பட்டதால் பாளையன் கோட்டை என்று அழைக்கப்பட்டது அதுவே ஊர்பெயராயிற்று என்றும் கருத்துள்ளது. ஆனால் பெரும்பாலானோர் பாளையக்காரர்கள் கோட்டை கட்டியதால் பாளையங்கோட்டை என்று வந்தது என்று கூறுகின்றனர்.
முக்கூடல்: மூன்று நதிகளின் சங்கமம் என்பதால் முக்கூடல் என்ற பெயர் வந்ததாம். இந்த ஊரில் தாமிரபரணி, மணிமுத்தாறு மற்றும் கடநா நதி ஆகியவை சங்கமிக்கும் இடம் என்பதால் முக்கூடல் பெயர் வழங்கலாயிற்று
சீவலப்பேரி: பாண்டிய மன்னனான மாறவர்மன் ஶ்ரீவல்லபன் இந்த ஊரில் ஒரு பெரிய ஏரி கட்டினார். அது ஶ்ரீவல்லபன் பேரேரி என்று அழைக்கப்பட்டது. அதனால் ஊரின் பெயரும் சீவலப்பேரி என்று மாற்றம் பெற்றது
களக்காடு: கிளா என்ற ஒருவகை மரங்கள் அடங்கிய காட்டு பகுதியாக இருந்ததால் கிளாக்காடு என்று அழைக்கப்பட்டு மருவி களக்காடு என்றானது.
பொட்டல் புதூர்: காலியாக பொட்டலாக கிடந்த இடத்தில் உருவான புதிய ஊர் என்பதால் பொட்டல் புதூர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடியின் பழைய பெயர் "வைகுண்ட வளநாடு"என்பதாகும். திருமால் வராக அவதாரம் எடுத்து திருமால் தனது நாயகியுடன் இந்த ஊர் தலத்தில் அமர்ந்துள்ளார். அச்சம் ஏற்படுத்தக்கூடிய தனது உருவத்தை குறுக செய்து நிலைபெற்று இருப்பதால் திரு+குறு+குடி என்ற பெயரில் திருக்குறுங்குடி என்றானது.
பாபநாசம்: இராம பிரான் பாவத்தை போக்க இங்கு வந்ததால் பாபவிநாசம் என்று அழைக்கப்பட்டது பாபநாசம் என்று மருவியது. இங்குள்ள அருவியில் குளிப்பவர்களின் பாவங்கள் போக்குவதாக ஒரு ஐதீகம்.
ரெட்டியார் பட்டி: ரெட்டியார் இன மக்கள் பெரும்பான்மையாக வசித்த இடமாக இருந்ததால் ரெட்டியார் பட்டி என்ற பெயர் ஏற்பட்டது
தேவர்குளம்: தேவர் இன மக்கள் பெரும்பான்மையாக வசித்ததால் தேவர் குளம் என்று பெயர் வழங்கலாயிற்று
குற்றாலம்: குற்றாலநாதரும் குழலாள்மணி அம்மையும் வீற்றிருந்த காரணத்தால் இந்த ஊருக்கு குற்றாலம் என்று பெயர் வழங்கலாயிற்று.
செங்கோட்டை: செம்மையான கோட்டை என்ற பொருளில் செங்கோட்டை என்ற பெயர் வழங்கலாயிற்று.
தென்கரை & வடகரை:. ஆற்றின் கரையில் தெற்கு பகுதியில் அமைந்த ஊருக்கு தென்கரை என்றும் வடக்கு பகுதியில் அமைந்த ஊருக்கு வடகரை என்றும் பெயர் வழங்கப்பட்டது
பைம்பொழில்: இதன் பழைய பெயர் "வடவாரி நாடு" மற்றும் "காங்கேய குலகாலபுரம்" என்பதாகும். பசுமையான சோலைகள் நிரம்பிய பகுதி என்பதால் பைம் என்ற சொல்லுக்கு பசுமை என்றும் பொழில் என்பதற்கு பொழிவான அழகு என்ற பொருளில் ஊருக்கு பைம்பொழில் என்று பெயர் வழங்கலாயிற்று. பின்னர் மருவி பண்பொழில் என்று அழைக்கப்படுகிறது.
அம்மையப்பபுரம்: தாய் மற்றும் தந்தையாய் இறைவனே பாதுகாக்கும் பகுதி (அம்மை + அப்பா) என்பதால் அம்மையப்பபுரம் என்ற பெயர் வழங்கப்பட்டது.
வல்லநாடு: இதன் பழைய பெயர் "செயங்கொண்ட பாண்டியபுரம்" "செயங்கொண்ட பாண்டிய நல்லூர்" என்பதாக இருந்தது. பின்னர் ஶ்ரீவல்லப பாண்டிய தேவர் பெயரால் "வல்லன் நாடு" என்றாகி பின்னர் மருவி வல்லநாடு என்றாகியது.
கங்கைகொண்டான்: இதன் பழைய பெயர் "சீவல்லப மங்கலம்". பின்னர் "பாண்டிநாட்டு முடிகொண்ட சோழவள நாட்டு கீழ்கள குற்றத்து கங்கைகொண்ட சோழசதுர்வேதி மங்கலம்" என்று அழைக்கப்பட்டது. இதன் படி பார்த்தால் கங்கை கொண்டான் என்ற பெயருடைய இராஜேந்திர சோழனின் ஆட்சிகாலத்தில் அவரது மகன் பாண்டிய நாட்டு மணிமுடி தாங்கி ஆட்சி புரிந்த சமயத்தில் பெயர் மாறியிருக்கலாம் என்று தோன்றுகிறது. பின்னர் கங்கைகொண்டான் என்ற பெயர் மட்டுமே இராஜேந்திர சோழனை நினைவுபடுத்தி இருந்திருக்கலாம்.
மானூர்: மானூரின் பழைய பெயர் "மானவன் நல்லூர்" என்பதாகும்.
சுத்தமல்லி: இதன் பழைய பெயர் "வீர விநோத சதுர்வேதி மங்கலம்" என்பதாகும்.
நெல்கட்டும்செவல்: நெல்கள் மணிமணியாக மிகுதியான விளைச்சலை கொடுத்த ஊரான செவல் என்பது நெல்கட்டும்செவல் என்று ஆனது.
அச்சன்புதூர்: தந்தை (அச்சன்) ஸ்தானத்தில் இருந்து ஊருக்கு நல்லது செய்த போர்வீரன் ஒருவரின் நினைவாக வைக்கப்பட்ட பெயர் அச்சன்புதூர்.
விஜயநாராயணம்: இதன் பழைய பெயர்கள் "ஜெயங்கொண்ட சோழவளநாடு" "இராஜராஜ சோழவளநாடு" மற்றும் "உத்தமசோழ வளநாடு" என்பதாகும். இதிலிருந்து இராஜராஜ சோழர் கி.பி.10ம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியன் அமரபுஜங்கனை வென்று இந்த பகுதிகளை தன் வசம் கொண்டு வந்தது தெரிகின்றது. ஜெயம் என்பது விஜயம் என்று மருவி வந்திருக்கலாம். நாராயணனை வழிபடுபவர்கள் அதிகமாக இருந்திருக்கலாம் என்பதால் நாராயணம் என்று பெயரும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
திருவேங்கட நாதபுரம்: இந்த ஊரின் பழைய பெயர் "அவனி நாராயண சதுர்வேதி மங்கலம்". திருமாலை வழிபடும் அந்தணர்களுக்கு அரசனால் வழங்கப்பட்ட நிலம் என்று அறிய முடிகிறது. இந்த ஊரில் உள்ள கோயில் மூலவரின் பெயரால் "திருவேங்கட நாதபுரம்" என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
குலசேகரப்பட்டினம்: முத்து குளித்தல் நடைபெற்ற இடமான இந்த ஊரில் வரிவசூல்/வாணிகம் காரணமாக ஏற்பட்ட ஊரான இது பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் பெயரை தாங்கி "குலசேகரப்பட்டினம்" என்றானது.
பத்தமடை: பத்தல்+மடை (பத்தல் என்றால் நீர் இறைக்கும் கருவி) என்ற பொருளில் இந்த ஊருக்கு பத்தமடை என்ற பெயர் ஏற்பட்டது. மூங்கில் பாய்கள் நூற்புக்கு பெயர் பெற்ற ஊர்.
இடிந்தகரை: முருகப்பெருமான் வள்ளியம்மையை குமரியிலிருந்து தூக்கிக்கொண்டு திருச்செந்தூர் செல்லும்போது இந்த இடத்தில் வந்தபோது காலை விடியல் ஏற்பட்டதால் "விடிந்தகரை" என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
சரளைகற்கள் நிறைந்த மேட்டுபகுதி அலைகளின் மோதலுக்கு தாக்குபிடிக்காமல் அடிக்கடி இடிந்து இடிந்து விழுந்ததால் "இடிந்தகரை" என்ற பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். ஆங்கிலேயர்கள் 18ம் நூற்றாண்டில் இதை "இரிஞ்சகரை" என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளனர்.
தூத்துக்குடி: ஆரம்பத்தில் "சோதிக்கரை" என்றும் "முத்துக்குளித்துறை" என்றும் 2000 வருடங்களுக்கு முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது. ஆங்கிலேயர்கள் வாயில் பெயர் நுழையாததால் தோத்துக்குரை என்று குறிப்பிட்டு அது தூத்துக்குடி என்று மருவி அழைக்கப்படுகிறது என்றும் ஆங்கிலத்தில் தூத்துக்குரின் (Tuticorin) என்றும் அழைக்கப்படுகிறது.
நீர் நிறைந்த இடத்தை தூர்த்து குடியிருப்பும் துறைமுகமும் ஏற்பட்டதால் தூர்த்துக்குடி என்ற பெயரில் தூத்துக்குடி என்றாகியதாகவும் சொல்லுகிறார்கள். நெல்லை வட்டார வழக்கில் தூத்து என்றால் தூர்த்து/பெருக்கு/சுத்தம் செய் என்ற பொருளில் உரைப்பார்கள்.அதனால் இந்த பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.
புளியங்குளம்: அழகிய நீர் நிறைந்த குளங்களால் நிரம்பிய ஊரின் குளக்கரைகளில் ஏராளமான புளியமரங்கள் நிறைந்து இருந்தன. புளியம் பழங்கள் நீர் நிறைந்த குளத்தில் பழுத்து விழுந்து புளியம் குழம்பு குளமாக காட்சியளித்ததால் இவ்வூருக்கு புளி+அம்+குளம் என்ற பெயரில் புளியங்குளம் என்ற பெயர் வழங்கலாயிற்று.
புதுக்கோட்டை: கி.பி.17ம் நூற்றாண்டில் சிவந்தெழுந்த பல்லவராயர் என்பவரது ஆட்சியில் "பல்லவராயன் சீமை" என்று அழைக்கப்பட்டது. பின்னர் ஊருக்கு புதியதாக கோட்டை கட்டி பெரிய நகராக உருவாக்கப்பட்டதால் புதிய கோட்டை என்ற பொருளில் "புதுக்கோட்டை" என்று வழங்கப்பட்டு அதுவே ஊர்பெயராயிற்று.
ஶ்ரீவைகுண்டம்: இந்த ஊரில் குடிகொண்டுள்ள இறைவனின் பெயரால் திருவைகுண்டம் என்ற பெயர் வந்தது.
அம்பாசமுத்திரம்: அம்பாள் பெயரில் அம்பா என்றும் கடல் என்பதற்கு சமுத்திரம் என்ற பெயரில் அம்பாள் குடிகொண்டுள்ள அழகிய கடல் என்ற பொருளில் "அம்பாசமுத்திரம்" என்ற பெயர் வந்தது.
தென்காசி: இறைவன் பாண்டிய மன்னனின் கனவில் வந்து காசிக்கு போகும் வழியிலேயே தனது பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பே மடிவதால் அவர்களின் பாவங்களை போக்குவதற்காக இங்கேயே காசி கோபுரத்தை கட்ட ஆணையிட்டார். அதன்படி காசி விஸ்வநாதர் ஆலயம் கட்டப்பட்டது. வடக்கே காசி என்பது போல இது தெற்கே காசி என்ற பொருளில் தென்காசி என்று அழைக்கப்படுகிறது.
கல்லிடைக்குறிச்சி: தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இந்த ஊரில் ஆறு ஓடும்போது சலசல என்று சரளைகல்லின் சத்தத்தை எழுப்பி ஓடுவதால் "கல்லிடைக்குறிச்சி" என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
அகத்திய பெருமான் சிவன் சக்தி திருமணத்தை காண பொதிகை மலைக்கு வரும்போது இந்த ஊரிலும் அவரின் திருமணத்தை பார்க்க முடிந்ததால் கல்யாணபுரி என்று அழைக்கப்பட்டதாகவும் பின்னர் மருவி கல்லிடைக்குறிச்சி என்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
குடியானவர்கள் சொல்லில் அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு ஊருக்கு நடுவே இருப்பதால் இரண்டு கற்களுக்கு நடுவே உள்ள குறிச்சி என்று பொருளில் கல்+இடை+குறிச்சி என்பதாக கல்லிடைக்குறிச்சி என்றானது என்றும் கூறுவர்.
சேரன்மகாதேவி: இந்த பகுதி முன்பு சேர மன்னனின் ஆட்சியில் இருந்தது. அவரின் மகளான மகாதேவியின் பெயரால் உருவாக்கப்பட்ட ஊர் என்பதால் சேரன்+மகாதேவி என்ற பொருளில் சேரன்மகாதேவி என்று பெயர் வழங்கலாயிற்று. வட்டார வழக்கில் சேர்மாதேவி என்றும் மக்கள் அழைப்பர்.
வள்ளியூர் : முருகப்பெருமானின் மனைவியான வள்ளி பிறந்த ஊர் என்பதால் இதற்கு வள்ளியூர் என்ற பெயர் வந்தது
நாகர்கோயில் : நாகர்கள் வணங்கிய நாகராஜா கோயில் இருந்த காரணத்தால் இந்த ஊருக்கு நாகர்கோயில் என்ற பெயர் வந்தது.
கன்னியாகுமரி : பழைய காலத்தில் வயல்களை நிறைய கொண்டிருந்தது. நாஞ்சில் என்பதற்கு வயலை உழ பயன்படும் கலப்பை என்று பொருள். அந்த காரணத்தால் நாஞ்சில் நாடு என்று வழங்கப்பட்டது. வேணாடு என்றும் வழங்கப்பட்டு வந்தது.
பார்வதி தேவி சிறு பெண்ணாக குமாரி பகவதி என்ற பெயரில் வழிப்பட்டு வந்த காரணத்தாலும் அவர் சிறு பெண்ணாக கன்னி பெண்ணாக இருந்த காரணத்தினால் இந்த ஊருக்கு கன்னியாகுமரி என்று பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
திங்கள்சந்தை : ஒவ்வொரு திங்கள் கிழமை தோறும் இந்த பகுதியில் சந்தை கூடியிருக்கலாம். அந்த காரணத்தால் திங்கள்சந்தை என்று பெயர் வந்திருக்கலாம்.
கிருஷ்ணன்கோயில் : இந்த ஊரில் உள்ள கிருஷ்ணன் கோயில் "தென் திசை குருவாயூர்" என்று அழைக்கப்படுகிறது. ஊரிலுள்ள கிருஷ்ணன் கோயிலின் காரணமாகவே ஊருக்கும் "கிருஷ்ணன் கோயில்" என்ற பெயர் வந்தது.
சுசீந்திரம் : சுசீ என்ற சொல்லுக்கு தூய்மை என்று பெயர். இந்திரன் இந்த ஊரில் தான் தூய்மை பெற்ற காரணத்தால் சுசீ+இந்திரம் என்ற பெயராக சுசீந்திரம் என்ற பெயர் நிலைத்தது.
பத்மநாபபுரம் :கல் குளம் என்பது இந்த ஊரின் பழைய பெயர். இந்த ஊரின் அரசன் திருவனந்தபுரம் பத்மநாபருக்கு தன்னையும் தன் நாட்டையும் அர்பணித்து தன்னை பத்மநாபதாசனாக அடையாளம் காட்டியதால் பத்மநாபபுரம் என்ற ஊருக்கு பெயர் வந்தது.
தக்கலை : பத்மநாபபுரம் ஊருக்கு "தெற்கு எல்லை"யாக இந்த ஊர் இருந்ததால் தெற்கு+எல்லை என்பது மருவி தக்கலை என்பது ஊர் பெயராயிற்று.

Comments
Post a Comment